இலங்கையின் உள்ளக விசாரணைக்கு ஜப்பான் உச்ச ஒத்துழைப்பு!

ranil-100x80ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்டுள்ள அமெரிக்கத் தீர்மானத்திற்கு உள்ளக பொறிமுறை ஊடாக பதிலளிக்க இலங்கை அரசாங்கத்திற்கு உச்ச ஒத்துழைப்பை வழங்குவதாக ஜப்பான் தெரிவித்துள்ளது. ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் பியோமோ ஹசீடா, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் இதனை தெரிவித்துள்ளார்.

சீர்குலைந்த உள்நாட்டு மற்றும் சர்வதேச நம்பிக்கை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிக்கு ஜப்பான் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறது. புதிய நல்லாட்சி அரசாங்கம் புதிய நாட்டை உருவாக்க மேற்கொள்ளும் முயற்சிக்கு ஜப்பான் நெருங்கிய நண்பராக ஆற்றக்கூடிய சகல உதவிகளையும் வழங்கும் என்றும் ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னைய தசாப்தத்தைப் போலன்றி இலங்கை அரசாங்கம் நடுநிலையான வெளிநாட்டுக் கொள்கையை கடைப்பிடிக்கின்றமை தொடர்பாகவும் அவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

ஜப்பானுக்கான விஜயத்தினை மேற்கொண்டிருக்கின்ற பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் பியோமோ ஹசீடாவுக்கும் இடையில் நேற்று திங்கட்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போதே, இந்தக் கருத்துக்களை ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, எதிர்வரும் நாட்களில் நடைபெறும் பேச்சுவார்த்தைகள் மூலமாக தொடர்புகள் மேலும் பலமுறும். அபிவிருத்தி, தொழில்நுட்பம், அறிவூட்டல் கூடிய உதவிகளை இலங்கைக்கு வழங்க ஒருபோதும் ஜப்பான் பின்நிற்காது. அரசு, தனியார் துறை முதலீடுகளுக்காக இலங்கையில் சிறந்த சூழலை உருவாக்க தற்போதைய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கை தொடர்பாக ஜப்பான் உன்னிப்பாக அவதானிக்கிறது. இலங்கை மீண்டும் எழுந்து நிற்க நெருங்கிய நட்பு நாடு என்ற வகையில் நாம் கைகொடுப்போம்.

சுதந்திரத்துக்குப் பின் இலங்கையுடன் முதலில் தொடர்புகளை 05 நாடுகள் ஏற்படுத்தின. இந்தியா, பாகிஸ்தான், பர்மா (மியன்மார்), தாய்லாந்து, ஜப்பான் ஆகியவையே அவை. ஜே.ஆர். ஜெயவர்தனா இரு நாடுகளுக்கும் இடையில் உறவுகளை ஏற்படுத்த அடிப்படையாக விளங்கினார். பின்னர் இரு நாட்டுத் தலைவர்களும் அந்த நிலைமையை முன்னெடுத்தனர்.” என்று ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் பியோமோ ஹசீடா தெரிவித்துள்ளார்.

இதன்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியதாவது, “ஆறு தசாப்தங்களுக்கும் பின்னர் இரு பிரதான அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து இலங்கையில் தேசிய அரசாங்கத்தை அமைத்துள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான எமது அரசு நல்லாட்சி, ஜனநாயகம், மனித உரிமையைப் பலப்படுத்தி நாட்டை முன்கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளது.

வலய, பிராந்திய சமாதானம், அபிவிருத்தி தொடர்பாக நாம் அர்ப்பணம் பூண்டுள்ளோம். அங்கு ஆசிய பசுபிக் வலய நாடுகளில் அமைதி, அபிவிருத்தியை கொண்டு செல்ல ஜப்பானின் பங்களிப்பு முக்கியமாகும்.

ஐ.நா. அமைப்பின் பாதுகாப்பு சபையில் ஆசியாவின் பிரதிநிதித்துவம் போதாதென்பதே எமது என்னப்பாடாகும். அங்கு பிரதிநிதி ஆசனம் ஒன்றையும் பெற்றுக் கொள்வதற்காக ஜப்பானுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க இலங்கை நடவடிக்கை எடுக்கும்” என்றுள்ளார்.

-http://www.puthinamnews.com

TAGS: