ஐ.நா. தீர்மானத்துக்கு முன்னதாக மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கையை வெளியிட்டிருந்தால் நாடு நாசமாகியிருக்கும் இதனால்தான் இந்த அறிக்கையை அரசு முன்கூட்டியே வெளியிடவில்லை என அமைச்சரவை பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
இலங்கை விவகாரம் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் சம்பந்தமாக நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழு அறிக்கையில் வெள்ளைக்கொடி விவகாரம், சனல் 4 ஆவணப்படம் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. புலித்தேவன், நடேசன் உட்பட வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தோர் கொலைசெய்யப்பட்டமை, பிரபாகரனின் பாலச்சந்திரன், கொல்லப்பட்டமை என்பன தொடர்பில் சுயாதீன விசாரணை நடத்த வேண்டுமென பரணகம ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. சனல் 4 ஆவணப்படத்தை பரணகம ஆணைக்குழு ஏற்றுக்கொண்டுள்ளது.
இன்று ஐ.நா. தீர்மானம் பற்றி இவர்கள் பேசுகின்றனர். ஆனால், பரணகம ஆணைக்குழு அறிக்கை பற்றிப் பேசுவதில்லை.
பரணகம என்பவர் மஹிந்த ராஜபக்ஷவின் நெருங்கிய நண்பர். அவரது அறிக்கையில்தான் இவைபற்றி குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த அறிக்கையை ஐ.நா. தீர்மானத்துக்கு முன்னர் வெளியிட்டிருந்தால் நாடு நாசமாகியிருக்கும். அதனால்தான் அரசு அந்த அறிக்கையை முற்கூட்டியே வெளியிடாமல் பிற்போட்டது.
சனல் 4 ஆவணப்படத்தில் இசைப்பிரியா இராணுவத்தினரால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்து பின்னர் சடலமாகக் காண்பிக்கப்படுகின்றார் என்று காட்டப்படுகின்றது. இதற்கு அடுத்தபடியாக பிரபாகரனின் மகன் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உயிருடன் இருந்து பின்னர் மரணமடைந்திருப்பது பற்றிய புகைப்படம் காண்பிக்கப்படுகின்றது.
இந்த விடயம் பரணகம ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை சனல் 4 ஆவணப்படத்தை ஏற்றுக்கொண்டுள்ளது. இசைப்பிரியா மரணம், பிரபாகரனின் மகனது மரணம் என்பனவும் அதில் உள்ளடக்கப்படுகின்றன என தெரிவித்தார்.
-http://www.tamilwin.com