காலத்தை இழுத்தடித்து நடைப்பிணமாவதை விட உயிரை விடுவதே மேல்! உண்ணாவிரத கைதிகள் தெரிவிப்பு

macazine-proஐந்தாவது நாளாக நேற்றும் தொடர்ந்த தமிழ் அரசியல் கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டத்தில் சுமார் 20ற்கும் அதிகமானவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

மகசின் சிறைச்சாலையில் ஒருவருடைய நிலைமை மோசமடைந்திருப்பதாக சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“காலத்தை இழுத்தடித்து நடைப் பிணமாவதை விட உண்ணாவிரதமிருந்து உயிரை விடுவதே மேல்” என்ற நிலைப்பாட்டில் தாம் இருப்பதாக தமிழ் அரசியல் கைதிகள் கூறுகின்றனர்.

தொடர்ச்சியாக பல தடவைகள் தமது விடுதலை குறித்து வழங்கப்பட்ட உறுதிமொழிகள் யாவும் ஏமாற்றத்திலேயே முடிந்துள்ளன.

எமது உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்ற போதும், ஜனாதிபதியிடமிருந்து உறுதியான அறிவிப்பு வராமல் போராட்டத்தை நிறுத்தத் தயாராக இல்லையென்றும் கைதிகள் திட்டவட்டமாகக் தெரிவிக்கின்றனர்.

சிறையில் தொடர்ந்தும் இருப்பதைவிட உயிரைவிடுவது மேல் என்ற மனோ நிலைக்குத் தாம் தள்ளப்பட்டுள்ளோம் என்பதே கைதிகளின் நிலைப்பாடாக உள்ளது.

ஐந்தாவது நாளாகவும் உண்ணாவிரதம் தொடர்ந்ததால் நேற்று கொழும்பு மகசின் சிறைச்சாலையில் 12 பேர் சுகவீனமுற்று வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவரின் நிலைமை மோசமடைந்திருப்பதாகத் தெரியவருகிறது. அநுராதபுரம் சிறைச்சாலையில் 8பேர் சுகவீனமுற்றுள்ளனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சகலரும் மிகவும் சோர்ந்து போயிருப்பதுடன், அவர்களின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக அவர்களை பரிசோதிக்கும் வைத்தியர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை, ஒக்டோபர் 31ம் திகதி முதல் நவம்பர் மாதம் 7ம் திகதிக்குள் கைதிகள் விவகாரத்துக்கு தீர்வொன்றை வழங்குவதாக ஜனாதிபதி, அமைச்சர் விஜயதாசவிடமும், சம்பந்தன் ஐயாவிடமும் கூறியுள்ளார்.

என்ன நடைமுறையின் கீழ் இவர்களின் பிரச்சினையைத் தீர்ப்பது என்பது பற்றி அமைச்சரவையில் கலந்துரையாடப்படும் என்றும், கைதிகளால் ஏற்றுக்கொள்ளக்கூடிய நடைமுறையாகவே அது இருக்கும் என்பதையும் ஜனாதிபதி அமைச்சரிடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்த நிலைப்பாட்டை கைதிகளுக்குத் தெரியப்படுத்த நடவடிக்கை எடுத்திருப்பதாக சுமந்திரன் எம்பி மேலும் கூறினார்.

இதேவேளை, தமது விடயத்தில் ஜனாதிபதி நேரடியான அறிவிப்பொன்றை வெளியிடும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடப் போவதில்லையென கைதிகள் தெரிவித்துள்ளனர்.

-http://www.tamilwin.com

TAGS: