தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகளும், சச்சரவுகளும் எப்போதும் வழக்கமான ஒன்றாகவே இருந்தாலும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகளை அவ்வாறானதொன்றாக கருத முடியவில்லை
வடக்கு மாகாணசபையில் இன அழிப்புத் தீர்மானம் நிறைவேற்றிய பின்னர், இருவருக்கும் இடையில் தோன்றிய கருத்து வேறுபாடுகள், நாடாளுமன்றத் தேர்தல் கால செயற்பாடுகள், கருத்துக்களால் தீவிரமடைந்தன.
நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், இந்த விவகாரம் கொஞ்சம் தணிந்து போயிருந்தாலும், அண்மையில், அவுஸ்ரேலிய வானொலி ஒன்றுக்கு சுமந்திரன் அளித்த செவ்வியைத் தொடர்ந்து இந்த விவகாரம் சூடு பிடிக்கத் தொடங்கியிருக்கிறது.
அவுஸ்ரேலியாவில் சுமந்திரன் வெளியிட்ட கருத்துக்கு, முதலமைச்சர் விக்னேஸ்வரன் பதில் அறிக்கை ஒன்றை வெளியிட, அதற்கு சுமந்திரன் பதில் கொடுக்க, ஊடகங்களின் வாய்க்கு மட்டுமல்ல, வெறும் வாயை மென்று கொண்டிருந்த அரசியல்வாதிகள் பலருக்கும் கூட இது நல்ல தீனியாகவே மாறியிருக்கிறது.
இந்த முரண்பாடுகளும், பரஸ்பர குற்றச்சாட்டுகளும், தமிழ் மக்களுக்கு குழப்பத்தை மட்டுமன்றி, எரிச்சலையும், விசனத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றன.
இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு பேருமே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் முக்கியமானவர்கள். தமிழர் அரசியல் இப்போது முக்கியமான பாத்திரத்தை வகிப்பவர்கள்.
இருவருமே போருக்குப் பின்னர், தமிழ்த் தேசிய அரசியல் களத்துக்கு வந்தவர்கள் என்று சொல்வதை விட, இழுத்து வரப்பட்டவர்கள் என்று கூறுவதே பொருத்தம்.
இவர்கள் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் வருவதற்கு முன்னர், அரசியலுக்கு வருவதற்கான தேவைப்பாடுகள் எதையும் கொண்டிருந்தவர்களும் அல்லர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலப்படுத்துவதற்காக, இந்த இரண்டு பேரையும், அரசியலுக்கு இழுத்து வந்தவர், கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தான்.
2010 நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர், தேசியப்பட்டியல் ஆசனத்துக்காக, ஒரு சட்டநிபுணர் என்ற வகையில், எம்.ஏ.சுமந்திரனை அரசியலுக்கு அழைத்து வந்தார் சம்பந்தன்.
அதுபோலவே, 2013ஆம் ஆண்டு, வடக்கு மாகாணசபைத் தேர்தலில், ஒரு அசைக்கமுடியாத பலம்வாய்ந்த வேட்பாளரை நிறுத்த வேண்டிய கட்டாயம் எழுந்த போது, ஓய்வுபெற்ற நீதியரசரான சி.வி.விக்னேஸ்வரனையும் அவரே அழைத்து வந்தார்.
இந்த இரண்டு பேருக்குமே, அரசியலுக்கு வந்து தான், பெயர், புகழையோ, பணத்தையோ சேர்க்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கவில்லை.
விக்னேஸ்வரன், உயர்நீதிமன்றத்தில் நீதியரசராக இருந்து ஓய்வு பெற்றிருந்தவர்.
சுமந்திரனும், சட்டப்புலமையால், நீதித்துறையில் தனக்கென ஒரு தனித்துவத்தை பெற்றிருந்தவர்.
இந்த இருவருக்குமே, அரசியல் ஊடாகத் தான் தாம் புகழ்பெற வேண்டும் என்ற கனவு இருந்திருக்கவில்லை.
சந்தர்ப்பவசமாக, அரசியலுக்கு சம்பந்தனால் இழுத்து வரப்பட்ட இவர்களுக்குள் இப்போது, ஏற்பட்டிருக்கும் கருத்து முரண்பாடுகள், பெரும் பகையாக உருவெடுப்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.
அவர்களுக்கிடையில் அத்தகைய நோக்கம் இருக்கிறதா என்று கூற முடியாவிட்டாலும், அவர்களுக்கிடையில் பெரும் பகையை மூட்டுவதில் வெளிச்சக்திகள் அதீத ஆர்வம் காட்டுகின்றன என்பது வெளிப்படை.
இந்தநிலையில், சம்பந்தன் மீது மதிப்பு வைத்திருக்கும் – அவர் மூலம் அரசியலுக்கு அழைத்து வரப்பட்ட இருவருமே, ஒருவருக்கொருவர் குற்றச்சாட்டுகளை வீசுவதும், தன்னிலை விளக்கம் கொடுப்பதும், தேவையற்றதொன்றாகவே பார்க்கப்படுகிறது.
மிக முக்கியமானதொரு தருணத்தில் தமிழர் தரப்பு இருக்கின்ற சூழலில், இத்தகைய உள்முரண்பாடுகள், கருத்து மோதல்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதும், அதற்காக நேரத்தை வீடிணப்பதும், தமிழ் மக்களை விசனமடையச் செய்துள்ளது.
ஆட்சி மாற்றம் என்பது, தமிழர் தரப்புக்கு சில வழிகளில் சாதகமானதாக இருந்தாலும், பல சவால்களையும் தந்திருக்கிறது.
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துடன் செயற்பட்டது போன்று இந்த அரசாங்கத்துடன் செயற்படவும் முடியாது, அதேவேளை, தமிழர் தரப்பின் நிலைப்பாடுகளை விட்டுக் கொடுக்கவும் முடியாது என்ற ஒரு வித்தியாசமான அரசியல் சூழலுக்குள் தமிழர் தரப்பு இருக்கிறது.
மகிந்த அரசாங்கத்தின் காலத்தில், அவரை எதிர்த்து மேற்குலக இராஜதந்திர காய்நகர்த்தல்கள் மேற்கொள்ளப்பட்டன.
அது தமிழர் தரப்புக்கு இராஜதந்திர நகர்வுகளை முன்னெடுப்பதற்கான தேவைகளை பெரியளவில் உருவாக்கிக் கொடுக்கவில்லை.
ஆனால், இப்போது நிலை அதற்கு மாறானது. சர்வதேச அரசியல் சூழல் தற்போதைய அரசாங்கத்துக்குச் சாதகமாக மாறியிருக்கிறது.
சர்வதேச சமூகத்தை தனது பக்கத்தில் இழுத்து வைத்துக் கொள்வதில், அரசாங்கம் வெற்றி கண்டிருக்கிறது.
இந்த அரசாங்கம் வெளியுலகில் தொடர்புகளை வலுப்படுத்தி, இராஜதந்திர ரீதியாக தன்னை வலுப்படுத்தி வருவது பலருக்கும் தெரியாத விடயம்.
வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவைக் கொழும்பில் காண்பதே அரிது.
அந்தளவுக்கு அவர், வெளிநாடுகளில் சுற்றித் திரிந்து அரசாங்கத்தின் பக்கம் சர்வதேச சமூகத்தைக் கொண்டு வருவதற்காக கடும் முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார்.
இத்தகைய நிலையில், தமிழர் தரப்பு புத்திசாலித்தனமாக காய்களை நகர்த்த தவறினால், ஒட்டுமொத்த வாய்ப்புகளையும் அரசாங்கம் தனக்குச் சாதகமாக மாற்றிக் கொண்டு விடும் ஆபத்து இருக்கிறது.
எரிக் சொல்ஹெய்ம் குறிப்பிட்டது போல, தமிழர்களுக்கான உரிமைகளை சிங்களத் தலைமைகள் தாதமாக வந்து தந்து விடப் போவதில்லை.
அது மைத்திரியாக இருக்கலாம், சந்திரிகாவாக இருக்கலாம். ரணிலாக இருக்கலாம்.
எல்லா சிங்களத் தலைவர்களுமே, தமது பிரதான வாக்கு வங்கியான சிங்கள மக்களின் நிலை சார்ந்து சிந்திக்கிறவர்களாகவே இருப்பார்கள்.
அரசியல் கைதிகள் விவகாரத்தில், தனது இக்கட்டான இந்த நிலையை வடக்கு மாகாண முதலமைச்சரிடம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெளிவாக கூறியிருந்திருக்கிறார்.
சிங்களத் தலைமைகள், தமிழரின் பிரச்சினைகளைத் தீர்க்கவோ, அரசியல் தீர்வை வழங்கவோ தன்னிச்சையாக முன்வரத் தயாராக இல்லாத சூழலில், தமிழர் தரப்பில் இருந்தே அதற்கான அழுத்தங்கள் கொடுக்கப்பட வேண்டியுள்ளது.
தமிழர் தரப்பு கொடுக்கும் அழுத்தங்கள் தான், அரசாங்கத்தை ஏதோ ஒரு தீர்வை நோக்கி இழுத்து வரவேண்டிய நிலை உள்ளது.
இந்தநிலையில், தமிழர் தரப்பில் ஒருங்கிணைந்த அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொள்வதற்குப் பதிலாக, முரண்பட்டு நின்று மோதிக் கொள்வதில் தான், வளங்கள் வீணடிக்கப்படுகின்றன.
தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள், தமிழரசுக் கட்சிக்கும் ஈபிஆர்எல்எவ் கட்சிக்கும் இடையில் நீடிக்கின்ற பனிப்போர் ஆகட்டும், விக்னேஸ்வரனுக்கும், சுமந்திரனுக்கும் இடையில் நடக்கின்ற கருத்து மோதல்களாகட்டும், எல்லாமே, தேவையற்றதாக – தமிழரின் ஒட்டுமொத்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணுகின்ற வாய்ப்புகளுக்கு அப்பால் கொண்டு செல்வதாகவே இருக்கின்றன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழரின் உரிமைகளையும், அரசியல் தீர்வையும், பெறுவதற்கான அடிப்படை நோக்கத்துக்காகவே உருவாக்கப்பட்டது.
அந்த நோக்கத்துக்கான அங்கீகாரமாகவே தமிழ் மக்களும், ஊடகங்களும் கூட்டமைப்பை ஆதரித்து நின்றன.
மக்களினதும், ஊடகங்களினதும் ஆதரவு இல்லாமல் போயிருந்தால், கூட்டமைப்பினால் அரசியல் ரீதியான வெற்றியைப் வெற்றிருக்க முடியாது.
இப்போது நடக்கின்ற கருத்து மோதல்கள், அந்த அடிப்படை நோக்கத்தை சிதைக்கின்ற வகையில், அல்லது திசை திருப்புகின்ற வகையிலேயே சென்று கொண்டிருக்கின்றன.
தற்போதைய நிலையில் இந்த மோதல்களைத் தூண்டி விட்டு குளிர்காய நினைக்கும் சக்திகள் தான் அதிகம்.
முதலமைச்சர் விக்னேஸ்வரனை கூட்டமைப்பை விட்டு வெளியே கொண்டு வருவதற்கு எத்தனிக்கும் சக்திகள், அதற்காக பல்வேறு முயற்சிகளை முன்னெடுக்கின்றன.
அவரை ஆதரித்து, முகநூல் பக்கங்களை திறந்தவர்கள் இப்போது பேரணி நடத்துவது பற்றிய கருத்துப் பரிமாற்றங்களையும் செய்யத் துவங்கியிருக்கிறார்கள்.
தமிழ் மக்களின் பிரதான பிரச்சினைக்காக வீதியில் இறங்கத் தயாராக இல்லாதவர்கள் தான், இவ்வாறு எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த விவகாரத்தில் முதலமைச்சர் விக்னேஸ்வரனும், சுமந்திரனும், தெரிந்தோ தெரியாமலோ, காலை விட்டு மூழ்கிக் கொண்டிருக்கின்றனர் என்பது தான் உண்மை.
தாம் வெளியிடும் கருத்துக்களின் பாரதூரத்தன்மை குறித்து இவர்கள் தெரியாமல் எதையும் செய்வதாக கருத முடியாது.
தெரிந்து கொண்டே, இந்தளவு தூரத்துக்கும், பயணித்திருக்கிறார்கள் என்பது, தமிழர்களைப் பொறுத்தவரையில் துரதிஷ்டமான ஒன்றுதான்.
ஏனெனில், இன்றைய நிலையில், வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனின் தேவையை எவ்வாறு புறக்கணிக்க முடியாதோ, அதுபோலவே, சர்வதேச விவகாரங்களில் சுமந்திரனின் தேவையையும் குறைத்து மதிப்பிட முடியாது.
இந்த இருவருக்குள்ளேயும் தூண்டிவிடப்பட்டுள்ள கருத்து மோதல்களின் விளைவை, தமிழர்களே அனுபவிக்க நேரிடும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்த காத்திருக்கும் சக்திகளே இதில் குளிர்காயும்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து வலுப்படுத்துங்கள் என்று இரா.சம்பந்தன் கோரிய போது, அதற்கு மக்களின் ஆணை கிடைத்துள்ளது.
ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்றுபட்டு வலுவாக இருக்க வேண்டும் என்று தமிழ் மக்கள் கோருகின்ற இந்த தருணத்தில், கூட்டமைப்பின் தலைவர்கள் முரண்பட்டு நிற்கிறார்கள்.
கூட்டமைப்புக்கான மக்களின் ஆணை என்பது ஒற்றுமைக்கும் பலத்துக்குமானதே தவிர, பிளவுபட்டு நின்று உள்முரண்பாடுகளை தீர்த்துக் கொள்வதற்கானதல்ல. இது எல்லோருக்குமே பொருத்தமானது.
இப்போதைய கட்டத்திலாவது கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் தம்மைச் சுதாகரித்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக இரா.சம்பந்தன் இந்தக் கட்டத்தில் கட்சியின் தலைமைத்துவ உறுதிப்பாட்டை, கையில் எடுத்து, முரண்பாடுகளுக்கு சுமுகமான தீர்வைக் காண வேண்டிய நிலையில் இருக்கிறார்.
கூட்டமைப்புக்கள் அவர் கொண்டு வந்து சேர்ந்த இருவரும் பலத்தைக் கொடுத்தனர். வெற்றியையும் தேடிக் கொடுத்தனர்.
அதேவேளை அவர்களே தமிழ் தேசியக் கூட்டமைப்பை பலவீனப்படுத்துபவர்களாக இருக்கும் போது, அதனை தட்டிக்கேட்கும் தார்மீக பக்குவதும், அரசியல் முதிர்ச்சியும் இரா.சம்பந்தனிடம் இருப்பதை யாரும் மறுக்க முடியாது.
அதனை அவர் விரைவாகச் செய்யத் தவறினால், தமிழ் தேசிய நலனை சிதைக்க காத்திருக்கும் சக்திகள், விரிசலை விரிவாக்கி பூதாகாரப்படுத்தி விடும் ஆபத்து உள்ளது.
இப்போதைய நிலையில், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக மோதிக் கொள்ளும் களமாக கூட்டமைப்பை, பயன்படுத்துவதை விடுத்து, தேசியப் பிரச்சினைக்கான தீர்வை எட்டுவதற்கான களமாக மட்டுமே, இதனைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
– என்.கண்ணன்
-http://www.tamilwin.com