இராணுவத்தினரிடம் சரணடைந்த எனது கணவன் எங்கே? ஜனாதிபதி ஆணைக்குழு முன் கதறிய மனைவி

arivoli_002தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டதை அறிந்திருந்தபோதும், நான் எனது கணவனை படையினரிடம் ஒப்படைத்தேன். என்னைப்போல் பலர் தங்கள் கணவனை, பிள்ளையை ஒப்படைத்தார்கள். ஆனால் இப்போ அவர்கள் காணாமல்போய் விட்டா ர்கள் என கூறுவதை நாம் ஒத்துக் கொள்ள முடியாது.

மேற்கண்டவாறு தமிழீழு விடுதலைப் புலிகளின் அரசியல் நிர்வாகத்துறை பொறுப்பாளர் விஜிந்தனின் மனைவி காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று சாட்சியம் வழங்கியிருக்கின்றார்.

ஆணைக்குழுவின் அமர்வுகள் சங்கானை பிரதேச செயலகத்தில் நடைபெற்றிருந்த நிலையிலேயே மேற்படி சாட்சியம் வழங்கப்பட்டுள்ளது.

விஜிந்தனின் மனைவி அறிவொளி தொடர்ந்து தனது சாட்சியத்தில் குறிப்பிடுகையில்,

1989ம் ஆண்டு எனது கணவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் சுயவிருப்பில் இணைந்து கொண்டார். பின்னர் அரசியல் துறை நிர்வாக பொறுப்பாளராக இயங்கிவந்த நிலையில் 2009.04.01ம் திகதி ஷெல் வீச்சில் நான் காய மடைந்திருந்தேன். பின்னர் என்னை கப்பல் மூலமாக திருகோணமலைக்கு கொண்டு சென்றுவிட்டார்கள்.

பின்னர் நான் கொழும்பு, வவுனியா வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றிருந்தேன். நீண்டநாட்களாக சுயநினைவின்றி இருந்த எனக்கு நினைவு திரும்பிய பின்பாகவே எனது கணவன் தொடர்பாக எனது உறவினர்கள் எனக்கு தெரியப்படுத்தினர்.

அவர்கள் எனக்கு கூறுகையில் இறுதிப் போரில் வெள்ளை கொடியுடன் புலிகளின் தளபதிகளான நடேசன், புலித்தேவன் ஆகியோர் சரணடையச் சென்றபோது அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டமையினை அறிந்தும். எனது கணவர் உள்ளிட்ட முக்கிய தளபதிகள் பாதர் ஜோசப் பிறான்சிஸ் பொறுப்பில் சரணடைந்தார்கள்.

மிகுந்த அச்சத்தின் மத்தியிலேயே அவர்கள் சரணடைந்தார்கள். படையினரிடம் ஒப்படைத்த எனது கணவன் எங்கே? அவரை தேடுவதற்கு நான் முயற்சிப்பதால் எனக்கு தொடர்ச்சியான அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது.

இதனால் தீவிரமாக எனது கணவனை தேட முடியவில்லை. எனக்கு 11வயது மற்றும் 7வயதில் பிள்ளைகள் இருக்கின்றார்கள். அவர்களையும் நானே பாதுகாக்கவேண்டிய கடப்பாடு எனக்குள்ளது. நீண்ட
நாட்கள் அமைதியாக இருந்த பின்னர் இப்போது நான் ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்கிறேன்.

இதற்குப் பின்னர் என்ன நடக்கும் என்பது எனக்கு தெரியவில்லை. முன்னாள் போராளிகளின் மனைவிமார், பிள்ளைகள் பாரிய நெருக்கடிகளுக்குள் இருக்கின்றார்கள். ஐ.நா சாட்சியத்தில் பல முன்னாள் போராளிகளின் மனைவியர் அனுபவித்த இன்னல்கள் தொடர்பாக கூறியுள்ளார்கள்.

அது உன்மையே. எனது பிள்ளைகள் தந்தையை தினம் தேடிக் கொண்டிருக்கின்றார்கள். அவரை தேடிக் கொடுங்கள். என கண்ணீருடன் கூறினார்.

-http://www.tamilwin.com

TAGS: