ஐ.நாவில் அரசு எழுத்துமூலம் வழங்கிய வாக்குறுதிகளை செயல்வடிவாக்கி உண்மையாக மனப்பூர்வமாக நிறைவேற்றவேண்டும் என்றும், இந்தச் செயற்பாடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையையும், சந்தேகத்தையும் ஏற்படுத்துவதாக அமையவேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், வலியுறுத்தினார்.
அத்துடன், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அரசு வழங்கிய வாக்குறுதிக்கமைய பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படவில்லை என்று நாடாளுமன்றில் அரசின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற குற்றவியல் கருமங்களில் சீனாவுடன் பரஸ்பர உதவியளித்தல் தொடர்பான பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு வலியுறுத்திய அவர், மேலும் தெரிவிக்கையில்,
“குற்றவியல் விடயத்தில் சீனாவுடன் இலங்கை ஏன் இந்த உடன்படிக்கையைச் செய்கிறது என எமக்குத் தெரியாது. இந்த ஒப்பந்தம் பற்றி எமக்கு சரியாகப் புரியவில்லை.
சில நாட்களுக்கு முன்னர் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் வெளிநாட்டு நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டத்தரணிகள், நிபுணர்கள் இலங்கையில் நிறுவப்படவுள்ள நீதிமன்ற பொறிமுறைக்குள் வர நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்தர்ப்பத்தில் சட்டமா அதிபர் திணைக்களம், நீதிமன்றம், பொலிஸ் முதலான துறைகள் பற்றி விவாதிக்கப்படுகிறது.
பொதுநலவாய மற்றும் ஏனைய நாடுகளில் உள்ளவர்கள் இலங்கைக்குள் வந்து ஒத்துழைப்பு வழங்க இலங்கை அரசு உடன்பட்டுள்ளது. இலங்கையின் நம்பகத்தன்மை, நியாயத்தன்மை பற்றி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.
இந்நிலையில், மாற்றத்துக்கான ஆரம்பம் வந்துள்ளது. ஒரே இரவில் இந்த மாற்றங்களை ஏற்படுத்தமுடியாது. நீண்டகாலம் எடுக்கும். இந்தக் காலங்களில் சர்வதேசத்திலிருந்து தேவையான உதவிகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும்.
இந்தச் சந்தர்ப்பத்தில் நான் கவலைக்குரிய விடயமொன்றைக் குறிப்பிடுகின்றேன். 15 ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டிருந்த வசந்தி ரகுபதி சர்மா அண்மையில் விடுதலைசெய்யப்பட்டார். இவர் மூன்று பிள்ளைகளின் தாயாவார். இந்த 15 ஆண்டுகளும் அவரின் பிள்ளைகள் வேறு நபர்களின் உதவியுடனேயே வாழ்ந்துவந்துள்ளனர். வசந்தி ரகுபதி சர்மா சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 15 ஆண்டுகளாக அவரின் சுதந்திரம் பறிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பொறுப்புக்கூறுவது யார்?
கடந்த 14ஆம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு சர்வதேசத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டம் உள்வாங்கப்படும் என்று அழுத்தம் திருத்தமாகக் கூறியிருந்தார். ஆனால், பயங்கரவாதத் தடைச்சட்டம் இன்னும் நீக்கப்படவில்லை.
ஆறு மாதங்களுக்கு மட்டும் கொண்டுவரப்பட்ட இந்தப் பயங்கரவாதத் தடைச்சட்டம் பல ஆண்டுகளாக அமுலில் இருக்கிறது.
மதிப்புக்குரிய தம்பதிகள் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின்கீழ் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டனர்.
பொலிஸாருக்குத் தகவல் வழங்காத காரணத்தால்தான் இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் எனக் கூறப்பட்டது. இந்த விடயத்தில் தாம் தொடர்ந்தும் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதால் அந்தத் தம்பதிகள் அந்தக் குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டப்பணம் செலுத்தினர்.
இவ்வாறான நிலையில், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்குவதற்கு முன்னர் அந்தச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டவர்களை விடுவிக்கவேண்டும் என நான் கேட்கின்றேன்.
இறுதி யுத்தத்தின் போது சரணடைந்த 12,000 முன்னாள் போராளிகள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டு விடுவிக்கப்பட்டபோது ஏன் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட 54 கைதிகளை விடுவிக்க முடியவில்லை
இந்த விடயத்தில் அரசியல் ரீதியாகத் தீர்மானம் எடுக்கவேண்டும். அரசியல் தீர்மானம் எடுத்து இந்தக் கைதிகளை விடுவிக்கவேண்டும். இது அரசின் கடமை.
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அரசு கூறியதைப்போல தாம் வித்தியாசமானவர்கள் என்பதைக் காட்டவேண்டும். அவை வெறும் வசனங்களில் மட்டும் இல்லாமல் செயல்வடிவமாக்கப்படவேண்டும்.
இவற்றை உண்மையாக – மனப்பூர்வமாக நிறைவேற்றுங்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கை, சந்தோஷத்தை வழங்குவதாக இந்த நடவடிக்கை அமையவேண்டும்” – என்றார். ……………..
-http://www.tamilwin.com