இன அழிப்பு வதை முகாமில் வைத்து கொடும் சித்திரவதைகளுக்குள்ளாக்கப்பட்டு அதன் விளைவாக உடல்ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டு இனஅழிப்பு அரசால் நுட்பமான முறையில் படுகொலை செய்யப்பட்ட தமிழினியின் சாவை இயற்கை மரணம் என்று சில ஊடகங்களும் அரசியல்வாதிகளும் விளிப்பது அயோக்கியத்தனமானது.
“புனர்வாழ்வு ” என்ற பெயரில் இனஅழிப்பு வதைமுகாமில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட போராளிகளும், இறுதி இனஅழிப்பின் போது வன்னி நிலப்பரப்பில் சுத்தமான குடிநீரில்லாமலும், இராசயான ஆயுதங்களின் பாவனையாலும், தொடர்ந்து உப்புநீரை அருந்தியதாலும் நீண்ட நாள் திட உணவை உண்ணாததன் விளைவாகவும் எமது மக்களும் பல மோசமான உடற் தாக்கங்களை சந்தித்து நோயாளிகளாகி அதன் விளைவாக மரணத்தை தினமும் சந்தித்து வருகிறார்கள்.
குறிப்பாக சிறுநீரக செயலிழப்பு மற்றும் புற்றுநோய். இவை எதன் விளைவு என்பதை மேற்படி காரணங்களை வைத்து மிகச் சுலபமாகவே அடையாளம் காண முடியும். இதற்கு பெரிய மருத்துவ அறிவு ஒன்றும் தேவையில்லை.
இன அழிப்பு அரசு, திட்டமிட்ட இனஅழிப்பு நோக்கில் அவர்களுக்கு எந்த பிரத்தியேக சிகிச்சையும் செய்யவில்லை.
ஒரு தலைமுறையே இதனால் பாதிக்கப்பட்டிருக்கிறது. இனஅழிப்பின் மிக நுட்பமான உத்தியாகவே இதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இது உண்மையான நல்லிணக்கத்தை பேணாத இனஅழிப்பு நோக்கிலான அரச எந்திரத்தின் செயற்பாடு என்பதை நாம் பல தடவை வலியுறுத்திவிட்டோம்.
இதைத்தான் கட்டமைக்கப்பட்ட இனஅழிப்பு என்று வரையறுக்கிறோம். இதை இயற்கை மரணம் என்று தமிழர் தரப்பே விளிக்கும் அயோக்கியத்தனத்தை என்னவென்று சொல்வது?
முதலில் நாம் திருந்துவோம். இனஅழிப்புக்குள்ளாகி தொடர்நது அதற்கு முகம் கொடுத்துக்கொண்டிருக்கும் ஒரு இனமாக நாம் பாவிக்கும் ஒவ்வொரு வார்த்தகைளும் கவனமாக இருக்க வேண்டும்.
அதுதான் எமது நீதிக்கான அடிப்படை. மற்றவர்களிடம் நீதியை கேட்கும் அறமும் உரிமையும் அப்போதுதான் எமக்கு உரித்தாகிறது.
இனியாவது ஒரு அனைத்துலக மருத்துவ குழுவை கொண்டு இறுதி இனஅழிப்பில் பாதிக்கப்பட்டு எஞ்சியுள்ள மக்களுக்கும் போராளிகளுக்கும் தீவிர மருத்துவ பரிசோதனை செய்ய தமிழ் அரசியல்வாதிகளும் செயற்பாட்டாளர்களும் பரிந்துரைப்பார்களா?
அல்லது வழமைபோல் உள்ளக விசாணைக்கு ஒத்தூதுவதுபோல் எமது மக்களையும் போராளிகளையும் இப்படியான நுட்பமான இனஅழிப்புக்கு பலியாக்கப் போகிறார்களா?
இனஅழிப்பு அரசின் சித்திரவதைக்கு முகம் கொடுத்து இனஅழிப்பின் சாட்சியாக மடிந்த தமிழினிக்கு வீர வணக்கங்கள்.
பரணி கிருஸ்ணரஜனி
[email protected]
-http://www.puthinamnews.com