இலங்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் (TNA) முன்னெடுக்கப்படும் இனப்பிரச்னை தீர்வுக்கான அனைத்து முயற்சிகளுக்கும் தாங்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவதாக கனடா தெரிவித்துள்ளது.
கனடாவுக்கு அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் சந்திப்புக்களை நடத்திய கனடிய அதிகாரிகள் இவ்வாறு வாக்குறுதியளித்துள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் தற்போது முன்னெடுக்கப்படும் இனப்பிரச்னை தீர்வுக்கான முயற்சிக்கும் இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்க முயற்சிக்கும் கனடா எப்போதும் தனது ஒத்துழைப்பை வழங்கும் என கனடிய வெளிவிவகார அமைச்சு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் கூறியுள்ளது.
கனடிய வெளிவிவகார அமைச்சு அதிகாரிகள் மற்றும் கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் நடத்தப்பட்ட இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட கனடிய மனித உரிமை மன்றத்தினர் கலந்துகொண்டனர்.
இலங்கை போர்குற்றம் குறித்து தாங்கள் தொடர்ந்து குரல்கொடுக்கும் அதேவேளை இலங்கையில் தமிழர்கள் சமவுரிமையுடன் வாழ்வதற்கான முறையான தீர்வொன்றுக்கு தாங்கள் அழுத்தம் கொடுப்போம் என்று இலங்கைத் தமிழர் பிரச்னையில் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் கனடிய நாடாளுமன்ற உறுப்பினர்களான பற்றிக் பிரவுன் மற்றும் பார்ம் கில் ஆகியோர் வலியுறுத்தினர்.