இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும் சிறைகளில் இல்லை! நீதியமைச்சர் தடாலடி

wijedasa-rajapaksaஇலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை. குற்றம் செய்தவர்களே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட தமிழ் கட்சிகள் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென்றும், அரசாங்கத்தை வலியுறுத்தி வருவதுடன் சிறையிலுள்ள தமிழ் கைதிகள் இன்று உண்ணா விரதத்தை மேற்கொள்ளவுள்ள நிலையிலேயே  அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ச மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

சிறையிலுள்ள தமிழ் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் நீதியமைச்சிக்கு தற்போது எந்த வகிபாகமும் கிடையாது. இந்த பொறுப்பு தற்போது சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு சட்டம் ஓழுங்கு தொடர்பான அமைச்சிடமே உள்ளது.

இவர்களை விடுதலை செய்வது தொடர்பாக அரசாங்க மட்டத்தில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அரச மட்டத்திலேயே இதற்கு தீர்வு காணப்பட வேண்டும். நீதிமன்றம் இவ்விடயத்தில் தலையிட முடியாது.

அதேவேளை தடுப்புக் காவலிலும், சிறைச்சாலைகளிலும் அரசியல் கைதிகள் என்று எவரும் கிடையாது. இதற்கு தமிழ் கைதிகளும் விதிவிலக்கல்ல. எனவே தமிழ் அரசியல் கைதிகள் இங்கு இல்லை.

கொலை, கொள்ளைகள் உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டோரே சிறையில் கைதிகளாக உள்ளனர்.  எனவே இவ் விடயம் சட்ட ரீதியாகவே அணுகப்பட வேண்டும்.

வாசுதேவ நாணயக்கார எம்.பி. தமிழ் கைதிகளை விடுதலை செய்யுமாறு ஊடகங்களுக்கு கூறுகின்றார். ஆனால் இதே வாசு, விமல் வீரவங்ச, உதய கம்பன்பில ஆகியோர் புலிகளுக்கு அரசாங்கம் உதவுவதாக பாராளுமன்றத்திலும் வெளியிலும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இன வாதத்தையே பரப்புகின்றனர்.

ஐ.நா. அறிக்கையிலும் இவ்விடயம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனவே அரச மட்டத்தில் இது ஆராயப்படும்.

ஐ.நா. அறிக்கை, ஜெனிவா பிரேரணை, உள்ளக விசாரணை தொடர்பாக அரசாங்க உயர் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.

இது வரையில் உள்ளக பொறிமுறை தொடர்பில் முடிவுகள் எடுக்கப்படவில்லை என்றார்.

தமிழ் கைதிகள் ஒரு வாரத்தினுள் விடுவிக்கப்பட வேண்டும்! த.தே.கூட்டமைப்பு வலுவான கோரிக்கை

tna_colombo_1சிறைச்சாலைகளில் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் கைதிகள் ஒரு வார காலத்துக்குள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே தமது வலுவான கோரிக்கை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள் என கடந்த ஜனவரி மாதத்திலிருந்து எதிர்பார்க்கின்றோம், இவர்களின் விடுதலை மேலும் இழுத்தடிக்கப் படக்கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமது விடுதலையை வலியுறுத்தி இன்று திங்கள் முதல் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கவிருப்பதாக தமிழ் அரசியல் கைதிகள் அறிவித்துள்ளமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக தானும், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனும் பாராளுமன்றத்தில் எடுத்துரைத்ததாகக் குறிப்பிட்ட சுமந்திரன், அவர்களின் விடுதலை மேலும் காலதாமதப் படுத்தப்படக்கூடாது என்றும் கூறினார்.

பயங்கரவாதத் தடைச்சட்டம் உள்ளிட்டவற்றின் கீழ் நீண்டகாலமாகத் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் பெயர் விபரங்கள் யாவும் நீதியமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி முதல் இவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பில் இருக்கின்றோம். எனினும், அவர்கள் இன்னமும் விடுவிக்கப்படவில்லை.

தமது விடுதலையை வலியுறுத்தி அரசியல் கைதிகள் உண்ணாவிரதமிருக்க திட்டமிட்டிருக்கும் நிலையில், ஒரு வார காலத்துக்குள் சகல அரசியல் கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலுவான கோரிக்கை என்றும் சுதந்திரன் எம்.பி தெரிவித்தார்.

வழக்குத் தாக்கல் செய்யப்பட்டவர்கள், வழக்கு தாக்கல் செய்யப்படாதவர்கள், காரணமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் என மூன்று பிரிவுகளையும் சேர்ந்த சகல அரசியல் கைதிகளும் ஒரு வார காலத்துக்குள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

விடுதலையை வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் நாளை முதல் உண்ணாவிரதம்! உறவினர்கள் அறிக்கை

jail-Sri-Lankaசிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ள தங்களை நல்லாட்சி அரசு விடுதலை செய்யவேண்டும் என்று வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள்  நாளை திங்கட்கிழமை முதல் காலவரையறையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கின்றனர்.

இலங்கையின் பல்வேறு சிறைச்சாலைகளிலும் எந்தவித விசாரணையும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தங்களுக்குப் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யக் கோரியே இந்தப் போராட்டத்தை ஆரம்பிக்கின்றனர்.

இந்தப் போராட்டம் தொடர்பாக தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்கள் அறிக்கையொன்றை விடுத்துள்ளனர்.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:-

“கொழும்பு, மகசின், பூசா, அநுராதபுரம், தும்பறை, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய சிறைகளில் பல வருடங்களாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தங்கள் விடுதலையை வேண்டி உண்ணாவிரதப் போராட்டத்தை 12.10.2015 திங்கட்கிழமை ஆரம்பிக்கின்றனர். சுமார் 250 கைதிகளுக்கு மேல் சாவா? வாழ்வா? என்னும் போராட்டத்தில் இறங்கவுள்ளனர்.

யுத்தம் முடிவடைந்து 6 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், தற்போது நல்லாட்சி நடந்துகொண்டிருக்கும் காலம் எனக் கூறிக்கொண்டிருக்கும் அரசானது செய்ய வேண்டிய நல்லிணக்க வேலைகளில் ஒன்றான அரசியல் கைதிகள் விடயத்தில் பராமுகமாக இருந்த காரணத்தினாலேயே கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அரசாலேயே தள்ளப்பட்டுள்ளார்கள்.

பல தடவைகள் அதிகாரத்தில் இருக்கும் அதிகாரிகளுக்கும் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஐனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி பல மனித உரிமை அமைப்பினரும் மற்றும் சமய குருமார்களும் கடிதங்கள் அனுப்பி இருந்தார்கள்.

அரசியல்வாதிகளான எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசன், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உட்பட பலரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட அதிகாரத்தில் இருக்கும் அதிகாரிகளை நேரில் சந்தித்தும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திக் கூறியிருந்தார்கள்.

அத்தோடு மன்னார் ஆயர் இராயப்பு யோசப்பும் மைத்திரிபால சிறிசேன ஐனாதிபதியாக வந்தவுடன் நேரில் சந்தித்து அரசியல் கைதிகளை விடுதலை செய்யும்படி கேட்டுக்கொண்டார். இதன்போது 6 மாத காலத்திற்குள் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்வதாக ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாக்குறுதியளித்திருந்தார். ஆனால், மதகுருவிற்குக் கொடுத்த வாக்கைக்கூட இதுவரை ஜனாதிபதி மைத்திரிபால நிறைவேற்றவில்லை.

அதேபோன்று சிறையில் வாழும் அரசியல் கைதிகள் தங்களின் கையெழுத்திட்டு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு ஊடாக ஐனாதிபதியிடம் விடுதலை செய்யுமாறு கேட்டிருந்தனர். 01.10.2015 அன்று சிறுவர் தினத்தை சந்தோஷமாகக் கொண்டாட முடியாத அரசியல் கைதிகளின் பிள்ளைகள் ஊர்வலமாகச் சென்று வடக்கு மாகாணசபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஊடாக ஐனாதிபதிக்கு தங்களின் தந்தையர்களை விடுதலை செய்யும்படி மகஜர் அனுப்பி கேட்டுக்கொண்டார்கள்.

இப்படியான பல முயற்சிகள் செய்தும் பலன் அளிக்கவில்லை. அப்படியிருந்தும் ஐனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது நம்பிக்கை வைத்து தங்கள் விடுதலையை வலியுறுத்தி அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்கின்றனர்.

யுத்தம் முடிவடைந்த அந்தக் காலப்பகுதியில் 14 ஆயிரம் போராளிகளுக்கு விடுதலைக்கு வழிவகுத்து கொடுத்தது போன்று இப்போது சிறைகளிலே வாடிக்கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே அரசியல் ஆய்வாளர்களின் கருத்து. அதேபோன்றுதான் சர்வதேச முக்கிய பிரதிநிதிகளும் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

ஆனால் இப்படியான கருத்துக்களுக்கு கூட மதிப்பளிக்காமல் நல்லாட்சி நடப்பதாக தெரிவிக்கும் ஆட்சியாளர்களின் கருத்துக்கள் ஏற்றதாக தெரியவில்லை. மீண்டும் மீண்டும் தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாத ஆட்சியாளர்களாகவே இருக்கின்றார்கள். தமிழ் அரசியல் கைதிகளுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ் மக்களையே ஏமாற்றும் ஒரு வாடிக்கையாகவே கொண்டுள்ளார்கள். என்றுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: