படையினரிடம் ஒப்படைக்கப்பட்ட புலிகளின் காளித் மாஸ்டர், தளபதி மற்றும் வண்ணக்கிளி மாஸ்டர் எங்கே? உறவினர்கள் கேள்வி

valikmm_investigt_002தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பயிற்சியாளர் காளித் மாஸ்டர் மற்றும் மோட்டார் பிரிவு தளபதிகளின் ஒருவரும், உள்ளக பாதுகாப்பு பொறுப்பாளருமான வண்ணக்கிளி மாஸ்டர் ஆகியோர் படையினரிடம் போரின் நிறைவில் ஒப்படைக்கப் பட்டனர். அவர்களை படையினர் கொண்டு சென்றனர். அவர்கள் எங்கே?

மேற்கண்டவாறு காளித் மாஸ்டரின் மாமன் கே.அமரசிங்கம் மற்றும் வண்ணக்கிளி மாஸ்டரின் மனைவி இளவேஜினியும்,

காணாமல்போனவர்களை கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்துள்ளனர்.

இன்றைய தினம் ஆணைக்குழுவின் இறுதி நாள் அமர்வு தெல்லிப்பழை பிரதேச செயலகத்தில் நடைபெற்றிருந்தது.

இதன்போதே மேற்படி சாட்சியம் வழங்கப்பட்டுள்ளது.  முதலாவதாக காளித் மாஸ்டரின் மாமன் சாட்சியமளிக்கையில்,

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது எல்லோரும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் சென்றனர். நாங்களும் இரானுவக் கட்டுப்பாட்டிற்குள் வந்தோம்.

அப்போது என்னுடைய மகளான எழில் விழி(சர்மிலா) மற்றும் அவரது கணவரான காளித் மாஸ்ரர் என அழைக்கப்படும் திருச்செல்வம் ஆகியோரும் அவர்களின் புதல்விகளான லக்சாயினி வயது(6) மற்றும் கானிகா வயது ஆகிய இருவருமாக அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரும் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டிற்குள் வந்தனர்.

இவ்வாறு இராணுவ கட்டுப்பாட்டிற்குள் வருகின்றவர்களில் புலிகள் அமைப்பில் இருந்தவர்கள் குறிப்பாக ஒருநாளேனும் புலிகள் அமைப்பில் இருந்தாலோ அல்லது பயிற்சி பெற்றிருந்தாலோ சரணடையுமாறு இரானுவத்தினர் அறிவித்துக் கொண்டிருந்தனர்.

இதற்கமைய அவர்கள் அனைவரும் குடும்பத்துடன் சரணடைந்திருந்தனர். இதன் பின்னர் இவர்களை இராணுவத்தினர் பிடித்து ஒரு பஸ்லிற்குள் ஏற்றிக் கொண்டு சென்றனர்.

இதனை நான் நேரடியாகவே பார்த்துக் கொண்டிருந்தேன். இதன் பின்னர் அவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டார்கள், அவர்களுக்கு என்ன நடந்தது. அவர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்பது குறித்து ஏதுமே இதுவரையில் எமக்குது தெரியாது.

இதன் பின்னர் நாங்கள் முகாம்களிற்கு வந்துவிட்டோம். இதனையடுத்து பல்வேறு இடங்களிற்குச் சென்றும் முறையிட்டோம்.

பல இடங்களிற்குச் சென்றும் தேடினோம். ஏங்கும் இதுவரையில் கிடைக்கவில்லை. அவர்கள் குறித்ததான எந்தத் தகவல்களும் வெளிப்படவும் இல்லை.

எனவே இரானுவத்தினர் பஸ்ஸில் ஏற்றிச் செல்லப்பட்ட என்னுடைய மகளின் குடும்பம் எங்கே?

அவர்களுக்கு என்ன நடந்தது. அவர்களின் குழந்தைகளாவது எங்கிருக்கின்றனர் என்றாவது கூறுங்கள் என ஆணைக்குழுவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து வண்ணக்கிளி மாஸ்டரின் மனைவி சாட்சியமளிக்கையில்,

வன்னியில் யுத்தம் உக்கிரமடைந்த போது நானும் எனது கணவரும் மூன்று பிள்ளைகளுமாக கடந்த 2009.05.18 ஆம் திகதியன்று இராணுவத்தினரின் கட்டுப்பாட்டப் பகுதிக்கு வந்திருந்தோம்.

அதாவது வட்டுவாகல் பகுதியில் வைத்து எங்களை மறித்த இராணுவத்தினர் சோதனைகளை மேற்கொள்ளதுடன் பதிவுகளையும் மேற்கொண்டனர்.

இதன் போது அங்கு இராணுவத்துடன் நின்றிருந்த எங்களுக்கு நன்கு அறியப்பட்ட புலிகளின் காவற்துறையில் முக்கிய உறுப்பினராக இருந்து பின்னர் அங்கிருந்த விலகி இராணுவத்தினருடன் இணைந்த செயற்பட்ட சபேசன் என்பவர் எனது கணவரை இராணுவத்தினருக்கு காட்டிக்கொடுத்தார்.

எனது கணவர் புலிகள் அமைப்பில் நிண்டகாலமாக இரந்து வந்தார். அவர் புலிகளின் கிட்டு பீரங்கிப் படைப்பிரிவின் தளபதிகளில் ஒருவராக இருந்தார்.

இதன் பின்னர் உள்ளகப் பாதுகாப்பு பிரிவில் முக்கியஸ்தராகச் செயற்பட்டார். இதனால் புலிகள் அமைப்பில் இருந்த பலருக்கும் அவரைத் தெரியும்.குறிப்பாக இந்தச் சபேசனுக்கு அவர் நன்கு அறியப்பட்டவர். அதனாலேயே அவர் காட்டிக்கொடுத்தார்.

எனது கணவரைப் பிடித்து வைத்துவிட்டு அவரை விடுவிப்பதாயின் பணம் தர வேண்டுமென்று கோரி, என்னிடம் இரண்டு இலட்சம் ருபா பணத்தையும் வாங்கியிருந்த போதும் கணவரை விடுவிக்காமல் சபேசனும் அங்கு நின்றிருந்த இராணுவத்தினரும் என்னையும் அச்சுறுத்தி துரத்தி அனுப்பியிருந்தனர்.

இந்நிலையில் எனது கணவர் தொடர்பான தகவல்கள் எவையும் அதன் பின்னர் கிடைக்கவில்லை. எனது கணவர் வேண்டும் என அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.

-http://www.tamilwin.com

TAGS: