இறுதிப் போரில் உயிரிழந்தவர்களுக்கு முள்ளிவாய்க்காலில் நினைவாலயம்!

mullivaikal_001முள்ளிவாய்க்கால் மண்ணில் இறுதி போர் நடைபெற்ற காலப்பகுதியில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் நினைவாக நினைவாலயம் ஒன்றை அமைப்பதற்கான நடவடிக்கைகளை வடமாகாண சபை முன்னெடுத்துள்ளதுடன், நினைவாலயம் அமைப்பதற்கான முதற்கட்ட நடவடிக் கைகளை முன்னெடுக்க விசேட குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

முள்ளிவாய்க்கால் மண்ணில் கடந்த 2009ம் ஆண்டு இறுதிப் போர் காலத்தில் பெருமளவு அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

அவ்வாறு கொலை செய்யப்பட்ட மக்களுடைய உடல்கள், அந்த மண்ணிலேயே புதைக்கப்பட்டதுடன், தமிழர் வரலாற்றில் துயர் பதிந்த மண்ணாகவும் முள்ளிவாய்க்கால் மண்ணே சுட்டப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த பகுதியில்,  போரில் கொல்லப்பட்ட மக்களுடைய நினைவாக நினைவாலயம் ஒன்றை அமைக்க வேண்டும் என வட மாகாண சபையில் கடந்த கடந்த 2014ம் ஆண்டு, தை மாதம் 27ம் திகதி முல்லைத்தீவு மாவட்ட மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் பிரேரணை ஒன்றை முன்மொழிந்திருந்ததுடன், குறித்த பிரேரணை சபை யில் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டிருந்தது.

எனினும் அப்போது இருந்த அரசாங்கம் அதற்கு ஒருபோதும் இடமளிக்காது எனவும், சில சந்தர்ப்பங்கள் மாறும்போது அதனை பார்த்துக் கொள்ளலாம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அப்போது தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த ஒன்றரை வருடங்களாக இந்த தீர்மானம் குறித்து எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில் கடந்த 4ம் திகதி நடைபெற்ற வடமாகாண சபையின் ஆழும் கட்சி கூட்டத்தில்,

வடமாகாண சபையின் முல்லைத்தீவு மாவட்ட மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் குறித்த விடயத்தை சுட்டிக்காட்டி கடந்த மே மாதம் 17ம் திகதி முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவேந்தல் இடம்பெற்ற பகுதி ஒரு அரசாங்க காணி எனவும்

அந்தப் பகுதியில் நினைவாலயம் அமைப்பதற்காக ஒரு பகுதி காணியை பெற்றுக் கொள்ள அமைச்சர்வாரியம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும்

இந்த வரலாற்றுக் கடமை யினை செய்வதற்கு நாங்கள் அனைவரும் முன்வரவேண்டும் எனவும் சுட்டிக்காட்டி முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றை கையளித்திருந்தார்.

இந்நிலையில் மேற்படி நினைவாலயம் அமைப்பதற்கான காணி பெறுதல் மற்றும் முதற்கட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கான, விசேட குழு ஒன்றை முதலமைச்சர் நியமித்துள்ளார்.

இதன்படி வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் உள்ளடங்கலான 3 முல்லைத்தீவு மாவட்ட மாகாணசபை உறுப்பினர்களையும், வடமாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா உட்பட 8 பேர் கொண்ட குழுவினர் இதற்காக நியமிக்கப்பட்டு முதற்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றது.

-http://www.tamilwin.com

TAGS: