இறுதிக்கட்ட போரில் ஒன்றரை லட்சம் தமிழர்கள் இலங்கை இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டனர்.
இலங்கை இராணுவத்தினரும், ஆட்சியாளர்களும் முன்நின்று இந்தப் படுகொலையை நிகழ்த்தினார்கள் என்பது உலகம் அறிந்த உண்மை.
போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா-வில் தீர்மானம் கொண்டு வந்தது அமெரிக்கா.
இந்தத் தீர்மானத்தின் விசாரணை அறிக்கை கடந்த செப்டம்பர் 29-ம் தேதி ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடந்தது.
விவாதத்தின் போது ஐ.நா மனித உரிமை ஆணையர் சையத் ராத் அல் ஹுசைன் பேசும்போது,
இலங்கையில் போர் முடிந்து 6 ஆண்டுகள் ஆகியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என்று கடுமையாகச் சாடினார்.
இந்த நிலையில் அறிக்கை வந்த மறுநாளே, ‘போர்க்குற்றம் குறித்து காமன்வெல்த் மற்றும் பன்னாட்டு நீதிபதிகள் கொண்ட உள்நாட்டு விசாரணை போதும்’ என்று இலங்கைக்குச் சாதகமான ஒரு வரைவு தீர்மானத்தை அமெரிக்கா கொண்டுவந்தது.
இந்த பல்டிக்கு அமெரிக்கா கூறும் காரணம், ‘இலங்கையில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து விட்டது என்பதாகும்.
ஐ.நா மனித உரிமை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி இது குறித்து கேருத்து வெளியிடுகையில்,
அமெரிக்கா முன்பு கொண்டுவந்த தீர்மானத்தில், தமிழர் பகுதிகளில் இராணுவமயமாக்கலை அப்புறப்படுத்த வேண்டும் என்றிருந்தது. இப்போது அதை நீக்கிவிட்டார்கள்.
சர்வதேச பங்களிப்புடன் விசாரணை நடத்த வேண்டும் என்பதையும், வெளிநாட்டுப் பங்களிப்புடன் செய்யவேண்டும் என்று மாற்றிவிட்டார்கள். அது எந்த வெளிநாடு என்பதை இலங்கையே முடிவு செய்யலாம்.
விசாரணைக்கான நீதிமன்றம் முற்றிலும் உள்நாட்டு அமைப்பாகவே இருக்கும். மதத்தலைவர்கள், அரசியல்வாதிகள், இராணுவ அதிகாரிகள் என அனைத்துத் தரப்பினருடனும் தீவிரமாக ஆலோசனை நடத்திய பிறகு இலங்கை அரசியலமைப்புக்கு உட்பட்டே புதிய நீதிமன்றம் அமைக்கப்படும்’ என்று இலங்கை அதிபர் சிறீசேன தெரிவித்திருக்கிறார்.
இராணுவத்தை ஒருபோதும் காட்டிக்கொடுக்க மாட்டோம் என்று பிரதமர் ரணில் கூறியிருக்கிறார்.
இதன்மூலம் உள்நாட்டு விசாரணை ஒரு நாடகமே என்பது பட்டவர்த்தனமாகத் தெரிந்துவிட்டது.
இலங்கையில் உள்ள 44 அமைப்புகள் இந்தத் தீர்மானத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஆனால், போர்க்குற்றத்தை மிக அருகில் இருந்து பார்த்த இந்தியா, ஐ.நா-வில் எந்தக் கருத்தையும் பதிவு செய்யாமல் மௌனமாகச் செயல்பட்டு இலங்கைக்கு ஆதரவாக இருந்தது என்றார்.
சிந்திய இரத்தத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்.
-http://www.tamilwin.com