35 பேரின் உடல்நிலை மோசம்! உண்ணாவிரதம் தொடர்கிறது! கூட்டமைப்பு பா.உறுப்பினர்களிடம் கைதிகள் கோரிக்கை

3tnaஎமக்கு பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்வதாக இந்த நாட்டின் தந்தையான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வமாக அறிவிப்பைச் செய்யவேண்டுமென நாம் கோரியுள்ள போதும் இதுவரையில் எவ்விதமான உத்தியோகபூர்வ அறிவிப்புகளும் கிடைக்கவில்லையென உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தமது விடுதலை தொடர்பாக வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் ஆணைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் உடனடியாக ஜனாதிபதியை நேரில் சந்தித்து வலியுறுத்தி உத்தியோக பூர்வமான முடிவொன்றை அறிவிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜனாதிபதியுடனான சந்திப்பு தோல்வியில் நிறைவடையுமாயின் தமது விடுதலை வலியுறுத்தும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுபட்டு உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளனர்.

அதேவேளை உண்ணாவிரதமிருக்கும் கைதிகளில் மேலும் 12பேரின் உடல் நிலை மோசமடைந்த நிலையில் வைத்தியசாலையில் நேற்றைய தினம் அனுமதிகக்ப்பட்டுள்ளனர். அதன்படி கடந்த ஐந்து தினங்களில் உடல் நிலை மோசமடைந்து வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் கைதிகளின் எண்ணிக்கை 33ஆக உயர்வடைந்துள்ளது.

நேற்றுக் காலையிலும் அனைத்து சிறைச்சாலைகளிலும் மருத்துவர் அதிகாரிகளால் உண்ணாவிரதமிருக்கும் கைதிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இதன்போது பலரின் நிலைமை மோசமைடந்து வருகின்றமை தொடர்பில் மருத்துவ அதிகாரிகளால் அறிவுறுத்தப்பட்டது. அத்துடன் மகசின் நிறைச்சாலையில் 12பேரின் உடல் நிலை மோசமடைந்து நண்பகலளவில் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

முன்னதாக நேற்றிரவு மகசின் சிறைச்சாலையில் உடல் நிலை மோசமடைந்த நிலையில் எண்மரும் அநுராதபுர சிறைச்சாலையில் ஒருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதற்கு முன்னதாக 12பேர் குறித்த இரு சிறைச்சாலைகளிலிருந்தும் உடல்நிலை மோசமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதேவேளை நேற்றைய தினமும் மகசின் சிறைச்சாலைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதிதலைவருமான செல்வம் அடைக்கலநாதன் விஜயம் செய்து கைதிகளுடன் கலந்துரையாடினார். அத்துடன் மன்னார் மாவட்ட குருமுதல்வர் விக்டர் சோசை, அருட்தந்தை சக்திவேல், வட்ரக்க விஜித தேரர் உள்ளிட்டோரும் கைதிகளை நேரில் சென்று பார்வையிட்டு அவர்களின் கோரிக்கைகளுக்கு தமது முழுமையான ஆதரவையும் வெளியிட்டனர். மேலும் அவர்களின் விடுதலைக்காக தம்மாலான அனைத்து செயற்பாடுகளையும் முன்னெடுப்பதாகவும் குறிப்பிட்டனர்.

இதேநேரம் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு நண்பகலளவில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் இருதயநாதன் மற்றம் சட்டத்தரணி அன்டன் புனிதநாயகம் ஆகியோர் நேரில் சென்று கைதிகளை பார்வையிட்டனர்.

பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் இருதயநாதன் கைதிகள் விடுதலை குறித்து கூட்டமைப்பின் தலைவரிடம் விரைந்து எடுக்கவேண்டிய நடவடிக்கை தொடர்பில் வலியுறுத்துவதாக குறிப்பிட்டார்.

எமது விடுதலையை வலியுறுத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு பொதுத் தேர்தலில் வெளிட்ட விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருக்கின்றது. அதனையும் கருத்திற்கொண்டே வடக்கு கிழக்கு மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். அவ்வாறான நிலையில் எமது விடுதலை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபாலவை கூட்டமைப்பின் 16பாராளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து சந்தித்து வலியுறுத்தவேண்டும். அதன் மூலம் தீர்க்கமான தீர்மானமொன்றை எடுத்து ஜனாதிபதி அறிவிக்க வேண்டும்.

அவ்வாறு கூட்டமைப்பின் 16பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியைச் சந்தித்த பின்னரும் கூட இணக்கப்பாடு எட்டப்படாதிருக்குமாயின் அனைவரும் ஒன்றுபட்டு எமது போராட்டத்திற்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும் எனக் கோரிக்கை முன்வைத்தனர்.

இன்று ஆறாவது நாளாகவும் தமது போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

-http://www.tamilwin.com

TAGS: