அரசியல் கைதிகளுக்கு கருணை காட்டுங்கள்! ஜனாதிபதிக்கு அகில இலங்கை சைவமகா சபை கடிதம்

maithiri_saivam_001அரசியல் கைதிகளுக்கு கருணை காட்டுமாறு கோரி அகில இலங்கை சைவ மகா சபையினர் ஜனாதிபதிக்கு கோரிக்கை மனு ஒன்றை அனுப்பியுள்ளனர்.

வடமாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஊடாக இந்த மனு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை வரலாற்றில் நல்லாட்சி எனும் மாற்றத்துக்காக தியாக உணர்வோடு களம் இறங்கி ஜனாதிபதியாக ஆட்சிபுரியும் உங்களுக்கு பல தசாப்தங்களாக கண்ணீரையே
வாழ்க்கையாக்கிக் கொண்டிருக்கும் மனிதர்கள் சார்பாக, அன்பையும் கருணையையும் போதிக்கின்ற மதங்களின் சார்பாக இந்த மனுவை சமர்ப்பிக்கின்றோம்.

உலகம் முழுவதிலும் மனிதர்கள் தாங்கள் நேசிக்கும் கொள்கை, மறுக்கப்படும் உரிமை, கருத்தியல் சார்ந்த முரண்பாடுகளுக்காக போராட்டங்களை முன்னெடுக்கின்ற நிலை
வரலாற்றுக் காலம் முதல் உருவாகியுள்ளது.

அவை அரசியல் ரீதியான போராட்டங்களாகவே கருதப்படுகின்றன. அவை முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் அதுசார்ந்த விடயங்களில் ஈடுபட்டோர் நல்லிணக்க அடிப்படையில் மன்னிக்கப்படுவர்.

இவை அனைத்தையும் நீங்கள் அறிவீர்கள். அதற்கு இலங்கையும் விதிவிலக்கு அல்ல என்ற ரீதியில் கடந்த காலங்களில் புரட்சியில் ஈடுபட்ட ஜே.வி.பி இயக்கத்தினர் பொது
மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டமையை மீள நினைவுபடுத்துகின்றோம்.

அந்தவகையில் தனிப்பட்ட நலனுக்காகவோ காழ்ப்புணர்வுகளோ இன்றி கொள்கை சார்ந்த, கருத்தியல் சார்ந்த போராட்டத்தில் ஈடுபட்டமைக்காக சிறைகளில் பல ஆண்டுகளாக
வாழும் மனிதர்களின் குடும்பத்தினர் அளவற்ற துயருடன் நடைப்பிணங்களாக வாழும் அவலத்தை முடிவுக்குக் கொண்டுவர உங்களை அன்பையும் கருணையையும் போதிக்கும்
மதங்கள் சார்பில் வேண்டுகின்றோம்.

நல்லிணக்கம் பற்றிப் பேசப்படும் சந்தர்ப்பத்தில் ஏற்கனவே பல ஆண்டுகள் குற்றம் சுமத்தப்படாமலேயே தண்டனை அனுபவித்த மனிதர்களுக்குக் கருணை காட்டிப் பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்யக் கோரிக்கை விடுக்கிறோம்” என்றுள்ளது.

-http://www.tamilwin.com

TAGS: