தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை வழங்குமாறு விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரிப்பு !

தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்யுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கொழும்பு மேலதிக நீதவான் அமில ஆரியசேன பிணை மனுவை நிராகரித்துள்ளார். பயங்கரவாத குற்றச் செயல் குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுதலை செய்யுமாறு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.குறித்த கைதிகள் தொடர்பில் சட்ட மா அதிபரின் அறிக்கை இன்னமும் கிடைக்கவில்லை எனவும், அறிக்கை கிடைக்கும் வரையில் பிணை வழங்க முடியாது எனவும் நீதவான் தெரிவித்துள்ளார். சட்டத்தரணிகள் சேனக பெரேரா மற்றும் துசார என். தாசுன் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் சார்பில் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். குற்றச்சாட்டு எதுவும் சுமத்தாமல் பதினெட்டு மாதங்களுக்கும் அதிகமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு நீதிமன்றில் கோரியிருந்தனர்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதனால் சட்ட மா அதிபரின் அறிக்கை இன்றி சந்தேக நபர்களுக்கு பிணை வழங்க முடியாது என நீதவான் அறிவித்துள்ளார். இதேவேளை, சந்தேக நபர்கள் தொடர்பிலான விசாரணைகள் பூர்த்தியாகியுள்ளதாகவும் விசாரணை அறிக்கைகள் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பயங்கரவாதத் தடைப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்துள்ளனர். எனினும் இதுவரையில் இந்த அறிக்கை கிடைக்கவில்லை என பயங்கரவாதத் தடைப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த மனு எதிர்வரும் 11ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை. அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில் நவம்பர் மாதம் 7ம் திகதிக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்க நேரிடும் கைதிகளும் மனித உரிமை அமைப்புக்களும் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

-http://www.athirvu.com

TAGS: