ஐ.நா. விசாரணையை எதிர்கொள்ளத் தயார்! சவால் விடுகிறார் கருணா அம்மான்

amman_karuna_001இலங்கை தொடர்பான ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணை அறிக்கையில், காணாமல்போனோரைக் கருணா குழுவினர்தான் கடத்தினர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர, கருணா கடத்தினார் என்று அதில் தெரிவிக்கப்படவில்லை எனினும், ஐ.நாவின் விசாரணையை எதிர்கொள்ள நான் தயாராகவுள்ளேன் என கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நாவின் போர்க்குற்ற விசாரணை அறிக்கையில் காணாமல்போனவர்கள் கடத்தப்பட்டதில் கருணா குழு ஈடுபட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன?” என்று அவரிடம் வினவியபோதே மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

அவர் அந்தப் பதிலில் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு,

விடுதலைப்புலிகளின் அமைப்பிலிருந்து விலகி நான் இந்தியா மற்றும் லண்டனில் தங்கியிருந்தேன். இந்தக் காலகட்டத்தில் என்னுடைய பெயரைப் பயன்படுத்தி சிலர் ஆட்கடத்தல், கொலைகளில் ஈடுபட்டுள்ளனர். ஆட்கடத்தல், கொலை தொடர்பில் இன்று பலர் கைதுசெய்யப்படுகின்றனர்.

இதிலிருந்து மக்கள் ஒன்றை மட்டும் தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது, எவர் ஆட்கடத்தல், கொலைகளில் ஈடுபட்டுள்ளனர் என்பது.

நான் இலண்டனில் கைதுசெய்யப்பட்ட பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராகத்தான் செயற்பட்டேன். என் மீதான இவ்வாறான குற்றச்சாட்டுகளில் எது உண்மை என்பதை மக்கள் நன்கு புரிந்துகொள்ள வேண்டும். எனினும், நான் ஐ.நாவின் விசாரணையை எதிர்கொள்ளவும் தயாராகவுள்ளேன்” – என்று கூறியுள்ளார்.

தமிழ் மக்களுக்கு இன்றைய காலகட்டத்தில் மாற்றுப் பலமான தமிழ்க் கட்சி ஒன்று தேவை. அதனால்தான், தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைவதற்கு எனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளேன்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப்புலிகளுடன் இருந்தவர்கள்தான் வெளிநாடுகளில் செய்தி இணையதளங்களை இயக்கி தமக்குப் பிடித்த அரசியல் தலைவர்களைப் பற்றி தமிழ்ப்பற்று எழுத்தாளர்கள் போல் எழுதுகின்றனர்.

அப்படியாயின் அவர்களையும் துரோகி என்றுதான் அழைக்கவேண்டும்” என்றும் அந்தச் செவ்வியில் கருணா அம்மான் மேலும் தெரிவித்துள்ளார்.

-http://www.tamilwin.com

TAGS: