பரணாகம மோசடி..! பரிபூரண மோசடி…!

paranagama_001இன்றைய திகதியின் ‘நியூஸ் சென்டர்’ – மாக்ஸ்வல் பரணாகம தான். ‘அவரே சொல்லிவிட்டார்’ என்று முன்னாள் முதல்வர் கருணாநிதியே அறிக்கை விடுகிற அளவுக்கு நிலைமை எல்லைமீறிப் போய்விட்டது.

உண்மையில், பரணாகம அறிக்கைதான், இதுவரை நடந்த மோசடிகளில் மகத்தான மோசடி.

புயலில் தலைவிரித்தாடுகிற பெருமரங்களைப் போல, பேயாட்டம் போட்டது இலங்கை இராணுவம்.

வக்கிரம் பிடித்த அதன் அக்கிரமங்களை ‘போன்சாய்’ ஆக்கிவிட்டு, விடுதலைப்புலிகள் அமைப்பின் மீதான புகார்களைப் பூதக்கண்ணாடி கொண்டு பெரிதாக்கிக் காட்டுவதுதான், பரணாகம அறிக்கையின் ஒரே நோக்கம்.

ஒரு கோட்டைச் சின்னதாக்க, அதன் அருகில் பெரிய கோடு போடுவதில்லையா…. அதுதான் இது! மகிந்த ராஜபக்ச அமைத்த ஒரு விசாரணை ஆணையம் வேறெப்படி இருக்க முடியும்?

புலிகள் மீது சகட்டு மேனிக்குப் புழுதி வாரித் தூற்றுவதைத் தவிர வேறெதையும் புதிதாகச் செய்துவிடவில்லை, பரணாகம அறிக்கை. போரை முடித்தாக வேண்டும் என்கிற நிலையிலேயே பொதுமக்களைக் கொல்லவேண்டிய அவசியம் ஏற்பட்டதாகக் குறிப்பிடுகிற ஒரு மெத்தப்படித்த மேதாவியின் தலைமையிலான ஆணையத்திடமிருந்து இதைத்தவிர வேறெதை எதிர்பார்க்க முடியும்?

ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் ஹுசெய்னின் அறிக்கை வெளியாகும் முன்பே, பரணாகம அறிக்கை இலங்கை அரசிடம் தரப்பட்டுவிட்டது.

ஆனால், உடனடியாக அது வெளியிடப்படவில்லை. இலங்கையின் எல்லா நடவடிக்கைகளையும் போல், இதிலும் ஒரு சூழ்ச்சி இருப்பதாகக் கருத இடமிருக்கிறது.

ஹுசெய்னின் அறிக்கை இலங்கையின் பொய்முகத்தை அம்பலப்படுத்திய பிறகு, அந்த அறிக்கையிலுள்ள ஒரு சில அம்சங்களை பரணாகம அறிக்கையில் புதிதாகச் சேர்த்து,

‘இலங்கையின் விசாரணையும் ஓரளவு நியாயமானதாகத்தான் இருக்கிறது’ – என்கிற தோற்றத்தை சர்வதேச அளவில் ஏற்படுத்த இலங்கை திட்டமிட்டு முயன்றிருக்கிறது. அறிக்கையைப் படித்துப் பார்க்கும் எவராலும் இதைப் புரிந்துகொள்ள முடியும்.

பெருமளவு குற்றச்சாட்டுகள் இலங்கை இராணுவத்தின் மீது சுமத்தப்பட்ட நிலையில், விடுதலைப்புலிகள் பற்றியும் சில புகார்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.

அதையடுத்து, இந்தக் குற்றச்சாட்டுகளில் எது உண்மை எது பொய் என்பதைக் கண்டறிவது சர்வதேச விசாரணை மூலமே சாத்தியம் என்று நியாய உணர்வுள்ள ஒவ்வொருவரும் எடுத்துச் சொன்னோம்.

‘எங்கள் மீதான குற்றச்சாட்டுகளையும் நாங்களே தான் விசாரித்துக் கொள்வோம், புலிகள் மீதான குற்றச்சாட்டுகளையும் நாங்களே தான் விசாரிப்போம்’ என்று நீதிநெறிமுறைகளுக்கு மாறாக முரண்டுபிடித்தது இலங்கை.

‘இலங்கையே இலங்கையை விசாரித்துக் கொள்வது முடியாத காரியம்’ என்று மனித உரிமைகள் ஆணையாளர் ஹுசெய்ன் வெளிப்படையாகவே சொன்ன பிறகும், இலங்கை தன்னைத்தானே விசாரித்துக் கொள்ள வழிவகுக்கும் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்தது அமெரிக்கா.

‘இது என்ன நியாயம் என்று மனித உரிமைகள் பேரவையின் 47 மரப்பாச்சி பொம்மைகளில் ஒன்றுகூட கேட்கவில்லை.

அந்த அறிக்கையில் இருந்த ஒரே ஆறுதலான அம்சம், விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்கேற்பு வலியுறுத்தப்பட்டதுதான்!

சர்வதேச விசாரணை – என்கிற வார்த்தை போய், ‘வெளிநாட்டு நீதிபதி’ என்கிற வார்த்தை அதன் இடத்தைப் பிடித்துக் கொண்டது இப்படித்தான்!

ஹுசெய்னின் அறிக்கைக்குப் பிறகு நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் ‘வெளிநாட்டு நீதிபதி’ யோசனை, அதற்கு முன்பே ஒப்படைக்கப்பட்ட பரணாகம அறிக்கையில் இடம்பெற்றிருப்பதை யதேச்சையான ஒன்றாக எடுத்துக் கொள்ள முடியவில்லை.

வழக்கம் போல, இதுவும் இலங்கை – அமெரிக்கக் கூட்டுச் சதிகளில் ஒன்றோ என்கிற சந்தேகம் இயல்பாகவே எழுகிறது. இதை வைத்துப் பார்க்கையில், வரப்போகிற (வருவார்களா?) வெளிநாட்டு நீதிபதிகள் விஷயத்தில் கூட பாதிக்கப்பட்ட தமிழினம் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று தோன்றுகிறது.

அந்த வேலையை ஒற்றை மனிதராக விக்னேஸ்வரன் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

மனித நேயத்தை மட்டுமில்லாமல், மனித குல நியாயத்தையும் அறியாத பௌத்த சிங்களத் தலைவர்கள், வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிப்பது தேசத்துரோகம் என்று குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டனர்.

‘இதுதொடர்பாக இலங்கையில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும்’ என்கிறது மகிந்தனின் கைத்தடிகளில் ஒன்று, அந்த வாக்கெடுப்போடு சேர்த்து தமிழீழத்துக்கான பொது வாக்கெடுப்பையும் தமிழர் தாயகத்தில் நடத்திவிட்டால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடித்துவிடலாம்!

மைத்திரியும் ரணிலும் தயாரா – என்று சுமந்திரன் மூலம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும்.

அமெரிக்காவின் கிளார்க் பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் சிங்களப் பேராசிரியரான ஜூட் பெர்னாண்டோ (சர்வதேச அபிவிருத்தி, சமூக மேம்பாட்டுத் துறை), உண்மைகளை மூடிமறைப்பதையும், குற்றங்களுக்குப் பொறுப்பேற்பதைத் தட்டிக் கழிப்பதையும் இலங்கையின் தேசிய வெற்றியாகக் கருதும் மனநிலை குறித்து கவலை தெரிவித்திருக்கிறார்.

அறிவுஜீவிகள் அளவிலும் இப்படியொரு பிரச்சாரம் நடப்பதை ‘அறிவு விபச்சாரம்’ என்றே குறிப்பிடுகிறார் அவர்.

ஜனநாயகப் பண்புகளை இழந்துவிட்ட எந்த சமூகத்திலும் இதுதான் நடக்கும் என்கிறார் தன்னிரக்கத்துடன்! பரணாகம அறிக்கை அவரது தன்னிரக்கத்தை நிச்சயமாக அதிகரித்திருக்கும்.

‘இராணுவம் செய்த தவறுகளை, பரணாகம அறிக்கை ஏற்றுக் கொண்டுதானே இருக்கிறது… அது நடுநிலையான அறிக்கையாகத்தானே இருக்கவேண்டும்’ என்கிற எண்ணத்தைப் பரவலாக ஏற்படுத்துவதுதான் பரணாகம அறிக்கையின் முக்கிய நோக்கம்.

அதில் மிகைப்படுத்தியும் கற்பித்தும் கூறப்பட்டிருக்கிற புலிகள் மீதான புகார்களை சந்தடி சாக்கில் நம்மீது திணிப்பது, அதன் அதிமுக்கிய நோக்கம். மொத்தத்தில், பரணாகம அறிக்கை என்பது, இனப்படுகொலையைப் போலவே, ஒரு திட்டமிட்ட சதி.

பரணாகம என்கிற மாக்ஸ்வல் பராக்கிரம பரணாகம எஸ்கொயர், இலங்கையின் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றவர் என்பது முக்கியமான செய்தி அல்ல! மகிந்த ராஜபக்ச அமைத்த பொம்மை விசாரணைக் குழுவான, கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் ஆணையர்களில் ஒருவராக இருந்தவர் அவர் என்பது குறிப்பிடத்தக்க செய்தி.

நடந்த இனப்படுகொலையை மூடி மறைப்பதற்காகவே அமைக்கப்பட்டது, அந்த ஆணையம். அப்படியொரு ஆணையத்தின் மூலம் மூடிமறைப்புப் பணிகளில் பயிற்சி பெற்ற ஒருவர் என்ன செய்வாரோ அதைத்தான் பரணாகம இப்போது செய்திருக்கிறார்.

2008-2009ல் ஈழத்தில் நடந்த இனப்படுகொலைக்கும், அதற்கு முன்பு இலங்கையில் பல்வேறு காலகட்டங்களில் நடத்தப்பட்ட தமிழின அழிப்புகளுக்கும் இடையில் ஒரு ஒற்றுமை இருக்கிறது, குறிப்பிடத்தக்க வேற்றுமை ஒன்றும் இருக்கிறது.

இரண்டுமே நாம் ஒவ்வொருவரும் அறிந்த இரகசியம்தான்! வழக்கம் போல இந்த இனப்படுகொலையை இலங்கை அரசே செய்தது. இந்த இனப்படுகொலைக்கு மறைமுகமாகவே ஆசி வழங்கிவந்த இந்தியா முதலான நாடுகள், வழக்கத்துக்கு மாறாக நேரடியாகவே ஆயுதங்கள் மற்றும் ஆலோசனை வழங்கி இனப்படுகொலை நடக்கத் துணைநின்றன.

பிரபாகரனோடும் பிரபாகரனின் தோழர்களோடும் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள், மூன்றரை லட்சம் பேரிலிருந்து நான்கு லட்சம் பேர் வரை இருக்கக் கூடும்.

அவ்வளவு பெரிய மக்கள் திரள் மீது கனரக பீரங்கிகள், விமானங்களைக் கொண்டு குண்டுமாரிப் பொழிந்தால் உயிரிழப்பு கடுமையானதாக இருக்கும் என்பது இலங்கைக்கு மட்டுமல்ல, அத்தனை நாடுகளுக்கும் தெரியும்.

அதிலும் குறிப்பாக, இருபதுமைலில் இருக்கும் பாரதத்திருநாட்டுக்கு இது முழுமையாகத் தெரியும். உலகறிய நடந்த இனப்படுகொலை – என்பதுதான், 2009 இனப்படுகொலையை மற்ற இனப்படுகொலைகளிலிருந்து வேறுபடுத்துகிறது.

போரை முடிக்க பொதுமக்களைக் கொல்ல வேண்டியதாயிற்று – என்று பரணாகமவே சொல்வதிலிருந்து, ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் போரை முடித்தாக வேண்டும் என்கிற அவசியம் இலங்கை அரசுக்கு இருந்தது அம்பலமாகியிருக்கிறது.

இதை அம்பலப்படுத்தியிருப்பது ஒன்றுதான் பரணாகம செய்துள்ள உருப்படியான வேலை.

2009 மே இடைப்பகுதியிலேயே இலங்கையில் போரை முடித்துவிட வேண்டுமென்கிற அவசரம் யாருக்கு இருந்தது? மகிந்த ராஜபக்சவுக்கா? கோத்தபாய ராஜபக்சவுக்கா?

வரலாற்றைத் திரும்பிப்பார்த்தால், ஒரே ஒருவருக்குத்தான் அந்த அவசரம் இருந்தது என்பது தெளிவாகத் தெரிகிறது. அந்த ஒருவர் – கலைஞரின் ‘சொக்கத் தங்கம்’.

இந்தியாவில் தேர்தல் நடந்துகொண்டிருந்த நேரம், அது. தேர்தலில் தோற்றுவிட்டால், இலங்கையில் போர் நிறுத்தப்பட்டு விடலாம் என்று, அந்தப் போரைத் தூண்டிவிட்ட சொக்கத்தங்கங்கள் நினைத்திருக்கக் கூடும்.

அவர்கள் நினைத்ததை, அவர்கள் விதித்த காலக்கெடுவுக்குள் செய்து முடித்தனர், அவர்களது கூலிப்படையாகவே செயல்பட்ட ராஜபக்சக்கள். அப்பாவி மக்கள் உயிரிழப்பர் என்பது தெரிந்தும்,

ஒரு குறுகிய பகுதிக்குள் தஞ்சம் புகுந்திருந்த மக்கள் திரள் மீது ஈவிரக்கமில்லாமல் தாக்குதல் நடத்தி, ஓரிரு நாட்களில் நாற்பதாயிரம் பேரைக் கொன்றுகுவித்துப் போரை முடித்தன அந்த மிருகங்கள்.

ஒரே ஒரு தீய தேவதையின் வெறியைத் தணிக்க, ஓரிரு நாட்களில் எமது அப்பாவி உறவுகள் ஆயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டனர். இது நாற்பதாயிரம் உயிர்களின் ரத்தத்தால் எழுதப்பட்ட உண்மை வரலாறு.

இதை மறைத்துவிட்டு, கடைசிக்கட்டத்தில் பொதுமக்கள் பெருமளவில் கொல்லப்பட்டதற்கு புலிகளே பொறுப்பு – என்று பரணாகம சொல்வதிலிருந்து, இந்தக் காற்றாடியைப் பறக்க விட்டிருக்கும் சூத்திரதாரி யார் என்பது தெளிவாகத் தெரிகிறது.

எம்மைக் கொன்று குவித்ததுடன் நின்றுவிடாமல், கொலைப் பழியையும் எம் மீதே போட முயல்கிறார்கள் கொலையாளிகள்.

திட்டமிட்டு அழிக்கப்பட்ட இந்த இனத்துக்கு நீதி கேட்பதில் நாம் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள முடியாது. குற்றவாளிகளை மட்டுமல்ல, சூழ்ச்சி செய்தவர்களையும் சூத்திரதாரிகளையும் கூட நாம் மன்னித்துவிடக் கூடாது.

கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் உறவுகளுக்கும் நீதி வேண்டும்…. சீரழிக்கப்பட்ட எம் சகோதரிகள் ஒவ்வொருவருக்கும் நீதி வேண்டும்…. எங்கள் பாலாவுக்கு மட்டுமல்ல,

எம் இனத்தில் பிறந்ததற்காகவே கொல்லப்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் நீதி வேண்டும். குற்றவாளிகள் மட்டுமில்லாமல், தூண்டிவிட்டவர்கள், துணை நின்றவர்கள், சூத்திரதாரிகள் அத்தனை பேரும் தண்டிக்கப்பட்டாக வேண்டும்.

இதற்கான குரல் ஓங்கி ஒலிக்காவிட்டால், விரட்டி விரட்டிக் கொன்றவர்களே, ‘நாங்கள் உங்களைக் கொன்றதற்கு விடுதலைப் புலிகள்தான் காரணம்’ என்று தோசையைப் புரட்டிப் போட்டு விடுவார்கள். அதற்கு ஓர் உதாரணமாகத் திகழ்கிறது, பரணாகம அறிக்கை.

ஒரு இராணுவம் திட்டமிட்டு ஆடிய வெறியாட்டங்களுக்கு, ‘தனிப்பட்ட வீரர்களின் குற்றம்’ என்று லேபிள் ஒட்டுவதில் தொடங்கி, கல்லம் மேக்ரே அம்பலப்படுத்திய ‘போர்த் தவிர்ப்பு வலைய’ மோசடியை மூடி மறைக்க முயல்வது வரை, பரணாகம அறிக்கை என்பது ஒரு திட்டமிட்ட மோசடி.

சனல் 4 மூலம் மேக்ரே அம்பலப்படுத்தியதை, ஒட்டுமொத்த உலகும் எப்போதோ ஏற்றுக்கொண்டுவிட்டது.

இலங்கையின் எதிர்ப்பையெல்லாம் மீறி, ‘இந்த வீடியோ உண்மையானது’ என்பது ஆய்வுகள் மூலம் எப்போதோ உறுதி செய்யப்பட்டு விட்டது. அதை மறுக்கவே முடியாத நிலையில்தான், ஏற்றுக் கொண்டிருக்கிறது பரணாகம அறிக்கை.

இதில் உண்மையை ஏற்றுக்கொள்ளும் பெருந்தன்மைக்கு எங்கே இடமிருக்கிறது? பெருந்தன்மையிருந்தால், மேக்ரே சொல்வது மாதிரி – ‘நோ பயர் சோன் ஆவணப்படத்தை இலங்கைத் தொலைக்காட்சிகளில் இப்போதாவது வெளியிடுங்கள்!’

பரணாகமவின் அறிக்கையில் ஒரே ஒரு விஷயம் மட்டும்தான், அதிர்ச்சியளிக்கிற ஓர் உண்மையை வெளிப்படையாகப் பேசியிருக்கிறது.

பாலியல் வன்முறையில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினர் பெண்களை மட்டுமல்ல, ஆண்களையும் விட்டுவைக்கவில்லை – என்கிற அந்தத் தகவல், நம்முடைய நெஞ்சுக்கு நெருப்பு வைக்கிறது.

தங்களது சொந்தச் சகோதரிகளின் மாண்பைக் காக்க ஆயுதம் ஏந்திய பிரபாகரனின் தோழர்கள், எந்தக் காலக்கட்டத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் சிங்களச் சகோதரிகளின் மாண்புக்கு ஊறு விளைவித்ததில்லை என்கிற உண்மை,

இப்படியொரு அதிர்ச்சித் தகவல் வெளியாகிற நொடியிலும் நினைந்து நினைந்து நெகிழ வைக்கிறது.

(சாகரவர்தன கப்பலை வீழ்த்தி அதன் கேப்டனைக் கைது செய்த விடுதலைப்புலிகள், அவனையும் அவனது காதல் மனைவியையும் எவ்வளவு கௌரவமாக நடத்தினார்கள் என்கிற வரலாற்றை, புலிகளை விமர்சிப்பதைப் பொழுதுபோக்காக வைத்திருக்கும் பொழுதுபோகாத பொம்முகள் கண்டிப்பாகத் தெரிந்துகொண்டாக வேண்டும்.)

தங்களது தாய் மண்ணுக்காக நேர்மையோடும் ஒழுக்கத்தோடும் அர்ப்பணிப்போடும் போரிட்ட ஓர் ஈடு இணையற்ற விடுதலைப் போராட்ட வீரர்களையும், தாய்க்கும் தாரத்துக்கும் கூட வித்தியாசம் தெரியாத ஒரு பொறுக்கி இராணுவத்தையும் பொத்தாம் பொதுவாக ஒப்பிடுகிற அறிக்கையை பரணாகம இல்லை, நம்மைப் படைத்த பரமனே வெளியிட்டால் கூட ஏற்றுக்கொள்ள முடியாது.

‘யாரை யாரோடு ஒப்பிடுகிறீர்கள்… விடுதலைப் புலிகள் என்பது ஒரு விடுதலைப்போராட்ட இயக்கம். அதன் சின்னச் சின்ன குறைகளைச் சுட்டிக்காட்டி,

இலங்கை இனவாத அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையை நியாயப்படுத்தாதீர்கள்’ என்று டைம்ஸ் ஆப் இந்தியா வாசகர் ஒருவர் அண்மையில் குறிப்பிட்டிருந்ததை இங்கே சுட்டிக்காட்ட வேண்டியிருக்கிறது.

புகழேந்தி தங்கராஜ்
[email protected]

-http://www.tamilwin.com

TAGS: