விடுதலைப் புலிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் தளபதிகள் இராணுவத்தினரிடம் கையளிக்கப்பட்ட பின்னர் காணாமல் போனமை தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக உறவினர்கள் சாட்சியம் அளித்துள்ளனர்.
நிதித்துறை கருவண்ணன்.
விடுதலைப்புலிகள் அமைப்பில் நிதித்துறையில் இருந்த கருவண்ணன் எனப்படும் சூசைப்பிள்ளை வரதராஜன் ஆகிய எனது கணவரை 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி இராணுவத்தினரிடம் ஒப்படைத்தேன். கணவருடன் விடுதலைப்புலிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் தளபதிகளான பாப்பா , இளம்பருதி , எழிலன் , பாபு , ரூபன் , வேலவன் , தங்கன் , லோரன்ஸ் உட்பட 50 தொடக்கம் 60 பேர் வரையில் இராணுவத்தினர் மூன்று பஸ்களின் ஏற்றி சென்றனர். அவ்விடத்தில் நின்ற எங்களை செல்லுமாறு இரானுவத்தினர் அனுப்பினர். அதன் பின்னர் நாம் முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டோம். என மனைவி வரதராஜான் சாந்தினி சாட்சியம் அளித்தார்.
நிதித்துறை செம்மலை.
விடுதலை புலிகளின் நிதித்துறையில் இருந்த செம்மலை எனப்படும் மகேந்திரன் முருகதாஸ் ஆகிய எனது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளுடன் வட்டுவால்பகுதியால் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் வரும் வேளை எனது கணவருக்கு ஒரு கை இல்லை. அதனை அவதானித்த இராணுவம் கணவரை விசாரணை செய்தபின்னர் விடுதலை செய்கின்றோம் என கூறி கொண்டு சென்றனர். நான் நின்ற இடத்தில் இருந்து கொஞ்ச தூரம் அழைத்து சென்று அங்கிருந்த பஸ்ஸில் ஏற்றி நான் நின்ற வீதியால் என்னை கடந்து கொண்டு சென்றனர். அவ்வேளை எனது கணவர் அந்த பஸ்ஸின் பின் சீட்டில் இருந்து ஜன்னலால் எட்டிப்பார்த்து ஓமந்தைக்கு வா என கூறிவிட்டு கை அசைத்து விட்டு சென்றவர். அதன் பின்னர் எந்த தகவலும் இல்லை என அவரது மனைவி சாட்சியம் அளித்தார்.
அரசியல் துறை எழில்விழி மற்றும் காலித் மாஸ்ரர்.
எனது மகளான திருச்செல்வம் சர்மிளா மருமகனான திருச்செல்வம் மற்றும் அவர்களுடைய பிள்ளைகளான லக்சாயினி காநிலா ஆகியோர் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல் போயுள்ளதாக அமரசிங்கம் என்பவர் சாட்சியம் அளித்துள்ளார். தனது சாட்சியத்தில் மேலும் குறிப்பிடுகையில், எனது மகள் எழில்விழி எனும் பெயருடனும் மகளின் கணவனும் காலித்மாஸ்ரர் எனும் பெயரிலும் விடுதலை புலிகளின் அரசியல் துறையில் இருந்தவர்கள். 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி அவர்கள் தமது இரு பிள்ளைகளுடனும் இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல் போயுள்ளனர். அதன் பின்னர் மகள் குடும்பம் பற்றிய எந்தவிதமான தகவல்களும் இல்லை என தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.
கேமில்டன் அல்லது பவன்.
விடுதலை புலிகளின் நவம் அறிவு கூடத்தில் இருந்த கேமில்டன் அல்லது பவன் என்று அழைக்கப்படும் அழகையா தேவராஜ் எனும் தனது கணவர் வெலிக்கடை சிறைச்சாலை பொங்கல் விழாவில் நின்றதாக மனைவி சாட்சியம் அளித்துள்ளார். இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் காணாமல் போன எனது கணவரை தொலைக்காட்சி செய்தியில் கண்டேன். கடந்த 2015ம் ஆண்டு பொங்கல் தினத்தன்று வெலிக்கடை மற்றும் மகசீன் சிறைச்சாலையில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டதாக விழாவில் நின்றவர்களின் கண்கள் மறைக்கப்பட்ட நிலையில் சில படங்கள் தொலைக்காட்சி செய்தியில் ஒளிபரப்பாகியது. அதில் எனது கணவரும் நின்றார் என மனைவி சாட்சியம் அளித்துள்ளார்.
உள்ளக பாதுகாப்பு பிரிவு வண்ணக்கிளி.
விடுதலைப்புலிகளின் உள்ளக பாதுகாப்பு பிரிவில் இருந்த வண்ணக்கிளி எனப்படும் மூத்ததம்பி விஜயகுமார் ஆகிய எனது கணவருடன் இராணுவ கட்டுப்பட்டு பகுதிக்குள் வரும் வேளை 19ம் திகதி மே மாதம் 2009ம் ஆண்டு இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். விடுதலைப்புலிகளின் காவல் துறையில் இருந்த சபேசன் என்பவரே எனது கணவரை இராணுவத்தினருக்கு காட்டிக்கொடுத்தார். அன்றைய தினம் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்ட எனது கணவர் பற்றிய எந்த தகவலும் இல்லை. என தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.
-http://www.athirvu.com