தமிழினியை வதைத்தது சிங்களம்.., கொன்றது தமிழ்… வெளிப்படும் உண்மைகள்…..!

thamilini_01தமிழினி இறக்கும் வரை யாருக்கும் தெரியவில்லை மாறாக இறந்த பின் இன்று வரை தமிழினியை பற்றி கூறாதவர்கள் இல்லை, தமிழினி இறந்தது இயற்கையானாலும் அதில் பல உண்மைகளும் மர்மங்களும் மறைந்துள்ளது.

கிளிநொச்சி பரந்தன் நகரத்தில் இருந்து சில கிலோ மீற்றர்கள் தொலைவில் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் சிவபுரம் கிராமத்தில் உள்ள சிவகாமி எனும் இயற் பெயருடைய தமிழினியின் வாழ்க்கை என்பது போராட்டம் நிறைந்த வலியின் பயணமாகவே தொடர்ந்தது.

சிவசுப்பிரமணியம் சிவகாமி இவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல் துறைப்பொறுப்பாளர் தமிழினி ஆவார்.

2013 ஆம் ஆண்டு யூன் 26 ஆம் திகதி பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் வைத்து தாயாராகிய சின்னம்மா சிவசுப்பிரமணியத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.

அன்று முதல் இறக்கும் வரை கடந்த மூன்று வருடங்களாக தமிழினியை யார் கண்களுக்கும் தெரியவில்லை. மிகவும் எளிமையாகவும் அமைதியாகவும் தன் கணவணுடன் வாழ்ந்து வந்தார்.

புலம் பெயர் அமைப்புக்களை எடுத்துக் கொண்டால் தமிழினி இறந்த பின் இன்று காட்டும் அஞ்சலியின் அக்கறையை உயிருடன் இருக்கும் போது உதவியாக காட்டியிருந்தால் எவ்வளவு நிம்மதி அடைந்திருக்கும் அந்த உயிர்.

இன்று பார்த்தால் தமிழினியின் படம் இல்லாத நாடுகள் இல்லை. எம் தமிழ் இனம் ஒருவர் இறந்த பின் அவருக்கு ஒப்பாரி வைப்பதும் வாழும் போது வசை பாடுவதும் தமிழ் இனத்தின் குண இயல்பு. அதனால் அடைந்த இலாபம் என்ன என பார்த்தால் இழப்பு ஒன்று மட்டுமே மிச்சம்.

இன்றும் ஞாபகம் உள்ளது தமிழினி புனர்வாழ்வு முகாமில் இருந்த போது ஒரு முன்னாள் போராளிக்கு திருமணம் இடம் பெற்றது.

அப்போது அந்த புகைப்படம் வெளியான போது அதை தூற்றிய மனிதர்கள் எத்தனை எத்தனை அந்த படத்தில் கூட தமிழினி ஒரு அடக்கத்துடன் குனிந்த தலையுடன் தன் சக போராளிக்கு உதவியாகவே அந்த திருமணத்தில் உடனிருந்தார் அதை தூற்றாத மனிதர்கள் யார்?.

தமிழினியுடன் சில விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர்களும் விடுதலையாயினர். அந்த காலப்பகுதியில் தமிழினி கே.பியுடன் தொடர்பு, மகிந்தவுடன் அரசியலில் இணைந்து செயற்பட தாயாராகிறார் என்று கட்டியம் கூறிய எத்தனை மனிதர்கள்…?

இன்று நடந்தது என்ன…?

அவளை ஒரு இலட்சிய போராளியாக பார்த்தது எத்தனை பேர் என்றால் ஒருவர் கூட இல்லை ஒருத்தரைத் தவிர அவர் வேறு யாருமல்ல வடக்கின் முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர் தன் அறிக்கையில் பாரதி கண்ட புதுமைப் பெண் என்றதுடன் சோரம் போகாது கடைசி வரை இலட்சியத்துடன் பயணித்த வீரப் பெண் என கூறியமை மற்றவர்களுடன் ஒப்பிடுகையில் ஒரு தீர்க்க தரிசனமான கருத்தாகவே பார்க்கப்படுகிறது.

தமிழினியின் இறப்பிற்கு காரணம் புற்று நோய் என்பது உண்மை. ஆனால் அந்தப் புற்று நோய் வருவதற்கு வைத்திய ரீதியாகக் கூட சில காரணங்களைக் கூறலாம்?.

பிரதான காரணமாக கவலை என்பது கூறப்படுகிறது. கவலை என்பது ஒரு கொடிய நோய் அது மனிதனை மெல்லக் கொல்லும் விசம்.

இந்த இடத்தில் தான் விடுதலையை நேசித்த அந்த விடுதலைப் போராளி தமிழினி கண் முன் புடமிடுகிறார்.

அவரின் இறப்பு இயற்கையானாலும் பொதுவான நியதிப் படி நிறுவினால் அது செயற்கை மரணம் எனலாம். காரணம் தமிழர்களின் பெறுப்பற்ற கருத்தும் பெருத்தமற்ற வார்த்தைகளாலும் உடைந்து சுக்குநூறாகி போன தமிழினி மீள முடியாது தவித்தாள்.

அப்போது எத்தனை தமிழர் ஏறேடுத்தனர் பதில் சொல்ல எத்தனை தமிழனிடம் திறானி உண்டு பதில் இல்லை. அனைவரும் மௌனம்.

தமிழினியை கரம் பிடித்த ஜெயக்குமாரன் வரலாற்றில் முக்கிய இடம் பெறுகிறார். போராளிகளைக் கண்டாலே அருவருப்பாக பார்க்கும் இன்றைய நிலையில் தமிழினியைக் கரம் பிடித்த கணவாளன் எவ்வளவு மேல்….!

இப்படியாக தடுப்பில் இருந்த போது கொழும்பு நீதிமன்றில் ஒவ்வொரு தவணைக்கும் வரும் போது கூனிக் குறுகி நிற்கும் நிலைதான் கண் எதிரே தெரிகிறது.

அவர் சார்பில் வன்னி தேர்தல் தொகுதியின் மன்னார் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் மகன் அவர் சார்பில் நீதிமன்றில் ஆஜராகியிருந்தார். இவரைத் தவிர இன்று கூக்குரல் இடும் எந்த சட்டத்தரணியும் தமிழினியைப் பார்க்க வில்லை. ஆனால் இன்று நிலமை வேறு.

தடுப்பில் இருந்த தமிழினியை சிங்களம் வதைத்ததை தமிழினியின் கவிதை வரிகளே சாட்சி. தன் இறப்பையும் உய்த்தறிந்த தமிழினி அதற்கு காரணம் யார் எனக் கூறாமல் நாசுக்காக தன் கவி வரிகளில் இருந்து வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து இரு சகோதரிகளை மாவீரர்களாக மண்ணில் விதைத்த தாய் சின்னம்மாவிற்கு தமிழினியையும் இழந்த துயர் இதயத்தை இரண்டாக கிழித்ததாக ஆதங்கப்பட்டாலும் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் என் மகளுக்கு என் நாட்டின் தேசியக் கொடி போர்த்தியிருப்பார்கள் அந்த செல்வம் இல்லாமல் என் மகள் போகிறாளே என ஆதங்கப்பட்டு கதறி அழுதது அந்த தாயின் விடுதலையின் உறுதியையும் போராட்டத்தை விற்றுப் பிழைக்கும் மனிதர்களிடம் இத் தாய் எவ்வளவு மேல்.

ஒட்டு மொத்தத்தில் இன்று மாவீரர் நாட்கள் எவ்வளவு பிரமாண்டமாக இடம் பெறுகிறது நல்லது மாவீரர்கள் காலத்தால் அழியாத சொத்துக்கள் அவர்களை நினைப்பது வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது.

பல லட்சங்களை செலவிடும் வெளிநாட்டு அமைப்புக்கள் ஏன் தமிழினி போன்ற பல போராளிகளின் வாழ்வை மேம்படுத்த முடியாது உள்ளது. 2009இன் பின் இன்று வரையான தமிழர்களின் பல உணர்வு ரீதியான நிகழ்வுகள் இன்றைய நிலையில் சம்பிரதாயங்களாக மாறி விட்டது.

இப்படி இருக்கையில் எப்படி பரந்து பட்டு சிந்திக்க முடியும். தேர்தலில் மாற்றத்தை ஏற்படுத்த வெளிநாடுகளில் இருந்து பல லட்சங்கள் சென்றது. அதன் பலாபலன் புஸ்வானமாகி அர்த்தங்கள் இன்றி போனதை வரலாற்றில் மறக்க முடியாது.

அன்றும் இன்றும் தமிழ் இனம் உலகின் பல நாடுகளில் பலமாக இருக்கிறது பெருமையாக உள்ளது. விடுதலைக்காக போராடிய இனம் சார்ந்து என்ன செய்தது என்றால் அதன் முடிவு மைனஸ்.

ஒரு சிலர் செய்யலாம் உலகிலுள்ள ஒட்டு மொத்த தமிழனும் செய்யாத காரணம் என்ன.? தன் சுய நலனா அல்லது எதற்கு இந்த உபத்திரம் வருடம் ஒரு விடுமுறை வெளிநாடுகளில் குளிரானாலும் சொந்த வீடுகளில் சுக போக வாழ்க்கை என எண்ணிவிடுவார்களா? புரியாத புதிர் வாசிக்கும் அன்பர்களே உங்கள் மூளைக்கு விருந்து.

எந்த தமிழனும் புலிகளின் கதை கூறாமல் வெளிநாடுகளில் அடைக்கலம் புகுந்திருந்தால் அது நல்லது. அப்படி இல்லையே யாவர் வாயிலும் புலிகள் சுயமாக கால் ஊன்றி விட்டால் புலிகளா அப்படியா அதுவா என வினாவுடன் வரிகள் முடிந்து விடும்.

யூத இனம் தன் சொந்த நாட்டிலிருந்து வெளியேறினாலும் முதலில் தன் இனத்திற்காக போராடிய போராளிகளின் மேம்பாடே பிரதானமாக தென்பட்டதாம். இதில் இன்று நாம் எங்கு..? விடை எம்மிடமே…!

எமது வாழ்க்கையில் ஆடம்பரம் முக்கியம். நூறில் ஐந்து வீதத்தையாவது எம் இனத்திற்கு செலவிட்டால் எம் தாயகத்தின் நிலை என்ன…?

இன்று விடுதலைக்காக களமாடிய மூத்த போராளி தமிழினியை இழந்துள்ளது தமிழ் இனம். அதற்கும் தமிழர் தான் காரணம். அந்த பட்டியலில் பல தமிழர்களை இழப்பதற்கு முன்னர் சற்று சிந்திக்குமா தமிழ் இனம்…? காரணம் ஒவ்வெருவரிடமும் வரலாற்று பொறுப்பு உள்ளது உணர்ந்து விரைவாயா தமிழா.?

கே.ராக்கி
[email protected]

-http://www.puthinamnews.com

TAGS: