2020ஆம் ஆண்டளவில் எல்லோருக்கும் பாதுகாப்பான நீர் என்று ஐ.நா. சொல்லுகின்ற போதிலும் வடபகுதிக்கு ஐந்து வீதமான தூய நீரே கிடைக்கின்றதென வட மாகாண ஆளுங்கட்சி உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
வட மாகாண சபையின் 2016ஆம் ஆண்டுக்கான விவசாய அமைச்சின் வரவு – செலவுத்திட்ட விவாதம் இன்று இடம்பெற்றது.
அந்த விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
வடக்கிலுள்ள அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பாய்கின்ற நீரானது இரணைமடு குளத்தைச் சென்றடைவதனால் அந்த நீரை யாழ்ப்பாணத்துக்கு வழங்க வேண்டியது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.
இரணைமடு நீரை வழங்குவதற்கு எந்த மக்களும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை எனவும், ஆனால் அது அரசியலாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதனால் 23 ஆயிரம் மில்லின் ரூபா நிதியுதவி கிடைக்காமல் போயுள்ளதாக எம்.கே.சிவாஜிலிங்கம் குறிப்பிட்டார்.
இரணைமடு குளத்திலிருந்து ஐந்து விழுக்காடு நீரையே தாம் எதிர்பார்ப்பதாகவும், ஆகக் குறைந்தது கடலுக்குள் செல்லுகின்ற நீரையாவது தமக்கு பெற்றுத் தருமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.
ஏனைய நீர் தமக்குத் தேவையில்லை என குறிப்பிட்ட மாகாண சபை உறுப்பினர், ஏனைய காலங்களில் கடல்நீரை நன்னீராகப் பயன்படுத்த தாம் முயற்சிப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
-http://www.tamilwin.com