அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் நீண்ட காலமாக பேசியும் பலன் இல்லை: விக்னேஸ்வரன்

viknswaranதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் இலங்கை அரசாங்கங்களுடன் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாகவும் பேசி வருகின்றோம். ஆனாலும், நடவடிக்கைகள் ஏதும் இன்னமும் எடுக்கப்படவில்லை என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எனினும், ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை மீதான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் சில நம்பிக்கையான மாற்றங்கள் இடம்பெறும் என்று தான் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு ‘வாழ்வின் ஒளியைத் தேடும் சிறுவர்களுக்கான ஒன்றியத்தின்’ ஏற்பாட்டில் யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக இன்று புதன்கிழமை காலை 11.00 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தங்களுடைய உறவினர்களை (அரசியல் கைதிகளை) விடுதலை செய்யுமாறு கோரும் மகஜரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்குமாறு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்து வழங்கினர். அந்தச் சந்தர்ப்பத்திலேயே முதலமைச்சர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

-http://www.puthinamnews.com

TAGS: