இலங்கை அரசுக்கும் எமக்கும் இடையில் தொடர்பாளர்களாக மாத்திரம் ஐ.நாவின் காணாமல்போனோர் செயற்குழு இருப்பதால் எமக்கு எந்தப் பலனுமில்லை என காணாமல் போனோரின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டுள்ள ஐ.நா. செயற்குழுவினர் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு நேற்று பயணம் மேற்கொண்டிருந்தனர். இதன்போது அங்கு பிரத்தியேக
இடம் ஒன்றில் வைத்து, காணாமல்போனோரின் உறவினர்கள் 25 பேரிடம் விசாரணைகளை மேற்கொண்டனர்.
போரின் இறுதிக் கட்டத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்து காணாமல்போனவர்கள், இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வந்த பின்னர் காணாமல்போனவர்கள், இராணுவத்தினரிடம் நேரடியாக கையளிக்கப்பட்டு காணாமல்போனவர்கள் தொடர்பான உறவுகளே நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
எப்படிக் காணாமல்போனார் என்பதைச் சுருக்கமாகச் சொல்லச் சொன்னார்கள். நாங்கள் அதனைச் சொன்னோம். குறிப்பெடுத்துக் கொண்டார்கள். வேறு எதையும் கேட்கவில்லை.
ஒரு படிவத்தை நிரப்பித் தருமாறு தந்தார்கள்” என்று விசாரணையில் பங்கெடுத்த ஒருவர் குறிப்பிட்டார்.
ஐ.நாவுக்கு காணாமல்போனவர்கள் தொடர்பில் முறைப்பாடு செய்யும் படிவம், விசாரணையில் பங்கெடுத்த எல்லோரிடமும் வழங்கப்பட்டுள்ளது. இதனைப் பூரணப்படுத்தி
இரண்டு வாரங்களுக்கு அனுப்பிவைக்குமாறு ஐ.நா. அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இலங்கை அரசிடமும், குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஒட்டுக் குழுக்களிடமும் உங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை விசாரணை செய்யச் சொல்வோம். இதற்காக
உங்களுக்கும் விசாரணை மேற்கொள்ளும் இலங்கை அரசுக்கும் இடையில் தொடர்பாளர்களாக நாங்கள் இருப்போம்” என்று விசாரணை மேற்கொண்ட ஐ.நா. அதிகாரிகள் தெரிவித்தாக, காணாமல்போனோரின் உறவுகள் குறிப்பிட்டனர்.
ஐ.நா. குழு மூலம் நம்பிக்கை ஏற்பட்டுள்ளதா என்று வினவியபோது, “அவர்கள் எந்த உறுதியான பதிலும் வழங்கவில்லை. தொடர்பாளர்களாக அவர்கள் இருப்பதால் எமக்குப்
பலனில்லை.
அவர்கள் கண்காணிப்பாளர்களாக இருக்கவேண்டும். சுயாதீனமான – சர்வதேச விசாரணை நடத்தப்படுவதன் மூலமே எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அறிய முடியும்” என்று விசாரணைக்கு முகம் கொடுத்த ஒருவர் தெரிவித்தார்.
காணாமல்போனோரின் உறவுகளுக்கு இராணுவத்தினர் – இராணுவப் புலனாய்வாளர்களினால் அச்சுறுத்தல் உள்ளது என்று விசாரணையின்போது சாட்சியமளித்த சிலர்
குறிப்பிட்டதற்கு, இனிமேல் அவ்வாறு இடம்பெறாது.
அவ்வாறு ஏதாவது இருந்தால், இந்தத் தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்புகொள்ளுங்கள் என்று தொலைபேசி இலக்கத்தையும் ஐ.நா. அதிகாரிகள் வழங்கியுள்ளனர்.
-http://www.tamilwin.com