விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவரான பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்லி, விதவிதமான படங்களைக் காட்டி முடித்த ராணுவம், இப்போது பொட்டு அம்மான் பற்றிய செய்திகளைச் சிதறவிட்டுக்கொண்டு இருக்கிறது.
புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவரான பொட்டு அம்மான், பிரபாகரனுக்கு நிகரான போராளியாகத் தன்னை நிரூபித்தவர்.
போரின் முடிவில் பிரபாகரன், சார்லஸ் ஆண்டனி, சூசை உள்ளிட்ட புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர்களைக் கொன்றுவிட்டதாகச் சொன்ன ராணுவம், பொட்டு அம்மான் குறித்து எந்தத் தகவலையும் சொல்லவில்லை.
அதனால் ‘கண்டிப்பாக பொட்டு அம்மான் தப்பியிருப்பார். தலைவர் பிரபாகரனையும் காப்பாற்றியிருப்பார். புலிகளின் போராட்டம் மறுபடியும் தொடங்கும்’ என்றெல்லாம் உலகத் தமிழர்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.
ஆனால், இப்போது பொட்டு அம்மானை கொன்று விட்டதாகவும் அவருடைய பிரேதம் கிடைக்காமல் போய் விட்டதாகவும் இலங்கையின் பாதுகாப்பு செயலாளரான கோத்தபய ராஜபக்ஷே சொல்லி இருப்பது, தமிழர்களின் நம்பிக்கையை அசைத்துப் பார்த்திருக்கிறது!
பொட்டு அம்மான் குறித்துப் பரபரப்பைக் கிளப்பும் புள்ளிகளிடம் பேசியபோது,
”பொட்டு அம்மானுக்கு உலகம் முழுக்க உளவு சம்பந்தமான ஆட்கள் பழக்கத்தில் இருக்கிறார்கள். கொள்முதல் செய்த ஆயுதங்களை பத்திரமாகக் கொண்டு வருவது தொடங்கி, உலகளாவிய தொடர்புகளைப் பயன்படுத்தி ஒவ்வொரு நாடுகளின் நிலைப்பாடுகளை உணர்வது வரை பொட்டு அம்மானுக்கு செல்வாக்கு உண்டு.
ராஜீவ் காந்தி கொலையின் போது சின்ன சாந்தன், ‘பொட்டு’ என்கிற வார்த்தையைப் பயன்படுத்திக் கடிதம் எழுதியதை வைத்துத்தான் பொட்டு அம்மான் என்பவர் பிரபாகரனோடு இருக்கிறார் என்பதே இந்திய உளவுப் பிரிவினருக்குத் தெரிந்தது.
அதன் பிறகுதான் இந்திய உளவுப் பிரிவு அதிகாரிகள் ‘பிரபாகரனின் பாதி பலம் பொட்டுதான்’ என்று சொல்லி, அவரை ராஜீவ் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்த்தார்கள்.
யார் கண்ணுக்கும் சிக்காமல், சர்வதேசத் தொடர்புகளில் கில்லாடியாக இருந்த பொட்டு அம்மான், புலிகளின் இறுதிப் போர் வரை களத்தில் இருந்திருக்கிறார். கடைசிக் கட்ட நெருக்கடிகள் பொறுக்காமல், புலிகள் பெரும் சிரமத்துக்கு ஆளானபோது, சிலர் பொட்டு அம்மானிடம் சமாதானம் பேசியிருக்கிறார்கள்.
பொட்டு அம்மானுக்கு நெருக்கமான உளவு ஆட்கள் மூலமே அவரை வளைத்து, நினைத்துப் பார்க்க முடியாத சதித் திட்டத்தைத் தீட்டியிருக்கிறது இராணுவம். அதன் பிறகுதான் நம்பிக்கையின் அடிப்படையில் நடேசன், புலித்தேவன் உள்ளிட்டோரை பொட்டு அம்மான் இராணுவ முகாமுக்கு அனுப்பியிருக்கிறார்.
ஆனால் அதன் பிறகு நடந்த கொடூரங்கள் புலிகளின் மொத்த தலைவர்களையும் வீழ்த்தி விட்டது. தனது பிரேதம்கூட இராணுவத்தின் கையில் சிக்கக் கூடாது என எண்ணிய பொட்டு கரும்புலியாக மாறி வெடித்துச் சிதறி விட்டார். அதனால்தான் அவருடைய உடலை இராணுவத்தால் கண்டறிய முடியவில்லை…” என்கிறார்கள்.
புலிகளுக்கு நெருக்கமான தொடர்பில் இருப்பவர்களோ, இதை அடியோடு மறுக்கிறார்கள். ”இராணுவத்திடம் சுலபமாகச் சிக்குகிற அளவுக்கு பொட்டு சாதாரண ஆள் இல்லை. போரின் ஆரம்பத்திலிருந்தே உலகளாவிய நெட்வொர்க் மூலமாக பன்னாட்டு எண்ணங்களையும் கச்சிதமாக அறிந்துவைத்திருந்த பொட்டு அம்மான், ‘எந்த நாடும் நமக்கு உதவும் எண்ணத்தில் இல்லை!’ என்று பிரபாகரனிடம் சொல்லியிருக்கிறார்.
அதன்பிறகு புலிகளின் போர்த் திட்டம் வேறு திசையில் பயணித்திருக்கிறது. போராளிகள் இலங்கையின் பல பகுதிகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
கட்டுநாயக்கா விமான நிலையம் மற்றும் கொழும்புப் பகுதிகளைப் புலிகளின் இராணுவம் தாக்கிய தினத்தன்றே பன்னாட்டு உளவு அமைப்புகளையும் ஒருசேர திசைதிருப்பி, அடுத்தகட்ட தளபதிகளாக உருவெடுத்திருக்கும் பல போராளிகளை வெளியிடங்களுக்கு அனுப்பிவிட்டார் பொட்டு அம்மான். பிரபாகரன் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் குடும்பத்தினரும் அன்றைக்கே கடல் வழியாகத் தப்பிவிட்டார்கள்.
எச்சரிக்கை உணர்வில் பொட்டுவை யாருமே மிஞ்ச முடியாது. இந்திய உளவு அமைப்பான ‘ரா’, இரு போராளிகள் மூலமாக மாத்தையாவின் மனதை மாற்றி, பிரபாகரனைக் கொல்ல முயன்றது. அப்போது மாத்தையாவையே கொன்று, ‘ரா’வின் திட்டத்தைத் தவிடுபொடி ஆக்கியவர் பொட்டு.
கருணா, சிங்கள அரசோடு லேசான தொடர்பில் இருந்த போதே, அது குறித்துப் பிரபாகரனிடம் எச்சரித்திருக்கிறார் பொட்டு. ஆனாலும், கருணாவின் போர்த் திறமை மீது அசாத்திய நம்பிக்கை வைத்திருந்த பிரபாகரன், அதைப் பொருட்படுத்தாமல் விட்டுவிட்டார்.
அந்தளவுக்குக் கில்லாடியான பொட்டு, போரின் முடிவு எந்தளவுக்கு எதிர்மறையாக இருக்கும் என்பதை முன்கூட்டியே அனுமானித்திருக்கிறார். அதன்படிதான், பிரபாகரனின் மகனான சார்லஸ் ஆண்டனி களத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார்.
பிரபாகரன் போலவே இருந்த ஒருவரின் சடலத்தை இராணுவத்தின் கண்ணில் படும்படி பொட்டுவின் ஆட்கள்தான் போட்டிருக்கிறார்கள். அதை சிங்கள இராணுவமும் நம்பிவிட்டது.
பிரபாகரனின் உடலைப் பார்வையிட வந்த கருணா, இராணுவத்தைப் பொட்டு நல்லா ஏமாத்திட்டான். அவன் பத்து பிரபாகரனுக்கு சமம்’ என்று கலவரத்தோடு சொன்னதாக சிங்களத் தரப்பிலிருந்தே செய்திகள் கசிகிறது.
புலிகள் அமைப்பில் இருந்த முக்கியத் தளபதிகளில் 27 பேரின் உடல்களைத்தான் இராணுவம் இதுவரை அடையாளம் கண்டிருக்கிறது. இதர தளபதிகள் இருக்கிறார்களா, இல்லையா என்பது இராணுவத்துக்கே புரியாத புதிர்தான்.
ராஜீவ் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டிருக்கும் பொட்டுவின் இறப்புச் சான்றிதழைக் கேட்டு இந்திய அரசு, இராணுவத்தை நச்சரித்து வருகிறது.
பொட்டுவின் இறப்புச் சான்றிதழ் கிடைத்தால் ராஜீவ் கொலை வழக்கு விசாரணையை ஒரேயடியாக மூடிவிடலாம் என்கிற ரீதியிலும் இந்திய அரசு யோசித்துக் கொண்டிருக்கிறது.
ஆனாலும், அரசால் பொட்டு குறித்த எந்த விவரத்தையும் சேகரித்து இந்தியாவிடம் கொடுக்க முடியவில்லை.
இதற்கிடையில், இதர போராளிகளையும் தளபதி களையும் ஒருங்கிணைத்து, பொட்டு மறுபடியும் போராட்டத்தைத் தொடங்கப் போவதாகவும் பலமான பேச்சு இருக்கிறது. அதனால்தான் கஞ்சிகுடிச்சாறு மற்றும் வன்னிக் காடுகளுக்குள் இராணுவம் திடீரென தேடுதல் வேட்டையைத் தொடங்கியிருக்கிறது.
இராணுவத் தரப்பிலேயே இருக்கும் வேறு சில அதிகாரிகள், ‘பொட்டு உயிருடன் தப்பியிருக்க வாய்ப்பிருக்கிறது’ என பகிரங்கமாகவே ஒப்புக்கொண்டிருக்கிறார்கள். பொட்டு பற்றிய விவரங்கள் வெளியே வரும் நாள், புலி களின் மறு அவதார நாளாக இருக்கும்!” என்கிறார்கள் புலி ஆதரவுப் புள்ளிகள்.
மிகச் சிறந்த எழுத்தாளராக புலிகள் அமைப்பில் உருவெடுத்த பொட்டு அம்மான், இள வயதிலேயே தன் தங்கையைக் களபலி கொடுத்தவர். இரு முறை பிறநாடுகளின் தூண்டுதலில் பிரபாகரன் கொல்லப்படவிருந்தஎபோது, அதை முறியடித்து, பன்னாட்டு உளவு அமைப்புகளாலேயே ‘புலிகளின் பெரிய மூளை’ என்று குறிப்பிடப்பட்டவர்.
பொட்டு அம்மானை பற்றிய புதிர் நீடிக்கும்வரை இராணுவத்தின் படபடப்பு தணியாது என்பது தான் நிஜம்!
-http://www.tamilwin.com