அரசியல் தீர்வுக்குப் பின்னரே அரசியலமைப்பை மாற்றவேண்டும்

ranil_maiththiriநாட்டின் அரசியல் சூழல் மாறிய போதிலும் அரசாங்கங்கள் மாறிய போதிலும் தமிழ் மக்களுக்கான தேசியப் பிரச்சினைக்கான தீர்வானது கடந்த காலம் முழுவதும் எட்டாக்கனியாகவே இருந்து வந்துள்ளது.

 இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை காணும் நோக்கில் கடந்த காலங்களில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையிலும் தீர்வானது தமிழ் மக்களை வந்து சேரவில்லை.

நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்ததிலிருந்து தமிழ் மக்களை நியாயமான அரசியல் தேவைகளை பூர்த்தி செய்கின்ற தீர்வுத் திட்டமொன்று வழங்கப்பட வேண்டுமென பாரிய போராட்டங்கள் நடத்தப்பட்ட போதும், தீர்வு மட்டும் கிடைக்கவே இல்லை.

மூன்று தசாப்தகாலமாக தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஆயுதப் போராட்டம் நடத்தப்பட்டது. அதற்கு முன்னர் மிதவாத தமிழ் தலைவர்கள் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக அஹிம்சா வழியில் தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய தீர்வு வழங்கப்பட வேண்டுமென்று போராடினார்கள்.

இந்த போராட்டங்கள் எவையுமே உரிய பயனைத் தரவில்லை. அஹிம்சாவழியில் போராடிய தந்தை செல்வநாயகம் மனம் வெறுத்த நிலையில் தமிழர்களை கடவுள்தான் காப்பாற்றவேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்திருந்தார்.

மூன்று தசாப்தகாலம் இடம்பெற்ற தீவிர யுத்தத்தின் இடைநடுவே மாறி மாறி வந்த அரசாங்கங்கள் அரசியல் தீர்வு குறித்து பேச முற்பட்ட போதிலும் அதனை அன்றிருந்த எதிர்க்கட்சியினர் குழப்பி வந்தமையே வரலாறாக உள்ளது.

முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர். ஜயவர்த்தன, ரணசிங்க பிரேமதாஸ, சந்திரிகா குமாரதுங்க, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரது ஆட்சிக்காலங்களில் பேச்சுக்கள் இடம்பெற்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரச தரப்பினருக்குமிடையில் பேச்சுக்கள் இடம்பெற்ற போதிலும் அவை குழப்பியடிக்கப்பட்டன.

2002ம் ஆண்டு ஐக்கிய தேசிய முன்னணி ஆட்சிக்காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டு நோர்வேயின் அனுசரணையுடனும் பேச்சுக்கள் இடம்பெற்றன. ஆனால் அந்தப் பேச்சுவார்த்தையும் இடைநடுவில் முறிவடைந்தது.

இந்தப் பேச்சுவார்த்தையின் ஒரு கட்டமாக ஒஸ்லோ பிரகடனமும் வெளியிடப்பட்டது. இதில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வுக்கு இருதரப்பும் இணக்கம் கண்டிருந்தன. ஆனாலும் அதனைக்கூட நடைமுறைப்படுத்த முடியவில்லை.

2009ம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் யுத்தத்திற்கு முடிவு கட்டப்பட்டது. விடுதலைப் புலிகளை முற்றாக அழித்து விட்டோம் என்று அன்றைய அரசாங்கம் மார்தட்டிக்கொண்டது.

இந்த நிலையிலாவது பாதிக்கப்பட்ட தமக்கு உரிய அரசியல் தீர்வு வழங்கப்படுமென்று தமிழ் மக்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவேயில்லை.

2011ம் ஆண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் அன்றைய அரசாங்கப் பிரதிநிதிகள் பேச்சுக்களை ஆரம்பித்திருந்தனர். 16 சுற்றுப் பேச்சுக்கள் 2012ம் ஆண்டு ஜனவரி மாதம் வரையில் நடைபெற்றன.

ஆனால் இணக்கப்பாடு எதுவும் ஏற்படாத நிலையில் அரசாங்கமானது கூட்டமைப்பினருடனான பேச்சுவார்த்தையினை முறித்துக்கொண்டது. அன்றிலிருந்து இன்று வரை அரசியல் தீர்வுக்கான பேச்சுக்கள் எதுவுமே இடம்பெறவில்லை.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் பொது எதிரணியின் வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியிருந்தது.

புதிய ஜனாதிபதியையும் புதிய ஆட்சியையும் உருவாக்குவதன் மூலம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றினை காண முடியும் என்ற நம்பிக்கை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிடம் காணப்பட்டது.

இத்தகைய நம்பிக்கையினை தமிழ் மக்களும் கொண்டிருந்தனர். இதனால் தான் பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு பூரண ஆதரவினை வழங்கி அவரின் வெற்றியை தமிழ் மக்கள் உறுதிப்படுத்தினர்.

புதிய ஜனாதிபதி பதவியேற்று புதிய அரசாங்கம் பதவிக்கு வந்த போதிலும், அரசியல் தீர்வுக்கான முன் முயற்சிகள் எடுக்கப்படவில்லை.

செப்டெம்பர் மாதம் பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கம் மீண்டும் ஆட்சி அமைத்துள்ள போதிலும் இதுவரையில் அரசியல் தீர்வுக்கான பேச்சுக்கள் இடம்பெற்றிருக்கவில்லை.

ஆனாலும் அரசாங்கமானது தற்போது அரசியலமைப்பினை மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க முன்வந்துள்ளது. இதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவையும் வழங்கியிருக்கின்றது.

அந்த வகையில் அரசியலமைப்பு மாற்றத்திற்கான நாட்டு மக்களின் அபிப்பிராயங்களை பெற்றுக் கொள்வதற்கென 24 பேர் கொண்ட நிபுணர்கள் குழு அமைக்கப்படவுள்ளது.

கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான யோசனையினை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமர்ப்பித்துள்ளார். இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதனைவிட தேசிய நல்லிணக்க பொறிமுறைகளின் பொருட்டு பிரதமர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் வகையில் தனியான செயலகம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

இதேபோல் அரசியலமைப்பை ஒரு வருடத்திற்குள் மாற்றியமைப்பது குறித்து ஆராய்வதற்காக சிறிலங்கா சுதந்திரக்கட்சியும், 12 உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்றை அமைத்துள்ளது.

அரசியலமைப்பை மாற்றியமைக்க வேண்டியது அவசியமானதாகும். இதுவரை அரசியலமைப்பில் 19 திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எனவே இனியும் தொடர்ந்து திருத்தங்களை மேற்கொள்ளாது நாட்டுக்கு ஏற்றவகையிலான புதிய அரசியல் யாப்பினை உருவாக்கவேண்டும்.

ஆனால் புதிய அரசியல் யாப்பு ஏற்படுத்தப்படும் போது அதில் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வும், உள்ளடக்கப்படவேண்டும்.

அரசியல் தீர்வை விடுத்து வெறுமனே அரசியல் யாப்பை மாற்றி அமைப்பதனால் எத்தகைய பிரயோசனமும் ஏற்படப்போவதில்லை.

எனவே அரசியல் யாப்பை மாற்றியமைப்பதுடன் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய அரசியல் தீர்வொன்று காணப்படவேண்டும்.

அந்த அரசியல் தீர்வுக்கான அம்சங்களை உள்ளடக்கி அரசியல் யாப்பினை மாற்றுவதன் மூலம் நாட்டில் நிலையான நீடித்து நிற்கக்கூடிய சமாதானத்தை ஏற்படுத்த முடியும்.

தற்போதைய நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்கியுள்ளன.

வரலாற்றில் முன்னொரு போதும் இல்லாதவகையில் நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இரு கட்சிகளும் இணைந்து இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண முற்பட்டால் அதனை எதிர்ப்பதற்கு எவரும் முன்வரப்போவதில்லை.

தமிழ் மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போது பிரதான எதிர்க்கட்சியாக இடம் பிடித்துள்ளது.

எனவே இந்த முத்தரப்பும் இணைந்தும் முழுமையான அரசியல் தீர்வைக் காண்பதற்கு தக்கதருணம் பிறந்திருக்கிறது.

பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் உரையாற்றிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தரும், இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா தெரிவித்த கருத்துக்கள் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையை படம் போட்டுக் காட்டுவதாக உள்ளது.

இலங்கையில் மீண்டுமொரு பிரபாகரன் உருவாகாத வகையில் புதிய அரசியலமைப்பையும் தேர்தல் முறைமையையும் ஏற்படுத்தி தேசிய பிரச்சினைக்கு நிலையான அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்கு தற்போது இறுதி சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.

எனவே பகைமை அரசியலை கைவிட்டு முன்னோக்கி செயற்படுவோம்.

பிரபாகரனின் தலைக்குள் விசத்தை ஏற்றி வடக்கில் வாழ்ந்த பெண்கள் தற்கொலை குண்டுதாரிகளாக மாறும் பயங்கரமான நிலைமையை நாட்டில் இரண்டு பிரதான கட்சிகளுமே ஏற்படுத்தின.

இந்த இரண்டு பிரதான கட்சிகளின் பகைமை அரசியல் அதிகார ஆசையே இந்த நிலைக்கு காரணமாக அமைந்தது.

எனவே இனிமேலும் எம்மிடையே பகைமை அரசியல் வேண்டாம். நாம் ஒன்று படுவோம் என்று அமைச்சர் டிலான் பெரேரா கூறியிருக்கின்றார்.

அமைச்சரின் இந்தக் கூற்றுக்கிணங்க ஒன்றுபட்டு தீர்வைக் காண்பதே நாட்டுக்கு நல்லதென்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

-http://www.tamilwin.com

TAGS: