புலம்பெயர்ந்தோர் தொடர்பில் அரசாங்கம் காண்பிக்கும் நல்லெண்ணம்!

maithiri_ranil_001புலம்பெயர்ந்தோர் தொடர்பில் புதிய அரசாங்கம் நல்லெண்ணப் போக்கை வெளிக்காட்டி வருவது வரவேற்கத்தக்க நடவடிக்கையாக அமைந்துள்ளது.

புலம்பெயர்ந்த தமிழர்களை மீண்டும் நாட்டுக்கு அழைப்பதற்கும் நாட்டின் அபிவிருத்திகளில் அவர்களை பங்கேற்கச் செய்வதற்கும் புதிய அரசாங்கமானது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.

கடந்த அரசாங்க காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளதாக குற்றம்சாட்டி 16 தமிழ் அமைப்புக்களையும், 424 தனிப்பட்ட நபர்கள் மீதும் தடை விதித்து வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது.

இத்தகைய அறிவிப்பு புலம் பெயர்ந்த மக்கள் மத்தியில் குறிப்பாக தமிழ் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்த அறிவிப்பை அடுத்து குறித்த 16 அமைப்புக்களின் பிரதிநிதிகளும், தனிப்பட்ட முறையில் பெயர் குறிப்பிட்டு செயற்பட தடை விதிக்கப்பட்ட நபர்களும் இலங்கைக்கு வர முடியாத நிலை இருந்து வந்தது.

இந்த நிலையில் புதிய அரசாங்கமானது எட்டு புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மற்றும் 270 புலம்பெயர் தமிழர்கள் மீதான தடையை தற்போது நீக்கியுள்ளது.

1968 ஆம் ஆண்டின் 45ம் இலக்க ஐக்கிய நாடுகள் சட்டத்திற்கு அமைவாக 2012ம் ஆண்டின் முதலாம் இலக்க ஐக்கிய நாடுகள் சபையின் கட்டளையின் 4 (7) க்கு அமைவாக 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 21ம் திகதி 1854 /41ம் இலக்க அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக அப்போதைய பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவினால் இந்தத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள 270 புலம்பெயர் தமிழர்களும், எட்டு தமிழ் அமைப்புக்களும் தடைப்பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தற்போது எட்டு தமிழ் அமைப்புக்கள் மற்றும் 154 பேருக்கு எதிராகவே தடை தொடர்கின்றது.

உலகத் தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, கனேடிய தமிழர் தேசிய அவை, தமிழ் இளையோர் அமைப்பு, உலகத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, கனேடிய தமிழ் காங்கிரஸ், அவுஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ், தமிழ் தேசிய அவை ஆகிய அமைப்புக்கள் மீதான தடையே தற்போது நீக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழர் புனர்வாழ்வுக் கழகம், தமிழர் ஒருங்கிணைப்புக் குழு, உலகத் தமிழர் இயக்கம், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், தமிழீழ மக்கள் அவை, உலகத் தமிழர் நிவாரண நிதியம், தலைமைச் செயலகக் குழு ஆகிய எட்டு அமைப்புக்கள் மீதான தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

யுத்தம் முடிவடைந்து ஆறு வருடங்கள் ஆகிவிட்டன. யுத்தம் முடிவடைந்ததையடுத்து புலம்பெயர் தமிழர்கள் இலங்கைக்கு உதவ வேண்டுமென்ற தோரணையில் அன்றைய மஹிந்த ராஜபக்ச அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்தது.

இதனையடுத்து புலம்பெயர் தமிழர்களின் குறிப்பிட்டளவானோர் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்திருந்தனர். இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமது உறவுகளுக்கு அவர்கள் உதவுவதற்கும் நாட்டில் முதலீடுகளை மேற்கொள்வதற்கும் விருப்பம் கொண்டிருந்தனர். ஆனால் அதற்கேற்ற சூழலை அன்றைய அரசாங்கம் உருவாக்கவில்லை.

புலம்பெயர் தமிழ் மக்களின் மனங்களை வெல்லும் வகையிலான செயற்பாடுகள் எதுவும் இடம் பெறவில்லை. மாறாக வெறும் அறிவிப்புக்களே வெளியிடப்பட்டிருந்ததுடன் அதற்கு எதிரான செயற்பாடுகளே தொடர்ந்து வந்தன.

புலம்பெயர் தமிழர்கள், புலிகள் என்ற தோரணையிலேயே அன்றைய அரசாங்கத்தின் செயற்பாடு அமைந்திருந்தது. அரசியல் இலாபம் கருதி புலம்பெயர் தமிழர்களுக்கு புலிச்சாயம் பூசி புலிப்பூச்சாண்டி காட்டி வந்த அன்றைய அரசாங்கத்தின் செயலினால் புலம்பெயர் தமிழர்கள் நம்பிக்கை இழந்தனர்.

இந்த சூழ்நிலையில் தான் 2014ம் ஆண்டு மார்ச் மாதம் 21ம் திகதி புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மீதும் தனிப்பட்ட நபர்கள் மீதும் அரசாங்கம் தடை விதித்தது. இதனால் இலங்கைக்கு திரும்ப வேண்டுமென்று எண்ணியிருந்த புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் எதிர்மாறான நிலை ஏற்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி ஆக்கப்பட்ட பின்னர் புதிய அரசாங்கம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் பதவியேற்றிருந்தது. புதிய அரசாங்கமானது புலம்பெயர் தமிழர்களது ஒத்துழைப்பை பெறுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டது.

கடந்த அரசாங்க காலத்தில் புலம் பெயர்ந்தோருக்கு வழங்கப்பட்ட இரட்டை பிரஜாவுரிமை கூட இடைநிறுத்தப்பட்டது. விடுதலைப் புலிகள் புலம் பெயர் தமிழர்கள் மத்தியில் பலமடைகின்றார்கள், அது நாட்டுக்கு ஆபத்து என்ற பொய்யான கருத்தினை பரப்பிய அரசாங்கம் சிங்கள மக்களின் வாக்குகளை கவரும் வகையில் புலிப்பூச்சாண்டி காட்டி வந்தது.

புதிய அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர் புலம் பெயர்ந்த மக்களுக்கான இரட்டைப் பிரஜாவுரிமை மீண்டும் வழங்கப்படுகிறது. கடந்த வாரம் அலரிமாளிகையில் நடைபெற்ற வைபவத்தில் 2000 புலம்பெயர்ந்தோருக்கு இரட்டை பிரஜாவுரிமை வழங்கிவைக்கப்பட்டது.

ஜனவரி மாதம் அமைக்கப்பட்ட புதிய அரசாங்கத்தில் வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட மங்கள சமரவீர புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தார்.

லண்டனுக்கு விஜயம் செய்த வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோர் பிரித்தானிய தமிழர் பேரவை உட்பட்ட பல அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்தித்து பேசியிருந்தனர்.

புலம்பெயர் தமிழர்கள் நாட்டுக்கு திரும்பி இலங்கையின் அபிவிருத்தியில் பங்கேற்க வேண்டுமென்று அமைச்சர் மங்கள சமரவீர நேரடியாகவே கோரிக்கைகளை விடுத்திருந்தார். இதனைவிட இந்த வருட இறுதியில் புலம்பெயர்ந்தோருக்கான மாநாடொன்றினையும் கொழும்பில் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனாலும் இத்தகைய அறிவிப்புகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆதரவு அணியினர் கடும் எதிர்ப்புக்களை தெரிவித்து வந்தனர். அரசாங்கம் நாட்டை மீண்டும் புலிகளிடம் தாரைவார்க்க உள்ளதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர்.

தற்போது புலம்பெயர் அமைப்புக்கள் மற்றும் தமிழர்கள் மீதான தடை நீக்கப்பட்டமை தொடர்பிலும் மஹிந்த ஆதரவு அணியினர் கடும் இனவாத கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கொழும்பில் நேற்று முன்தினம் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் தடைகளை நீக்கி, தடுப்பில் உள்ள புலிப்பயங்கரவாதிகளை விடுதலை செய்வதும், இந்த நாட்டை பயங்கரவாதத்திலிருந்து காப்பாற்றிய இராணுவத்தை கைது செய்வதுமே இந்த நாட்டின் நல்லாட்சியாக உள்ளது.

இந்த அடிப்படையில் புலி அமைப்புக்களின் தடைகள் ஏன் நீக்கப்பட்டன என்று அரசாங்கம் விளக்கமளிக்கவேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்திருக்கின்றார்.

இவ்வாறு புலிகளின் அமைப்புக்கள் மீதான தடை நீக்கப்படுவது நாட்டுக்கு பெரும் அச்சுறுத்தலாகும். எனவே, இந்த விடயத்தில் மக்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேபோல், தடை நீக்கத்திற்கு எதிராக பல்வேறு இனவாத கருத்துகள் எழுப்பப்படுகின்றன. ஆனாலும் அரசாங்கமானது இந்த இனவாதிகளின் கருத்துகளுக்கு செவிமடுக்காது புலம் பெயர் தமிழர்கள் விடயத்தில் விட்டுக்கொடுப்புடன் செயற்படவேண்டும்.

இதன் மூலமே புலம்பெயர் தமிழர்களின் மனங்களை வெல்ல முடியும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

-http://www.tamilwin.com

TAGS: