‘பிள்ளையான் விசாரணை பரராஜசிங்கம் கொலை தொடர்பானது அல்ல’- த.ம.வி.பு

tmvpprasanthanஇலங்கையில் குற்றப்புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர், பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஏற்கனவே மூன்று தடவைகளுக்கு மேல் குற்றப்புலனாய்வுத் துறையினரால் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டவர் என அவரது கட்சியான தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கூறுகின்றது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை இடம் பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின் போது கட்சியின் பொதுச் செயலாளரான பி. பிரசாந்தன் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த விசாரணைகள் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலையுடன் தொடர்பானது அல்ல என்றும் கூறினார்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளின் தலைவரான சிவநேசதுரை சந்திரகாந்தன் தொடர்ந்தும் குற்றப்புலனாய்வுத்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான விசாரணைக்காகவே இவர் கைது செய்யட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினரால் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விசாரணையிலும் தமது கட்சித் தலைவர் நிரபராதியாக வெளியே வருவார் என்று தமிழ் விடுதலைப்புலிகளின் பொதுச் செயலாளரான பி. பிரசாந்தன் நம்பிக்கை வெளியிட்டார்

நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் நடராஜா ரவிராஜ் ஆகியோரின் படுகொலை தொடர்பான விசாரணைகளில் காட்டும் ஆர்வத்தை கிழக்கில் படுகொலை செய்யப்பட்ட ஏனைய தமிழ் அரசியல்வாதிகள் படுகொலைகள் தொடர்பிலும் காட்ட வேண்டும் என்றும் அவர் கூறுகின்றார்.

விடுதலைப்புலிகளினால் கொல்லப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான அ. தங்கத்துரை ,நிமலன் சௌந்தரநாயகம் , கிங்ஸிலி இராசநாயகம் மற்றும் அரசியல் பிரமுகரான ராஜன் சத்திய மூர்த்தி போன்றவர்களின் படுகொலை தொடர்பான விசாரணைகள் முடிவு இன்றி கிடப்பில் கிடப்பதாகவும் அவர் சுட்டிக் காட்டுகின்றார். -BBC

TAGS: