விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்வோம் என்று கூறிக் கூறி ஏமாற்றியமை தலைவர் பிரபாகரனுக்கு செய்த முதலாவது தீங்கு என்பதை தமிழ் மக்கள் என்றும் மறக்க மாட்டார்கள்.
தமிழ் மக்கள் பேரவையை இரகசியமாக கூட்டியது ஏன்? என்று சிலர் கேள்வி எழுப்புகின்றனர்.
மதத்தலைவர்கள், சமூகப் பிரதிநிதிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டதன் அடிப்படையில் தமிழ் மக்கள் பேரவை இரகசியமாகக் கூட்டப்பட்டது என்று கூறுவது எந்த வகையிலும் நியாயமாகாது.
இந்து மதத் தலைவர்கள், கத்தோலிக்க மதத் தலைவர்கள் பங்குபற்றி இருக்கும் போது அது சமய ரீதியில் வடக்கு கிழக்கு மக்களை இணைத்துக் கொள்கிறது.
இதேபோல சிவில் சமூகப் பிரதிநிதிகள் பங்குபற்றியமையானது ஏதோ ஒரு வகையில் மக்கள் சமூகத்தின் பிரதிநிதித்துவத்தைக் கொண்டதாக இருக்கும்.
இதேநேரம் ஒரு லட்சத்து 35 ஆயிரம் விருப்பு வாக்குகளைப் பெற்ற வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பேரவையில் கலந்து கொண்டதை இரகசியக் கூட்டம் என்று சொல்லுவோர் மறந்து போனது ஏன் என்று தெரியவில்லை.
வடபுலத்து தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றுள்ள வடக்கின் முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் அவர்கள் தமிழ் மக்கள் பேரவைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் போது அதனை இரகசியக் கூட்டம் என்று கூறுவது எந்த வகையிலும் நியாயமாகாது.
இது தவிர, கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த சிவில் சமூகப் பிரதிநிதிகளின் பிரசன்னத்தை தமிழ் மக்கள் பேரவை இரகசியமாக, பூட்டப்பட்ட அறையில் நடந்தது என்று கூறுவோர் ஒரு கணம் நினைத்தாக வேண்டும்.
தமிழ் மக்கள் பேரவை இரகசியமாக நடந்தது என்று கூறுவோர்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொழும்புத் தலைமை இனப்பிரச்சினைக்கான தீர்வுத் திட்டத்தை இரகசியமாக வைத்திருப்பது குறித்து தங்கள் ஆதங்கத்தை பகிரங்கமாகக் கூறாதது ஏன்?
தீர்வுத் திட்டம் சிங்கள மக்களுக்குத் தெரிந்தால் அதனை சிங்கள மக்கள் எதிர்ப்பர் என்று கருதியே நாம் அத் தீர்வுத் திட்டத்தை வெளிப்படுத்தவில்லை என்று நியாயம் கூறித் தப்புவர்.
இவ்வாறு தமக்கு நியாயம் கூறுவோர் தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தைப் பகிரங்கமாகக் கூட்டினால் அதனைக் குழப்புவதற்கும் ஆட்கள் இருப்பர் என்பதை மறந்து போனமை எதற்கானது.
எதுவாயினும் தமிழ் மக்கள் பேரவை தொடர்பில் எதிர்க் கருத்துக்களை கூறுவதால் தமிழ் மக்களுக்கு எந்தப் பிரயோசனமும் ஏற்படப் போவதில்லை.
எனவே பயனற்ற பிரசாரங்களை கை விட்டு, தமிழ் மக்கள் பேரவை என்ற மக்கள் அமைப்பை கட்டி எழுப்ப தமிழ் அரசியல்வாதிகள் முன்வர வேண்டும் என்பதே நம் விருப்பம்.
சொல்லொணாத் துன்பத்தில் மூழ்கியிருக்கும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை தரும் நடவடிக்கைகளை அனைவரும் முன்னெடுப்பதே பொருத்தமானது என்பது நம் தாழ்மையான கருத்து.
-http://www.tamilwin.com