வடக்கைப் பிரபாகரனிடம் ஒப்படைக்கத் தயாராக இருந்தார் ராஜபக்ச!

ericsolhai_prabaharanசிறிலங்கா அரசுக்குள், தமிழர்களுக்கு தன்னாட்சி உரிமையை வழங்க சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தயாராக இருந்தார் என்று சிறிலங்காவுக்கான நோர்வேயின் முன்னாள் சமாதானத் தூதுவர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். லண்டனில் கடந்த 28ஆம் நாள் நடந்த, “ஒரு உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, சிறிலங்காவில் நோர்வேயின் அமைதி முயற்சிகள்” என்ற நூல் வெளியீட்டு விழாவில் உரையாற்றிய போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். “பிரபாகரனுடன், ராஜபக்ச பின்கதவு பேரங்களைச் செய்ய வேண்டிய தேவை இருந்தது. சிங்களவர்களின் மீட்பராக அவர் தன்னைக் காட்டிக் கொண்டார். ஆனால், தனது அரசியல் எதிர்காலத்துக்கு உதவும் என்றால், சொந்த நலனுக்காக எத்தகைய அழுக்கு பேரங்களை பேசவும் அவர் தயாராக இருந்தார். அப்போது அதிபராக இருந்த மகிந்த ராஜபக்ச, வடக்கைப் பிரபாகரனிடம் ஒப்படைக்கத் தயாராக இருப்பதாக என்னிடம் கூறினார்.

நீண்ட காலத்துக்கு கையளிப்பதையோ அல்லது சமாதான முயற்சிகள் நீடிப்பதையோ விரும்பவில்லை என்றும் அது தெற்கில் தனது ஆதரவைச் சீர்குலைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். போரின் போது இரண்டு தரப்பினராலும் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் விடுதலைப் புலிகளின் தலைமையை இந்தக் குற்றங்களுக்காகத் தண்டிக்க முடியாது. அவர்கள் அனைவரும் இறந்து விட்டனர். குற்றவாளிகளை சட்டத்தின் முன் கொண்டுவருவதற்கான பொறிமுறை ஒன்று சிறிலங்காவில் உருவாக்கப்பட வேண்டும். அது தான் சிறந்தது. இதனைச் செய்ய முடியாது போனால், அனைத்துலக மட்டத்தில் செய்ய வேண்டும். போர்க்குற்றங்களுக்கு, இரண்டு தரப்புத் தலைமைகளுமே பொறுப்பேற்க வேண்டும். தனிப்பட்டவை என்று இல்லை. விடுதலைப் புலிகளால் எவராவது கொல்லப்பட்டிருந்தால், அது பிரபாகரனின் உத்தரவின் பேரில் தான் நடந்தது. வேறு எவரினாலும் கொல்லப்பட்டிருந்தால் அதற்கு அரசாங்கத் தலைமையே பொறுப்பு.

சமாதான முயற்சிகள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியினதும், ஐக்கிய தேசியக் கட்சியினதும், பூசல்களினாலேயே முறிந்து போனது. ஒருதரப்பு தமிழர்களுக்கு கணிசமான வாய்ப்பைக் கொடுக்க இணங்கும் போது மற்றத் தரப்பு அதனை எதிர்த்தது. விடுதலைப் புலிகளுடன் போரிட்டதை விட, அதிகமாக இவர்கள் ஒருவருக்கு ஒருவர் மோதிக் கொண்டனர். அது ஒரு பெரும் பிரச்சினையாக இருந்தது. பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வாய்ப்புகளை சிறிலங்கா அரசாங்கமும், பிரபாகரனும் தவறவிட்டனர். 2002இல் சந்திரிகா குமாரதுங்கவின் ஆசீர்வாதத்துடன், விடுதலைப் புலிகளுடன் பேச ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தயாராக இருந்தது. ஆனால் பிரபாகரனின் தவறினால் அந்த வாய்ப்பு தவறிப் போனது. அனைத்துலக சமூகத்தின் ஈடுபாடும் குறைவாகவே இருந்தது. அப்போது ஈராக், ஆப்கானிஸ்தான் பிரச்சினைகள் தீவிரமாக இருந்ததால், அவர்களால் சிறிலங்கா குறித்து அதிக கவனம் செலுத்த முடியவில்லை.

பிரபாகரனால் கூட்டாட்சியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவர் அதனை ஒத்திவைத்து ஒத்திவைத்து வந்தார். இறுதியில் அதனை அடைய முடியவில்லை. தனிமைப்படுத்தப்பட்ட நிலையில், பொருத்தமற்ற தகவல்களின் அடிப்படையில், எல்லா முடிவுகளையும் எடுத்தமையே விடுதலைப் புலிகளின் வீழ்ச்சிக்கு, காரணம்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

-http://www.athirvu.com

TAGS: