வடக்குக் கிழக்கு மாகாணங்களை விடுதலைப் புலிகள் நிர்வகித்து வந்த காலப் பகுதியில் துஷ்பிரயோகங்கள் முழுமையாக அற்றுப் போயிருந்தது என்றே கூ ற முடியும். இப்போது நடக்கின்ற துஷ் பிரயோகங்களை பார்க்கின்ற போது எமது மக்கள் மத்தியில் ஒரு அச்சமானதொரு சூழ்நிலை காணப்படுகின்றது.
கடந்த ஆட்சிக்காலத்தில் மாத்திரமன்றித் தற்போதும் கேட்பார் எவருமின்றி எமது சிறுவர்கள் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்படுகின்றமை கவலையளிக்கிறது எனத் தெரிவித்தார் வடமாகாணக் கடற்தொழிலாளர் இணையத்தின் செயலாளரும், யாழ்.மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவருமான என்.வி.சுப்பிரமணியம்.
யாழ்.குடாநாட்டில் சிறுவர் பெண்களுக்கு எதிராக இடம்பெறும் வன்முறைச் சம்பவங்களைக் கண்டித்து தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி அண்மையில் யாழ்.மத்திய பேருந்து நிலையத்திலிருந்து யாழ்.மாவட்டச் செயலகம் வரை ஆர்ப்பாட்டப் பேரணியொன்று இடம்பெற்றது.
ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் யாழ்.அரச அதிபர் ,ஜனாதிபதி ஆகியோருக்கான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் கையளிக்கப்பட்டது. குறித்த மகஜர்களை யாழ்.மாவட்ட அரச அதிபர் சார்பில் யாழ்.மாவட்ட செயலக காணி மேலதிக அரச அதிபர் எஸ்.முரளிதரன் பெற்றுக் கொண்டார்.
இதன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமது காமவெறியைத் தீர்ப்பதற்காகச் சிறுவர்கள், வயது வந்தவர்கள் என்ற பாகுபாடில்லாமல் வன்புணர்வுக்குள்ளாகிக் கொடுமைப்படுத்துகிறார்கள். வித்தியா, சேயா போன்றோர் பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளமை மனித குலத்திற்கே அவமானமான செயல்.
இதுபோன்ற கொடுமைகள் எதிர்காலத்திலும் தொடாராதிருக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறுவர், பெண்களுக்கு எதிரான முற்றாக இல்லாமல் ஒழிக்க நாமனைவரும் ஒற்றுமையாக இணைந்து செயற்பட வேண்டும் இன்றைய சிறுவர்கள் தான் நாளைய எமது தலைவர்கள் என்பதை நாம் ஒவ்வொருவரும் மனதில் நிலை நிறுத்திச் செயற்படுவோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்: எஸ்-ரவி-
-http://www.tamilcnnlk.com




























ஒவ்வொரு தமிழனுக்கும் 6 சிங்கள ராணுவம் வட-கிழக்கில் நிறுத்தி வைக்கபட்டு உள்ளது 70 களிலும் இதே நிலைமை இருந்தது …