தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் ஜோசப் பரராஜசிங்கத்தை சுட்டுக்கொன்ற கொலையாளி உட்பட முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் இடம்பெற்ற பல்வேறு படுகொலைகளுடன் தொடர்புடைய குற்றவாளிகள் வெளிநாடுகளுக்குத் தப்பிச்சென்று வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களை கைது செய்து இலங்கைக்கு கொண்டு வருவதற்கு தேசிய அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கை என்ன என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் அற்ப காரணங்களுக்காக கைதுசெய்யப்பட்டு விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விசாரணைக்குட்படுத்துங்கள் என்றும் வலியுறுத்திய அவர் தொடர்ந்தும் அவர்களை தடுத்து வைத்திருப்பது நியாயமாகாது எனவும் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சர்வதேச மனித உரிமை பேரவையின் இலங்கை தொடர்பான அறிக்கையில் இது குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேசமும் இது குறித்து பேசிக்கொண்டிருக்கிறது. ஆகவே தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பான விடயத்தில் நடைமுறைச் சாத்தியங்கள் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும்.
மிகச் சொற்பமானவர்களே இவ்வாறு அரசியல் கைதிகளாக இருக்கின்றனர். அவர்களை விடுதலை செய்து சமூகத்துடன் இணைப்பதற்கு நடவடிக்கை எடுங்கள் என்று நீதியமைச்சரிடம் கோரிக்கையை முன்வைப்பதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் கூறியிருக்கிறார்.
அந்தவகையில் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் மிக முக்கியமான விடயங்களை நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் எடுத்துரைத்துள்ளார். கடந்த காலத்தில் பல தமிழ்த் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கொலை செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் உரிய முறையில் இடம் பெற்றதா? என்ற கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் அது தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் குரல் எழுப்பியுள்ளமை முக்கியமான விடயமாகும். அதுமட்டுமின்றி யுத்த காலத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார். அத்துடன் இவர்களின் விடுதலைக்கு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்பதையும் சம்பந்தன் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
விசேடமாக முன்னாள் எம்.பிக்களான ஜோசப் பரராஜசிங்கம், நடராஜா ரவிராஜ் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டமை மற்றும் திருகோணமலையில் ஐந்து மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமை, மூதூரில் அரசசார்பற்ற நிறுவன ஊழியர்கள் 17 பேர் கொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் தொடர்பில் இதுவரை நீதி கிடைக்காத நிலைமை காணப்பட்டு வருகின்றது.
மேலும் யுத்தகாலத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் தொடர்பிலும் இதுவரை நீதி நிலைநாட்டப்படாமலேயே உள்ளது. இவ்வாறு பல்வேறு விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் அவதானம் செலுத்தப்படவேண்டியுள்ளது.
குறிப்பாக கடந்த காலங்களில் இடம் பெற்ற படுகொலை சம்பவங்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும். அதுமட்டுமின்றி அரசியல் கைதிகள் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தப்பட்டு சட்ட நடவடிக்கை அல்லது விடுதலை போன்ற ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.
கடந்த காலத்தில் இடம் பெற்ற இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்தின் இலங்கை குறித்த விசாரணை அறிக்கையிலும் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.
அத்துடன் கடந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையிலும், இந்த அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு இந்த விடயங்கள் குறித்து உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும், பல்வேறு தரப்பினர் அழுத்தங்களை கடந்த காலம் முழுவதும் பிரயோகித்து வந்தனர். எனினும் அரசியல் கைதிகள் விவகாரமானது தொடர்ச்சியாக இழுத்தடிக்கப்பட்டுக்கொண்டே வருகிறது. இதற்கு முன்னர் அரசியல் கைதிகளின் உறவினர்களும் பல தடவைகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது உறவினர்களை விடுவிக்குமாறு கோரி வந்தனர்.
எனினும் இதுவரை காலமும் இதற்கு உரிய பதில் அளிக்கப்படாத நிலைமையே நீடித்து வருகிறது. குறிப்பாக கடந்த யுத்த காலத்தில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களே இவ்வாறு அரசியல் கைதிகளாக இருக்கின்றனர். யுத்தம் முடிந்த பின்னர் பயங்கரவாத தடைச் சட்டத்தை மீளாய்வு செய்யுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையும் மனித உரிமை அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.
எனினும் யுத்தம் முடிந்த பின்னர் கடந்து சென்ற ஆறு வருட காலத்தில் பயங்கரவாத தடைச்சட்டத்தை மீளாய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனினும் புதிய அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை மீளாய்வு செய்யவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இந்த விடயத்தை கூறியிருந்தார்.
இதனை சர்வதேச நாடுகளும் சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் வரவேற்றிருந்தன. இந்நிலையில் வாக்குறுதி அளித்தவாறு அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தை மீளாய்வு செய்வதுடன் கடந்த காலங்களில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை கூட எடுக்கப்படாமல் இருக்கின்ற அரசியல் கைதிகள் விவகாரத்தில் விரைவான முடிவொன்றுக்கு வரவேண்டும்.
யுத்தம் முடிந்த பின்னர் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர். அவ்வாறு இருக்கும் போது சந்தேகத்தின் பேரில் யுத்த காலத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் விடயத்தில் விரைவாக நடவடிக்கை எடுக்காமல் இருப்பது பாரிய அநீதியாகும்.
எனவே இந்த விடயத்தில் அரசாங்கம் விரைந்து கவனம் எடுக்க வேண்டும். குறிப்பாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக் ஷ இந்த அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் ஆழமான முறையில் கவனம் செலுத்தி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண விரைவில் நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் பல்வேறு நம்பிக்கை தரும் நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன. நல்லிணக்கத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் பல வேலைத்திட்டங்கள் புதிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டன.
அவ்வாறான அரசியல் சூழலில் இந்த அரசியல் கைதிகள் விவகாரத்திற்கும் தீர்வை கண்டுவிடுவது ஒரு முக்கிய தேவையாக காணப்படுகிறது.
அரசியல் கைதிகள் விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுப்பதை நல்லிணக்க செயற்பாடுகளின் ஒரு அங்கமாகவும் பார்க்க முடியும். சர்வதேசமும் அரசியல் தலைவர்களும் இந்த விடயம் தொடர்பில் வலியுறுத்தி வருகின்ற நிலையில் இதனை விசேட கவனம் செலுத்தி ஆராயவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.
அரசியல் கைதிகள் விவகாரத்தில் தொடர்ந்தும் தாமதித்துக் கொண்டிருக்காமல் அவர்கள் தொடர்பில் ஒரு தீர்வைக் காண்பதற்கு அரசாங்கம் முன்வரவேண்டும். அதுமட்டுமன்றி குறித்த அரசியல் கைதிகளின் குடும்பத்தினரும் கடந்த பல வருடங்களாக பல துன்பங்களையும், இன்னல்களையும் சந்தித்து வருகின்றனர். அவற்றுக்கு முடிவில்லாத நிலை உள்ளது.
எனவே இந்த அனைத்து விடயங்களையும் அவதானத்திற்கு உட்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் வலியுறுத்தியது போன்று அரசியல் கைதிகள் விவகாரம் உள்ளிட்ட நிலுவையில் காணப்படுகின்ற பல்வேறு பிரச்சினைகளுக்கும் தீர்வைக் கண்டுவிட வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம்.
-http://www.tamilwin.com