தாய் நாட்டிலே அகதிகளாக இருப்பவர்களா? அல்லது தனது மண்ணையே தாரை வார்த்தவர்களா? அல்லது விடுதலை வேண்டும் என துடிக்கும் விடுதலை புலிகளா?
தமது உடைமைகளை இழந்து, உறவுகளை இழந்து, ஆசைகளை இழந்து, அடிமைகளாக வாழும், உண்மை தமிழர்கள்தான் இன்று அரசியல் கைதிகள்.
கொழும்பு, மகசின், அநுராதபுரம், தும்பறை, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம் அகிய சிறைகளில் சுமார் 20 வருடங்களுக்குமேல் சிறையிலே தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழின உறவுகள் தான் அரசியல் கைதிகள்.
அன்று தனி ஈழம் கோரியிருக்கலாம். ஆனால் இன்று தனது தாயையும், பிள்ளைகளையும், உறவுகளையும் பார்த்தால் மட்டுமே போதும் என நினைக்கும் கண்ணீர் தமிழன்தான் இன்று அரசியல் கைதி.
இவன், இன்று கோருவது தனி ஈழம் இல்லை, தனி நாடு இல்லை. தன் தாயிற்கு தான் உழைத்து உணவு ஊட்டவேண்டும். தான் பெற்ற பிள்ளையினை தூக்கி கொஞ்ச வேண்டும். தன்னை நம்பி வந்த மனைவிக்கு குங்குமம் இடவேண்டும். தன் வயலில் தான் உழைத்து, சோறு உண்ண வேண்டும் என நினைப்பவன்தான் அரசியல் கைதி.
இலங்கையில் அரசியல் கைதிகளுக்கு இன்னுமோர் பெயர் இருக்கின்றது ”உரிமைகளை இழந்தவர்கள்”
தாய் நாட்டிலே தனது உரிமைகளுக்காக போராடி, இலங்கை அரசாங்கத்தினால் சிறைகளில் அடைக்கப்பட்டவர்கள்தான் அரசியல் கைதிகள் என அழைக்கப்படுகின்றார்கள்.
இவர்களது உறவுகள் கொடுத்த வாக்கு பலத்தின் ஊடாக ஆட்சியினை ஏற்படுத்திக் கொண்ட அரசாங்கம், அவர்களுக்கு என்ன செய்தது என்றால் ஒன்றுமில்லை.
இன்று, கண்ணீருடனும், கவலையுடனும் வெளி உலகத்தினை காணதுடிக்கும் இவ்வுயிர்களின் சராசரியான கோரிக்கையினை நிறைவேற்றக் கூட அரசாங்கம் தயாரில்லை.
2009 ம் ஆண்டு நடைபெற்ற இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்தக்குற்றங்கள் தொடர்பில் தமிழ் மக்கள் எதிர்பார்த்த சர்வதேச விசாரணை என்ற அம்சத்தினை, உள்ளக விசாரணையாக இலங்கை அரசாங்கம் மாற்ற தொடங்கியது முதலே, அரசாங்கத்தின் பாராமுக செயற்பாடுகள் ஆரம்பித்து விட்டன.
இலங்கை தமிழ் மக்கள் இன்னும் இரண்டாம் நிலையாக பார்க்கின்ற கொள்கையாகவே, இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் காணப்படுகின்றது.
வெறுமனே கண்துடைப்பு ஏற்பாடாக வழங்கப்பட்ட எதிர்கட்சி பதவியும், தற்போது செயலிழந்த ஒன்றாகவே காணப்படுகின்றது.
மிகப்பெரிய ஜனநாயக நாடான அமெரிக்காவிலே, ஒரு எதிர்கட்சி தான் காணப்படுகின்றது. ஆனால் இலங்கையில் இரண்டு எதிர்கட்சிகள் இருக்கின்றமைதான் மறைமுகமான உண்மையாகும்.
1977ம் ஆண்டு முதல் 1983 காலப்பகுதியில் தமிழ் கட்சிகளுக்கு, எதிர்கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டப்போது, தனி ஈழம் கோரினால் தூக்கிலிடுவோம் எனக் கூறிய பேரினவாதிகள், அதே செயற்பாடுகளைதான் இன்னும் நல்லாட்சி போர்வையின் கீழ் மறைமுகமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
ஆகவே எதிர்கட்சி தலைமைத்துவம் வழங்கப்பட்டப்போதும் தமிழ் மக்களின் குறைந்த பட்ச கோரிக்கைகளுக்கும், அரசாங்கம் செவிசாய்க்காமையானது வருத்தத்தினையே தருகின்றது.
குறிப்பாக முள்ளிவாய்க்கால் இன அழிப்பு சம்பவம் நடைபெற்று ஆறாண்டு காலம் ஆகியும், உரிய விசாரணை ஏதுமின்றி அரசியல் கைதிகளாக சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ள, எங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் இலங்கை சிறைகளில் உள்ள தமிழ் வம்சாவளி கைதிகள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் யுத்தம் முடிவடைந்து 6 வருடங்கள் கடந்தது எனவும், மற்றும் நல்லாட்சி நடந்துகொண்டிருக்கும் காலம் எனக் கூறிக்கொண்டிருக்கும் அரசாங்கமானது செய்ய வேண்டிய நல்லிணக்க வேலைகளில் ஒன்றான அரசியல் கைதிகள் விடயத்தில் பாராமுகமாக இருந்த காரணத்தினாலேயே கைதிகள் உண்ணாவிரத போராட்டத்திற்கு, அரசாங்கத்தினாலேயே தள்ளப்பட்டுள்ளார்கள் என இவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் சில அரசியல்வாதிகள் இலங்கையில் அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை. குற்றம் செய்தவர்களே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என குறை கூறுகின்றனர்.
ஆனால் அரசியல் கைதிகளோ பல ஆண்டுகளாக பயங்கரவாத தடைச்சட்டத்திற்குள் சிக்குண்டு நாம், எம்வாழ்க்கையை சிறைகளுக்குள் தொலைத்துள்ளோம். எமது குடும்பங்கள் கண்ணீரும், சோறும் உண்டவர்களாய் வாழ்ந்துவருகின்றார்கள்.
அரசியல் கட்சிகளின் வாசலுக்கும் போராட்டங்களுக்கும் சென்று சென்று எங்கள் குடும்பங்கள் நலிந்துபோயுள்ளன. நாம் உளவியல் ரீதியாக மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகியுள்ளோம் என தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் தற்பொழுது ஏற்பட்டுள்ள அரசாங்க மாற்றத்தின் மூலம் எமக்கு ஒரு புதுவாழ்வு கிடைக்குமென்று நம்பிக்காத்திருக்கின்றார்கள்.
ஆனால் புதிய அரசாங்கம் கிடைத்தது. வடக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றியும் பெற்றது. எதிர்கட்சி தலைமைத்துவமும் கிடைத்தது.
ஆனால் தமிழ் மக்களின் அடிப்படை கோரிக்கைகளான சர்வதேச விசாரணை மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை போன்றவை மட்டும் கிடைக்கவில்லை.
பசியால் அழும் குழந்தைக்கு உணவினை வரைந்து காட்டுவதனைப் போலவே அரசாங்கத்தின் செயற்பாடுகள் காணப்படுகின்றன.
இந்நிலையில் அரசியல் கைதிகளை இலங்கை அரசாங்கம் விடுவிக்காமைக்கு நாட்டில் இருக்கின்ற சூழ்நிலைகளே காரணம்.
குறிப்பாக தேர்தலில் தோற்றுப்போன சில கட்சிகளும், சில பாராளுமன்ற உறுப்பினர்களும், தேசிய அரசாங்த்தின் வீழ்ச்சிக்காக காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
இந்நிலையில் எதிர்கட்சி தலைமைத்துவம் தமிழ் கட்சிக்கு வழங்கப்பட்ட சந்தர்பங்களிலே, இனவாதத்தினை தூண்டிவிட்ட இவர்கள், அரசியல் கைதிகளின் விடுதலையினையும் விடுதலை புலிகளின் விடுதலையாகவே பார்க்கின்றார்கள்.
இந்நிலையில் இவர்களை விடுவித்தால், விடுதலை புலிகளை உருவாக்கி விடுவதாக, சில கட்சிகளால் மக்களுக்கு தவறாக கொண்டு சேர்க்கப்படும் என்பதில் அரசாங்கம் மிக கவனமாக தொழிற்படுகின்றது என்பதே நிஜம்.
குறிப்பாக இலங்கை அரசியல் வரலாற்று தேர்தல்கள் அனைத்துதே இனவாதத்தால் வெற்றி ஈட்டியவைகளே ஆகும். விதி விலக்காக கடந்த ஜனாதிபதி தேர்தலும், பொது தேர்தலும் மாறிப்போயின.
ஆகவே, இன்று சிங்கள மக்கள் மத்தியிலும் இனவாதம் சற்று குறைந்துள்ளது. ஆகவே இதனை சாதமாக வைத்து தமிழர்களின் சிறு சிறு பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதில் முனைப்பு காட்டுவதே சிறந்தது. மாறாக மீண்டும் தனி ஈழம் என கோருவதால் அரசியல் கைதிகளும் விடுதலை புலிகளாக நிரந்தர மயமாக்கப்படுவார்கள் என்பதே உண்மை.
குறிப்பாக இந்த நாட்டின் ஒரு நல்லிணக்கம் ஏற்படுவதற்கு குந்தகம் ஏற்படுத்தும் வகையில் புலம்பெயர்ந்து வாழும் மக்களில் ஒரு சிலர் இனவாதத்தை தூண்டி எமது விடுதலையை தாமதப்படுத்த முயல்வதாகவே எண்ணத்தோன்றுகின்றது என அரசியல் கைதிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஆகவே மீண்டும் இனவாத்தினை தூண்டி அரசியல் கைதிகளை நிரந்தர கைதிகளாக மாற்றாமல், சிந்தித்து செயல்படுவது தமிழ் மக்களின் அனைவரது பொறுப்பாகும்.
இப்பொழுது தமிழர்களின் தேவை காணாமல் போன உறவுகள் கிடைக்கவேண்டும். சிறையில் பல ஆண்டுகளாக தம் இளமைகளை தொலைத்து வாழ்கையை தொலைத்து வதைகின்றவர்கள் விடுதலையாகவேண்டும்.
இதனை மனதில் நிறுத்தி தமிழ் மக்களும், தமிழ் கட்சிகளும் செயற்படுவதே காலத்தின் கட்டாயமாகும்.
இந்நிலையில் அரசியல் கைதிகளின் இந்த உணவுத் தவிர்ப்பு போராட்டம் தொடர்பில், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு விரைவில் இவர்கள் அனைவரும் பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
இந்நிலையில், சாகும் வரையிலான உண்ணாவிரதத்தில் குதித்துள்ள 14 சிறைச்சாலைகளில் உள்ள 217 கைதிகள் போராட்டத்திற்கு என்ன சொல்லப் போகின்றது அரசாங்கம்?
இது, தனி ஈழக் கோரிக்கை அல்ல. தனி மனித கோரிக்கை. தன் குடும்பத்துடன் இனியாவது சேர்ந்து சந்தோசத்துடன் வாழ வேண்டும் என நினைக்கும் சராசரி மனிதனின் கோரிக்கைதான் இது.
பஞ்சு மெத்தையில் படுத்துறங்கி, விடிந்ததும், கல்லெறிய பார்க்கும், சில கல் நெஞ்ச காரர்களின் வழிபோகமால், துள்ளி திரியும் தான் பெற்ற பிஞ்சு குழந்தைகளை தூக்கி, செல்லமாக விளையாட துடிக்கும், ஒரே நாட்டின் உடன் பிறவாத உறவுகளின் கோரிக்கைதான் இந்த விடுதலை என்பதனை விளங்கி சிலர் செயற்படவேண்டும்.
இவர்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்குமா அரசாங்கம்?
-திவ்யநாதன்-
-http://www.tamilwin.com