பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சூதாட்ட நகர்வுகள் ஆரம்பித்துவிட்டன. ரணில் விக்ரமசிங்க தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிப்பீடம் ஏறினால் இது தான் நடக்கும் என்பதை அடிக்கடி இவ்விடத்தில் சுட்டிக்காட்டியிருந்தோம்.
அது தற்பொழுது விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியிருக்கின்றது.
இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கு இருக்கும் உடனடித் தேவை சர்வதேச அழுத்தங்களை நீக்கி, இலங்கை மீது இருக்கும் பொருளாதார, மற்றும் போர்க்குற்ற விசாரணைகளை இல்லாது செய்தல் அல்லது கிடப்பில் போடல், இன்னொன்று பிற தரப்பின் மீது சுமத்தி பொறுப்புக் கூறுவதை நிறுத்தல் என்பதாக செய்வதே.
அதை நேர்த்தியாக செய்து கொண்டிருக்கின்றார் ரணில். நவீன மயப்படுத்தப்பட்ட பிலிப் குணவர்த்தன மைதானத்தை அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர்,
யுத்தம் தொடர்பில் நாம் பேசும் போது ஒன்றை மறந்துவிடக் கூடாது. அதற்கு முழுமையான பொறுப்புக்கூற வேண்டியது புலிகள் அமைப்புதான். பாரிய பொறுப்புக்களை புலிகளும் பிரபாகரனுமே ஏற்க வேண்டும்.
எனினும் பிரபாகரனோ அவரோடு இணைந்து செயற்பட்ட பெரும்பாலானோர் இப்போது உயிருடனில்லை. அவர்கள் உயிரோடிருந்திருந்தால் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர முடியும்.
இதனால் ஒரு தரப்பினருக்கு எதிராக மட்டும் வழக்குத் தொடருவதால் நாட்டில் தேசிய ஒற்றுமையைக் கட்டியெழுப்ப முடியுமா என்பதும் எம் முன் உள்ள கேள்வியாகும்.
நீதிமன்றத்திற்கிணங்கவே செயற்பட வேண்டியுள்ளது. தேவையான போது வழக்குத் தொடர வேண்டும். எனினும் எந்தத் தரப்புக்கு எதிராக வழக்குத் தொடருவது என்பதும் கேள்வியே எனப் பேசியிருக்கின்றார்.
இதன் தெளிவான முடிவு போரில் ஈடுபட்ட ஒரு தரப்பு இப்பொழுது இல்லை. அப்படியெனில் இன்னொரு தரப்பாகிய நமது இராணுவத்தினரை எவ்வாறு விசாரிப்பது என்பதாகும்.
தவிர, இலங்கையில் நடந்த போராட்டங்களுக்கும், மனித அழிவுகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மீதும், விடுதலைப் புலிகள் மீதும் குற்றச்சாட்டினை முன்வைத்து மொத்த அழிவுகளுக்கும் தமிழர் தரப்பு தான் காரணம் என்று கூறியிருக்கின்றார்.
போர்க் குற்ற விசாரணையில் இருந்து இலங்கையை காப்பாற்றவே அவர் இவ்விதம் கூறுகின்றார் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த விடயம் எனினும், நல்லாட்சியின் பிரதமர் அதாவது தமிழர்களின் ஆதரவோடு ஆட்சி அமைக்க வந்த ஒருவர் பேசுவது நியாயமா என்பதே இப்போதுள்ள கேள்வி.
இலங்கை நாடு அழிவுகளையும், சிதைவுகளையும் கண்டு கொண்டமைக்கு நாட்டில் ஏற்பட்ட தவறான ஆட்சி நிர்வாக ஒழுங்குகளே காரணம் என்பது சாதாரண குடிமகனுக்கும் தெரியும்.
வஞ்சிக்கப்பட்ட, எட்டி மிதிக்கப்பட்ட, ஏமாற்றப்பட்ட, தந்திரங்களினால் சிதைக்கப்பட்ட, வன்முறைகளினால் அடக்கப்பட்ட ஒரு தரப்பினரின் நியாயமான கோரிக்கைகளை அபிலாசைகளை, ஆட்சிப் பீடத்தில் இருக்கும் தரப்பினர் அறிந்து நடவடிக்கை எடுத்திருந்தால் இலங்கை மாதா இரத்தம் சிந்தியிருக்க மாட்டாள்.
இலங்கையிலிருந்து பிரித்தானியர்கள் வெளியேறிச் சென்றவுடன் நாட்டில் இருக்கும் இனங்கள் அனைத்திற்கும் சமானமான அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டு, இது இலங்கை தேசம், இங்கே தமிழன், சிங்களவன், முஸ்லிம் என்று பிரிக்க வேண்டிய தேவையில்லை.
யாவருக்கும் சகல அதிகாரங்களும் உண்டு என்று அன்றைய ஆட்சியாளர்கள் சொல்லியிருப்பார்களாயின், பிரபாகரனின் கையில் ஆயுதம் இருந்திருக்காது.
அரசியல் தலைவர்கள் ஒன்று கூடி பிரித்தானியரிடம் இருந்து மீண்ட நாங்கள் எவ்வாறு இலங்கையின் சுதேச இனங்கள் ஆட்சி செலுத்த வேண்டும் என சிந்தித்திருப்பார்களாயின், தமிழ் இளைஞர்கள் பிரபாகரன் பின்னால் திரண்டிருக்கமாட்டார்கள்.
ஆனால் நடந்ததோ வேறு. ஆட்சிப் பொறுப்பை பெற்றவர்கள் சிங்களத்திற்கு முன்னுரிமையும், பௌத்தத்திற்கு அரசாணையையும் கொடுத்து, அதிகாரத்தின் திறவுகோலை தமது இடுப்பிலும் சொருகிக் கொண்டனர்.
அகிம்சையில் கேட்ட தமிழர் தரப்பை அடக்க முனைந்தனர். அடக்கப்பட்டவர்களின், ஒடுக்கப்பட்டவர்களின் வாரிசுகளான, அடுத்த தலைமுறையினர் இனி பேசி பயனில்லை என்பதை உணர்ந்து வேறு மார்க்கத்தை நாடினர்.
ஆனால் இலங்கையின் பழுத்த அரசியல் வாதியும், அரசியல் ஞானம் கொண்டவரும், ராஜதந்திர நகர்வுகளை செய்பவருமான நல்லாட்சியின் பிரதமர் புலிகள் மீதும்,
பிரபாகரன் மீதும் குற்றச்சாட்டுக்களை சுமத்திவிட்டு தப்பித்துக் கொள்ள அல்லது மகிந்த அன்ட் கம்பனியினரைக் காக்க நினைப்பது தமிழர்கள் மனங்களில் பழைய சிந்தனைகளையே தோற்றிவிக்கின்றன. ஏற்படுத்தும் என்பது நிதர்சனப்பார்வையாகவுள்ளது.
ஒரு யுகத்தில் தான் இலங்கையில் உள்ளவர்கள் விட்டுக்கொடுப்பின்றி மனித அவலங்களை சந்தித்து அதில் இருந்து மெல்ல மீண்டுவரும் வேளையில் மீண்டும் பழைய பல்லவியில் பாடுவது ஏற்புடையதன்று.
உண்மையில், பிரதமர் ரணில், சிங்கள மக்கள் மத்தியில் சரியான புரிதல்களையும்,தமிழ் மக்களின் மனங்களில் ஏற்பட்ட வடுக்களை ஆற்றுப்படுத்தும் விதமாக செயற்படுவோம் என நினைத்திருப்பாராயின், ” இலங்கையின் இதுவரை காலமும் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களுக்கும், அழிவுகளுக்கும் நம்பிடத்தே விட்டுக்கொடுப்புக்களும், புரிதல்களும், சகிப்புத் தன்மையும் இல்லாமையே காரணம்.
இனிவரும் காலங்களிலேனும் நமது பிள்ளைகளை சரியான புரிதல்களோடு சக மனிதனை மனிதானாக பார்க்க வளர்க்கவும், அவனுக்கு தேவையான உரிமைகளைக் கொடுக்கவும் பழக்கப்படுத்துவோம்.
தெரிந்தோ தெரியாமலோ நமது நாடு அழிவை சந்தித்துவிட்டது. இவ்வழிவுகளுக்கு இலங்கையர்கள் ஒவ்வொருவரும் காரணம். அதனை நாம் ஏற்றுக்கொள்வோம்.
இங்கே நாம் பட்ட துன்பங்களும், துயரங்களும் போதும் தமிழ் முஸ்லிம் மக்களை அரவணைப்போம்.
அவர்களுக்கான அதிகாரங்களை நாம் இணைந்தே பெற்றுக்கொடுக்க உழைப்போம் எனத் தெரிவித்திருப்பாராயின் தமிழர்கள் மனம் குளிர்ந்திருக்கும். ஆட்சி மாற்றத்திற்காக நாம் அழித்த வாக்குகள் வீண் போகவில்லை என தமிழர்கள் நினைத்திருப்பார்கள்.
ஆனால், ஆட்சிப் பீடம் ஏறியதும், பௌத்த சிங்கள மேலாதிக்கமும், அதிகாரப்பசியும் மட்டுமே வாய் வழியாகவும், செயல்வடிமாகவும் ஏற்படுகின்றன.
இதனால் பௌத்த சிங்களத்திற்காக போராடியவர்களை, தமிழர்களை அழித்தவர்களை எப்பாடுபட்டேனும் காப்பாற்றியாக வேண்டும். இல்லையேல் அதிகாரம் இழக்க நேரிடும் எனும் நோக்கோடு செயற்பட்டால் எப்படி இந் நாட்டில் நல்லிணக்கம் ஏற்படும்.
“தமிழ் மக்களும், இளைஞர்களும் ஆயுதத்தின் மீதோ, வன்முறை மீதோ காதல் கொண்டவர்கள் அல்ல. எங்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள அதிகார வர்க்கத்திற்கு எதிராக போராடி எங்கள் உரிமைகளை பெற உந்தப்பட்டிருக்கின்றோம்” என மிகத் தெளிவாக தெரிவித்திருக்கின்றார் புலிகளின் தலைவர் பிரபாகரன்.
இலங்கையில் மைத்திரியல்ல, பாரதத்தின் காந்தியே ஆட்சிப்பீடம் ஏறினாலும் இவர்கள் ஈழத் தமிழர்கள் ஏன் ஆயுதம் ஏந்தத் தள்ளப்பட்டார்கள் என்பதை உணர்ந்து செயற்படமாட்டார்கள்.
அப்பொழுதும் அழிவுகளுக்கு புலிகளே காரணம், அவர்களே இதற்கு பொறுப்பு என்று கூறுவார்கள்.
இத்தனை அழிவுகளும், சிதைவுகளும் சந்தித்த பின்னரும் உண்மையை ஏற்க மறுத்து பழிச் சொற்களை இழந்த தரப்பிடமே போட்டு விட்டு இலங்கையின் இப்போதுள்ள ஆட்சிப்பீடமும் தப்பித்துக்கொள்ள நினைப்பார்களாயின், மீண்டும் பிரபாகரன்களும், விடுதலைப்புலிகளும் தோன்றுவதற்கு வழிவகுத்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்று அவர்கள் நினைத்துக்கொள்ள வேண்டும்.
நடந்தவைகளுக்கு மருந்துகளை தடவ நினைப்பார்கள் என ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தனால் உள்ள காயங்களை இன்னமும் பெரிதாக்கவே புதிய ஆட்சியாளர்கள் நினைக்கின்றார்கள்.
இது எதிர்கால இலங்கை சந்ததியினரின் அமைதியான வாழ்க்கைக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.
இலங்கையில் பிரபாகரன் அவதரிக்க, நாம் தமிழினத்திற்கு செய்த அநீதிகளே காரணம் என்பதை இவர்கள் ஏற்றால் நாடு வளம் பெறும்.
இல்லையாயின், இலங்கை இன்னும் நூறு ஆண்டுகளை கடந்தாலும் நல்லிணகத்தை பெறாது என்பது மட்டும் உண்மை. இது புத்தருக்கு தெரியும். புத்த மதத்தினை பின்பற்றுபவர்களுக்கு தான் இன்னமும் தெரியவில்லை.
எஸ்.பி. தாஸ்
-http://www.tamilwin.com