தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பா? புனர்வாழ்வா?

kaithikal_sirai_001பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதா அல்லது புனர்வாழ்வுக்குட்படுத்திவிட்டு அவர்களை விடுதலை செய்வதா என்பது தொடர்பில் அரசு நாளை முடிவெடுக்கவுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் அலரிமாளிகையில் நாளை திங்கள் கிழமை கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு
அமைச்சர் டி.எம். சுவாமிநாதன், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உட்பட உயர்மட்டப் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

தம்மை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தமிழ் அரசியல் கைதிகள், கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதிக்கு கடிதமொன்றை
அனுப்பியிருந்தனர்.

தம்மை பொதுமன்னிப்பில் விடுதலை செய்யுமாறும் அவ்வாறு இல்லையேல் புனர்வாழ்வளித்தாவது விடுவிக்குமாறும் அந்தக் கடிதத்தினூடாக அவர்கள் கோரிக்கை
விடுத்திருந்தனர்.

தமிழ் அரசியல் கைதிகளின் இந்தக் கோரிக்கை தொடர்பில் சட்டமா அதிபருடன் ஜனாதிபதி பேச்சு நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே இன்றைய விசேட கூட்டம் இடம்பெறவுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தெரிவித்தார்.

அதேவேளை, வடக்கு மாகாண சபை முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவைக் குழாமை கடந்த வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துப் பேச்சு நடத்தியபோது, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரத்துக்கு திங்கட்கிழமை (இன்று) இறுதி முடிவை அறிவிப்பேன் என்று ஜனாதிபதி உறுதியளித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

-http://www.tamilwin.com

TAGS: