தமிழன் – இளிச்சவாயன்……? ஐ.நா விளக்கம்…..!

tamilan_ilichchavayan_001ஒரு கொலையாளியே தான் செய்த கொலையை விசாரிக்கலாம் என்று எந்த நீதிபதியாவது தீர்ப்பு எழுதுவாரா? அப்படி தீர்ப்பு எழுதினால், அந்த நீதிபதியை இந்த உலகமும் உலக மக்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்களா? உலகமே கொந்தளிக்காதா?

ம்ம்ம்ம்…. அப்படியொரு கொந்தளிப்பு ஏற்படவேயில்லை! கொலையாளியே அவரது கொலையை விசாரிக்கலாம் என்று ஒரு தீர்ப்பு. அதாவது அநீதி எழுதப்பட்டுவிட்டது. உலகில் எந்தக் கொந்தளிப்பும் இல்லை என்பது தான் வேதனை.

காரணம் அந்த அநீதி உலகத்தில் வேறு எந்த மொழியைப் பேசுபவனுக்கு நடந்திருந்தாலும் உலகமே இன்று கொந்தளித்திருக்கலாம். பத்திரிகைகள் எழுதி எழுதி ஒரு புரட்சியை உருவாக்கியிருக்கலாம்.

ஆனால், அந்த அநீதி தமிழனுக்கு என்றால் எப்படி கொந்தளிப்பு ஏற்படும்?

இலங்கையில் ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிங்களம் செய்த குற்றங்களை பட்டியலிட்ட இந்த அறிக்கை, ஒரு கலப்பு விசாரணை முறையை முன்மொழிந்தது ஐ.நா. என்ற அமைப்பு!

எப்படி தெரியுமா? சிங்கள அரசு செய்த குற்றங்களை விசாரிப்பதற்காக சென்ற ஐ.நா வின் விசாரணைக் குழுவை அனுமதிக்கவேயில்லை இலங்கை. அப்படி தயாரிக்கப்பட்ட அறிக்கை தான் ஐ.நா தாக்கல் செய்திருந்தது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் இலங்கை எந்த வகையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென்கிற தீர்மானம் அமெரிக்காவினால் முன்வைக்கப்பட்டது. அமெரிக்காவுடன் இணைந்து இங்கிலாந்து, மாண்டிநீக்ரோ உள்ளிட்ட நாடுகள் இணைந்து இத்தீர்மானத்தை கொண்டுவந்தது.

கலப்பு விசாரணை முறை என்பது சர்வதேசமும் இலங்கை அரசும் இணைந்து இலங்கை செய்த குற்றங்களை விசாரிக்கும் முறை. இலங்கை அரசு செய்த குற்றங்கள் சர்வதேச குற்றங்கள். இவை மிகக் கொடூரமானவை. ஒரு அரசே செய்த குற்றங்களை அந்த அரசே விசாரிக்க இயலாது.

இந்த அடிப்படையில் விதிகளை காற்றில் பறக்கவிட்டு இலங்கை அரசே குற்றங்களை விசாரிக்கும் என்ற தீர்மானத்தை,  அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை, இந்தியா இலங்கை நாடுகளின் ஒத்துழைப்புடன் ஐ.நா நிறைவேற்றி இருக்கிறது.

ஒரு வழக்கிற்கு சாட்சிகளும் முக்கியம். அதைவிட பாதிக்கப்பட்டவர்களின் வாதமும் முக்கியம். அங்கே இரு தரப்புக்கும் பாதுகாப்பு இல்லை என்பதை ஐ.நா அறிக்கை பதிவு செய்திருக்கிறது.

சாட்சி சொன்னவர்கள் உயிரோடு நடமாட முடியாத காட்டாட்சி பிரதேசமாக இலங்கை இருப்பதை ஐ.நா அறிக்கையே ஒத்துக்கொள்கிறது. மேலும் 2006ல் இந்தியாவின் உச்ச நீதிமன்ற நீதிபதி எஸ்என். பகவதி தலைமையில் இலங்கை சென்ற சான்றோர்கள் குழுவும் இதையே உலகிற்கு அறிக்கையாக கொடுத்திருந்தது.

கலப்பு விசாரணை என்ற அறிவிப்பு வந்திருந்தாலாவது சற்று நிம்மதி ஏற்பட்டிருக்கும். கலப்பு விசாரணை முறை என்பது கம்போடியா, சியாரோ லியோன், கிழக்கு திமோர், சாட் போன்ற நாடுகளில் நடந்த குற்றங்களை விசாரிக்க உருவாக்கப்பட்டது.

குறிப்பாக, கிழக்கு தைமூர் நாட்டில் பாதிக்கப்பட்ட தைமூர் மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக இவர்களை கொலை செய்த இந்தோனேசியாவிடம் இருந்து பிரிந்து செல்வதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன் அடிப்படையில் அம்மக்கள் தங்களைக் கொலை செய்யும் இந்தோனேசிய இராணுவத்திடம் இருந்து பாதுகாத்துக் கொண்ட பின்னரே இவ்விசாரணை நடத்தப்பட்டது.

ஒரு இனம் மற்றொரு இனத்தை ஒடுக்கும் பொழுது, அங்கு நிகழும் குற்றங்கள் என்பது ஒரு வகை. ஒரு நாட்டிற்குள் ஆட்சி மாற்றத்திற்காக நடக்கும் போரில் நடக்கும் குற்றங்கள் மற்றொரு வகை. இந்த இரண்டில் முதல் வகையில், இனப்படுகொலை நிகழும். மற்றவற்றில் பெரும்பாலும் போர்க்குற்றங்களாகவே நிகழும்.

பங்களாதேசத்தில் பாக்கிஸ்தான் செய்த இனப்படுகொலைக்குப் பின்னர் தனியாக வங்கதேசம் பிரிக்கப்பட்டது. பாகிஸ்தான் இராணுவத்தினரை முழுவதுமாக வெளியேற்றிய பின்னர், வங்க மக்களை பாதுகாக்கும் வகையில் இராணுவத்தை ஏற்படுத்திய பின்னரே விசாரணை தொடங்கியது.

அம்மக்களுக்கு முதலில் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. ஆனால், இது போன்ற எந்த நடைமுறையையும் ஐ.நாவும் இந்தியாவும், அமெரிக்காவும் தமிழர்களுக்கு நடைமுறைப்படுத்தவில்லை.

இத்தனை நடைமுறைகளையும் மூடி மறைக்க அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா, ஆகிய நாடுகள் இலங்கைக்கு சாதகமான தீர்மானத்தை முன்மொழிந்தார்கள். உலகின் பிற பகுதிகளில் அனைத்து இடங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது.

ஆனால் தமிழர்களுக்கு மட்டும் இது மறுக்கப்படுகிறது. சர்வதேசமும் இலங்கையுடன் இணைந்து விசாரிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை இந்த நாடுகள் புறக்கணித்து இலங்கையே தனது குற்றங்களை விசாரிக்கும் எனத் தீர்மானத்தை ஐ.நா மன்றம் நிறைவேற்றி இருக்கிறது.

இந்த விசாரணை அறிக்கையில், சர்வதேச நீதிபதிகள் என பெயரிடப்பட்டிருந்தவற்றையெல்லாம் வெளிநாடு என சாதுர்யமாக மாற்றினார்கள். வெளிநாடு என்பது வேறு. சர்வதேசம் என்பது வேறு அர்த்தம்.

சர்வதேசம் என்பது வேறு அர்த்தம். சர்வதேச நீதிபதிகள் என்பது உலக நாடுகள் முடிவு செய்வது. மாறாக வெளிநாட்டு நீதிபதிகள் என்பது இவங்கை அரசே முடிவு செய்வது என்பதை புரிந்து கொண்டால் இதன் சதி புரியும்.

மேலும் கொமன்வெல்த் நாடுகளின் நீதிபதிகளையும் இணைப்பதாக சொல்லப்பட்டுள்ளது. கொமன்வெல்த்தின் தலைவராக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இருப்பதை சேர்த்துப்பார்த்தால் இந்த கயமத்தனத்தை புரிந்து கொள்ள முடியும்.

தெற்கு சூடானில் நிகழ்த்தப்பட்ட இதுபோன்ற கொலைகளை “ இனப்படுகொலை எனும் கோணத்தில் விசாரிக்க வேண்டுமென்று ஐ.நா அறிவித்தது. இனப்படுகொலைக்குள்ளான தெற்கு சூடான் மக்கள் தனியே பிரிந்து சென்று நாட்டை உருவாக்க வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

ஆனால், இலங்கையில் இனப்படுகொலைக்கான கிரிமினல் விசாரணை நடத்த வேண்டுமென்று ஐ.நாவும் சொல்லவில்லை, அமெரிக்காவோ இந்தியாவோ பேசவில்லை. அதே போல, கடந்த தீர்மானங்களில் சொல்லப்பட்ட இலங்கை இராணுவத்தை, தமிழர் பகுதியில் இருந்து திரும்ப பெறுதல் குறித்து அமெரிக்காவோ, இந்தியாவோ வாய்திறக்கவில்.

ஆனால் குற்றங்களுக்கு விடுதலைப்புலிகளை முழுவதும் பொறுப்பாளிகளாக மாற்றும் திட்டத்தை இத்தீர்மானத்தில் நிறைவேற்றி இருக்கிறார்கள்.

இலங்கை அரசு கைதிகளாக எஞ்சி இருக்கும் விடுதலைப்புலிப் போராளிகளை குற்றவாளிகளாக மாற்றி வழக்கை மூடவே வகை செய்திருக்கிறார்கள். ஏற்கனவே புலிகளை பயங்கரவாதிகள் என ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, இந்தியா ஆகியவை அறிவித்திருக்கின்றன.

இதைப்பயன்படுத்தி உலகம் முழுவதிலும் இருக்கும் தமிழீழ ஆதரவாளரக்களை முடக்க அமெரிக்காவும் இந்தியாவும் இலங்கையும், இணைந்து நடத்திய நாடகமே. ஐ.நாவின் தீர்மானம் என்பதே கண்கூடாக ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில் புரிந்து கொள்ள முடிந்தது.

எங்கள் ஆயுதங்களை மௌனிக்கிறோம். என்று புலிகள் அறிவித்த பின்னர், அங்கிருந்து மக்களை வெளியேற்றி விடுவதும், போராளிகளை சர்வதேச விதிகளின் கீழ் போர்க்கைதிகளாக கைது செய்வதும் சர்வதேச நடைமுறை

இந்த நடைமுறைகளை இலங்கை ஜனாதிபதி, இராணுவம், இந்தியாவின் அதிகாரிகள், ஐநாவின் தலைவர்கள் ஆகியோர் உலகின் புகழ்பெற்ற பத்திரிகையாளர் முன் உறுதி கூறிய பின்னரே விடுதலைப்புலிகளின் அரசியல் தலைவர்களும், பொதுமக்களும் வெள்ளைக்கொடியோடு வெளியே வந்தார்கள்.

அப்படி வந்தவர்களில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை கொலை செய்ய உத்தரவு வந்தது.

சாட்டிலைட் கேமரா மூலமாக தரையில் ஓடும் முயலினைப் படம் பிடிக்கும் சர்வ வல்லமை கொண்ட நாடுகள், 70 ஆயிரம் மக்கள் படுகொலை செய்யப்படுவதையும் படம்பிடிக்கவும் செய்திருக்கும். உணர்ந்தும் இருக்கும்.

அப்படியெனில் ஏன் இலங்கையை இந்த அரசுகள் காப்பாற்றுகின்றன என 2009ல் இருந்து இன்றுவரை எழுந்த கேள்விகளுக்கான பதில் ஐநா. மனித உரிமைக் கவுன்சிலில் தமிழர்களுக்கு கிடைத்திருக்கிறது.

2009மே மாதத்தில் நிகழ்ந்த இந்த இனப்படுகொலை உலகின் பலம் வாய்ந்த நாடுகளின் ஒப்புதலுடன் நடைபெற்று இருக்கிறது என்பதுதான் அப்பதில்.

ஐ.நா என்பது பல நாடுகளின் கூட்டமைப்பே. இந்த அமைப்பு நாடுகளின் நலன்களை மட்டுமே பாதுகாக்கிறதே ஒழிய மக்களை பாதுகாப்பதில்லை என்பதே கசப்பான உண்மை.

ஐ.நா அகராதியில் “தமிழன்“ என்ற பெயருக்கு “ இளிச்சவாயன் “ என்று விளக்கம் எழுதப்பட்டிருக்கிறது. வேறென்ன சொல்ல?

திருமுருகன்

(மே17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்)

-http://www.tamilwin.com

TAGS: