ஈழத்தை ஆட்கொண்டுள்ள பிரித்தாளும் தந்திரோபாயம்! தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள்!

woman_sad_0011921ம் ஆண்டில் பிரித்தானியரால் அறிமுகப்படுத்தப்பட்ட பிரித்தாளும் தந்திரோபாயம் இன்று வரை தமிழர்களை விடுவதாக இல்லை.

குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் வாழ்கின்ற தமிழின தலைமைத்துவத்தினை உடைப்பதில், இன்று வரை பிரித்தாளும் தந்திரோபாயம் செயற்பட்டுக் கொண்டே வருகின்றது.

அந்தவகையில் தமிழினத்தினை தாங்கும் மற்றும் தாங்கிய இரண்டு முக்கிய கட்சிகளில் தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழர் விடுதலை கூட்டணியும் முக்கிய இடத்தினை வகிக்கின்றது.

இந்நிலையில், இத்தகைய இரண்டு கட்சிகளின் பிரிவு, இன்னும் 10 ஆண்டுகளின் பின் ஏன் பிரிந்தோம்? என யோசிக்க வைக்கும். ஆனால் அந்நேரத்தில் மீண்டும் இணைவதற்கான வாய்ப்புக்கள் இல்லாமல் போகும்.

1977 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தோற்றம் பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியில்தான், இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்து அமிர்தலிங்கம் செயற்பட்டார்.

அதனைத் தொடர்ந்து வந்த தேர்தல்கள் அனைத்திலும் 2004 ஆம் ஆண்டு வரைக்கும். தமிழர் விடுதலைக் கூட்டணியே வெற்றி பெற்று 2004 ஆம் ஆண்டில் 22 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு இந்நாட்டில் வரலாறு படைக்கப்பட்டது.

மறுபுறத்தில், தற்போதைய எதிர்க்கட்சி தலைமைத்துவமானது, தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்தே தெரிவாகியுள்ளது.

இம்முறை வடக்கு மற்றும் கிழக்கில் பாராளுமன்றத்திற்கு அதிகமாக தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்தே தெரிவாகியுள்ளனர்.

இந்நிலையில் இரண்டு கட்சிகளும் தமிழர்களின் அரசியலில் முக்கியமானவை என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்நிலையில் பலமான அமைப்பாக இருக்கக்கூடிய தமிழ் தேசிய கூட்டமைப்பும், தமிழர் விடுதலை கூட்டணியும் பிளவுப்படாமல் ஒரு சக்தியாக இயங்குமானால் தமிழர்களின் பேரம் பேசும் சக்தியினை எவராலும் அழிக்க முடியாத நிலை ஏற்படும்.

மாறாக தமிழினத்தை தாங்கிய, தாங்கிக் கொண்டிருக்கின்ற முக்கிய இரண்டு கட்சிகளின் சிதைவானது, எதிர்பார்த்து காத்திருக்கும் சிலருக்கும் இலவசமாக கிடைக்கும் விருந்தோம்பல் போல மாறப்போகின்றது என்பதே உண்மை.

இவ்வாறு முக்கிய இரண்டு கட்சிகளின் இத்தகைய பிளவானது, பிரித்தாளும் தந்திரோபாயத்தின் ஒரு ஆணிவேராகவே மாறப்போகின்றது.

அந்நியரினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட பிரித்தாளும் தந்திரோபாயமானது, பேரினத்திற்கு கிடைக்கப்பெற்ற மிகப்பெரும் வரமாகவே மாறிவிட்டது. ஆனால், இவ்விடயம் தமிழினத்திற்கு கிடைக்கப்பெற்ற சாபமாகவே மாறிப்போய்விட்டது.

குறிப்பாக தமிழினம் இதுவரையில் அடைந்து வந்த வலிகளை விட, இனி அடையப்போகும் வலிகள்தான் அதிகமாக போகின்றது. இதுவொரு எதிர்வு கூறல் மட்டுமே,

விழித்துக்கொள்ள தயாரில்லை எனின், விளைவுகளுக்கு தயாராக வேண்டியது தமிழினத்தின் கட்டாயம்.

குறிப்பாக வடக்கில் இருக்கின்ற பெரிய கட்சிகளை தமிழ் மக்கள் தமது பாதுகாப்பு கவசமாக கருதிவருகின்றனர்.

ஆனால், தற்போதைய நிலைப்பாட்டில் தமிழ் இனத்தினை பிளவுபடுத்தும் சூழ்ச்சியில், தமிழ் கட்சிகளே பிளவுபடும் நிலைக்கு உள்ளாகியுள்ளது.

விகிதாசாரத்தின் பிரகாரம் இலங்கை முழுவதிலும் தமிழ் மக்கள் அதிகமான பலத்தினை கொண்டிருக்கின்றார்கள். ஆனால் கட்சிகள், பதவிகள் போன்றவற்றிற்காக, தன்னை தானே பிளவுபடுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இதனால், இலங்கையில் பலமான தமிழ்கட்சிகள் தோன்றக்கூடிய சூழல் குறைவடைந்துக் கொண்டே வருகின்றது.

பக்கத்து கடைக்காரனின் வியாபாரத்தினை கெடுப்பதற்காக புதிய கடைகள் தோற்றுவிக்கப்படுவது போல், கட்சிகள் தோன்றிக்கொண்டே இருக்கின்றது.

இது தமிழனத்திற்கு கிடைக்கப்போகும் வரமா? சாபமா? என சிந்தித்தால் சாபம் என்பதே நிஜம்.

எதிர்காலத்தில் தமிழ் கட்சிகளின் அதிகரிப்பும், பிளவுகளும், பாராளுமன்றத்தில் தமிழர்களின் ஆசனங்களை குறைக்கப்போகின்றது.

பாராளுமன்றத்தில் மட்டுமல்ல உள்ளூராட்சி நிறுவனங்களிலும், தமிழர்களின் எண்ணிக்கை குறைவடைந்துக் கொண்டே போவதற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

உதாரணமாக, மலையகத்தில் மக்கள் எண்ணிக்கை அதிகம் இருந்தப்போதிலும், கட்சிகளாக காணப்படும் தொழிற்சங்கங்களின் எண்ணிக்கை அதிகரிப்பானது, மக்களை பிளவடைய வைத்துள்ளது.

இந்நிலைமையானது, மலையக கட்சிகள் பேரம் பேசும் வாய்ப்புக்களை இதுவரையில் பெரும்பாலும் இழந்தே வந்திருக்கின்றது. இதே நிலைமைதான், இலங்கை முஸ்லீம் மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது.

சிலரின் சுயநல தூண்டல்களும், பதவிகளுக்கான ஆசைகளும் கட்சிகளின் எண்ணிக்கையினை அதிகப்படுத்தி, மக்களை திரிபுப்படுத்தி பேரம் பேசும் பலத்தினை இழக்க செய்கின்றார்கள் என்பதே நிஜம்.

தமிழினத்தின் நன்மையினை மாத்திரம் கட்சிகள் உண்மையிலேயே கவனம் செலுத்துவதானால், குறிப்பிட்ட ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஒன்றுபட்டு, வாக்கு பலத்தினை ஆளும் அரசாங்கத்திற்கும், இனி ஆளப்போகும் அரசாங்கங்களுக்கு காட்ட முன் வரவேண்டும்.

மாறாக, சின்ன சின்ன பதவிகளுக்காக கட்சிகளின் எண்ணிக்கையினை அதிகரிப்பதாலும், வலுவான கட்சிகளின் பலத்தினை உடைப்பதாலும், தற்காலத்தில் வேண்டும் என்றால் எதிர்பார்க்கின்ற பதவிகள் கிடைக்கும்.

ஆனால் மாறாக எதிர்காலத்தில் தமிழரின் செல்வாக்கானது, தற்போது இருப்பதனை விடவும், அடிமட்டத்திற்கு சென்று, முற்றிலும் சிறுபான்மையினம், பெரும்பான்மை இனத்தின், காலடிக்கு விழும் துர்பாக்கிய நிலைமைக்கு உற்படும் என்பதனை உறுதியாக கூறலாம்.

ஆகவே இதற்கான பரிந்துரையாக, தமிழினம் பிளவுப்பட்டது போதும், பிளவுபட்டதனால் தோல்விக்கண்டதும் போதும்.

குறிப்பாக விடுதலை புலிகள் என்ற தமிழனத்தின் போராட்டம் தோல்வி கண்டதற்கான மிகப் பெரிய காரணம், தமிழினம் தமக்குள்ளே பிளவடைந்தமையே.
அத்தகைய பிளவுகளை ஏற்படுத்துவதற்காக தனியான சில குழுக்கள் மறைமுகமாக இயங்குகின்றன.

எதிர்காலத்திலும் இயங்கும் என்பதில் ஐயமில்லை. இந்நிலையில் அடிப்பட்ட தமிழனம், தழும்புகள் மாறலாம். ஆனால் அதற்கான காரணங்களை மறக்க கூடாது.

பிளவுபட்டுப்போகாமல் ஒன்றுப்பட்டு தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்க முன்வரும் சந்தர்ப்பத்தில், எதிர்கால தமிழினத்தின் பேரம் பேசும் பலத்தினை அதிகரிக்க முடியும்.

இல்லையேல், சிலரின் கால்களுக்கு கீழே தஞ்சம் புக வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தள்ளப்படும் என்பதில் ஐயமில்லை.

பிரித்தாளும் தந்திரோபாயத்தின் குருவான தேசாதிபதி வில்லியம் மனிங் போல, பல பில்லியன் மனிங், இலங்கை தேசத்தில் உருவாகியிருக்கின்றார்கள்.

இதன்படி தேசாதிபதி தனது பிரித்தாளும் நடவடிக்கையை பயன்படுத்துவதற்கு வாய்ப்பாக இலங்கை தேசிய காங்கிரஸ் உருவானபோது தமிழ், சிங்கள தலைவர்களுக்கிடையே பிரதிநிதித்துவம் பற்றி இடம் பெற்றிருந்த உடன்படிக்கையை வாய்ப்பாக்கிக் கொண்டார்.

இதனைப்போல, எதிர்காலத்தில் தமிழ்கட்சிகளின் பிளவுகளை சிலர் வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளலாம்.

ஆகவே, தமிழர்களின் பலத்தினை அழிப்பதற்காக தமிழர்களுக்குள்ளே சில தமிழர்கள் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

தமிழின மக்களாகிய நாம், தீர்க்க தரிசனமாக செயற்பட்டு எதிர்கால சந்ததிகளின் இருப்பினை, பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஒவ்வொரு தமிழனுக்கும் இருக்கின்றது என்பதனை மறந்து செயற்பட கூடாது.

திவ்யநாதன்
[email protected]

-http://www.tamilwin.com

TAGS: