யுத்தப் போர்வையில் குற்றம் இழைத்தோருக்குத் தண்டனை! உண்மையைக் கண்டறிவது அவசியம்! – சம்பிக்க

champikka-01பயங்கரவாதத்திற்குள் மறைந்துகொண்டு கொலைகளைச் செய்த, ஆட்களைக் கடத்தியவர்களுக்கு தண்டனை வழங்கப்படவேண்டும். எனவே, உண்மையைக் கண்டறிய வேண்டியது அவசியமாகும். இவ்வாறு அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

இதன் மூலம் பயங்கரவாதத்திற்கு எதிராக அர்ப்பணிப்பு செய்த படையினரின் கௌரவத்தைப் பாதுகாக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

உண்மையைக் கண்டறிவது என்பது நாட்டைக் காட்டிக் கொடுக்கும் செயற்பாடாகும் எனக் கூறப்படுவது பொய்யான தேசப்பற்றாளர்களின் விதண்டாவாதமாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் இடம்பெற்ற பல்வேறு சம்பவங்கள் தொடர்பாக இன்னமும் உண்மைகள் வெளிவரவில்லை. லலித்தைக் கொன்றது புலிகளா? பிரேமதாஸவா?, பிரேமதாஸவைக் கொலைசெய்தது புலிகளா? சொத்தி உபாலியா? என்பது எமக்குத் தெரியாது.

அதேபோன்று மூதூரில் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த 17 பேர் கொலைசெய்யப்பட்டது மற்றும் தமிழ் எம்.பிக்களைக் கொலைசெய்தது யாரென்பது தெரியாது. இதுவரை காலமும் இக்கேள்விகளுக்குப் பதில் கிடைக்கவில்லை.

எனவே, இவை தொடர்பில் உண்மையைக் கண்டறிவது நல்ல விடயம்தானே.

எனவே, உண்மையைக் கண்டறிவதற்கு தேசிய வேலைத்திட்டமொன்று அவசியமாகும். நாம் படையினரையும் நாட்டையும் காட்டிக்கொடுப்பதாக இதனை அர்த்தப்படுத்த முடியாது என்றார்.

-http://www.tamilwin.com

TAGS: