இலங்கையில் மூன்றாவது யுத்தம் ஒன்றை முன்னெடுப்பதற்கு சர்வதேசம் தயாராகிவரும் நிலையில் வடகிழக்கு தமிழ் பேசும் மக்கள் கடந்த அரை நூற்றாண்டுகளாக செய்த தியாகங்கள் இழப்புக்கள் துன்பங்களுக்கெல்லாம் அவர்களுக்கு கிடைத்தது என்ன?
தனது ஆயுத பலத்தின் ஊடாக இலங்கையில் தன்னிச்சையான சுதந்திர தேசம் ஒன்றை உருவாக்கி உலகையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழர்களின் இன்றைய நிலை என்ன?
தமிழ் மக்களின் போராட்டம் வெற்றி பெற்றதா? அல்லது தமிழர்களின் போராட்டம் அவர்களது இலக்கை நோக்கி வெற்றிகரமாக நகர்ந்து கொண்டிருக்கின்றதா?
என்ற பல கேள்விகளுடன் தமிழ் மக்களின் இன்றைய நிலை குறித்து ஆராய வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது.
2009-மே-19ற்கு பின்னர் தமிழர்களின் மனநிலை
யுத்தம் நிறைவடைந்த ஆறு ஆண்டுகளில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வானது பல்வேறு சந்தேகங்களுக்கு உட்படுத்தப்பட்டதோடு தமிழர்களுக்கான இனப்பிரச்சினைத் தீர்வு ஒன்றை இலங்கை அரசாங்கம் தமிழர்களுக்கு தராது என்ற நிலைப்பாட்டிலேயே பெரும்பாலான தமிழ் மக்கள் இருந்தனர்.
காரணம் அப்போது இருந்த இலங்கை அரசாங்கம் யுத்த வெற்றியின் மமதையில் இலங்கையில் இனப்பிரச்சினை ஒன்றே இல்லை என்ற நிலைப்பாட்டில் இருந்தது.
மறுபக்கம் யுத்தம் தமிழர் தேசத்தில் ஏற்படுத்திய அழிவுகளும் அதனால் ஏற்படுத்தப்பட்ட ஈடுசெய்ய முடியாத இழப்புக்களும் தமிழ் மக்களை அவர்களது அரசியல் தீர்வு குறித்து சிந்திக்க விடவில்லை.
யுத்தத்தின் முடிவு ஒருகட்டத்தில் தமிழ் மக்களை விரக்தியின் விளிம்புக்கே தள்ளியிருந்தது, அத்தோடு அது தமிழீழ விடுதலைப் புலிகளை விமர்சிக்கும் நிலைக்கு கொண்டுபோயிருந்தது.
பலர் யுத்தம் தமிழர்களை 1970ம் ஆண்டு காலத்திற்கு இழுத்துச் சென்று விட்டது என்று கூறினர். சிலர் தமிழிழ விடுதலைப் புலிகள் இலங்கை இந்திய ஒப்பந்தத்தையாவது பெற்றிருக்கலாம் என்றனர்.
இன்னும் சிலர் சந்திரிக்காவின் தீர்வையாவது ஏற்றுக் கொண்டிருக்கலாம் என்றனர். இன்னும் சிலர் நாம் எதையுமெ பெறாது எல்லாத்தையும் இழந்து நிர்க்கதியாக நிற்கின்றோம் என தங்களை தாங்களே நொந்துகொண்டனர்.
இவ்வாறு யுத்தத்தின் முடிவு தமிழர் போராட்டத்தின் நோக்கத்தையே சிதறடித்திருந்தது.
ஆனால் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் தமிழர்களின் போராட்டத்திற்கான ஒரு அதிகாரப் பகிர்வினை பெற்றுக் கொள்வதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இருந்தும் தமிழ் மக்கள் தங்களது ஒருங்கிணைந்த செயற்பாடுகளற்ற நிலையில் தமிழ் மக்கள் தங்களுக்கான அரசியல் அதிகாரப் பகிர்வுக்கான தீர்வு குறித்த ஒரு தெளிவான நிலைப்பாட்டை எடுக்காது பல கொள்கைகளை கொண்ட பல அமைப்புக்களாக பிரிந்து நிற்கின்றமையானது தமிழர்களுக்கான அரசியல் தீர்வு ஒன்றை பெறுவதற்கான செயற்பாடுகளை பின்னுக்குத் தள்ளியுள்ளது.
குறிப்பாக இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையை பிராந்திய ரீதியாக பார்க்கும் சர்வதேசமும் அதனுடன் இணைந்து செயற்படும் இலங்கை அரசும் தமிழர் பிரச்சினைக்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டில் உள்ளது.
இதன் காரணமாக தமிழர்கள் மிது ஒரு அரசியல் தீர்வை திணிக்க சர்வதேசமும் இலங்கையும் எத்தனித்து வருகின்றது.
இதன் செயற்பாடுகளே தற்போது இலங்கையில் நடைபெற்று வருகின்ற நல்லிணக்க செயற்பாடுகளாகும்.
நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்கள் இலங்கை அரசாங்கம் அதிகாரத்தை பகிர்வதற்கு பதிலாக அதிகாரத்தை குவிக்கின்ற செயற்பாடுகளையே முன்னெடுத்து வருகின்றது என்று கூறியிருந்தார்.
உண்மையில் நல்லாட்சி அரசும் சர்வதேச நாடுகளும் இந்தியாவும் இணைந்து இலங்கையில் அதிகாராத்தை குவிக்கின்ற செயற்பாடுகளையே முன்னெடுத்து வருவதாக தெரிகின்றது.
இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் தென்னாபிரிக்க நல்லிணக்க செயற்பாடுகள்
இலங்கையில் சர்வதேச நாடுகளினால் கொண்டு வரப்பட்ட ஆட்சி மாற்றமானது இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென்ற ஒப்பந்தத்தின் பிரகாரம் கொண்டு வரப்பட்டதுடன் அதற்கான உத்தரவாதத்தை அண்மையில் நடைபெற்ற ஜெனிவா மனிதவுரிமைகள் பேரவை வழங்கியுள்ளது.
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான வரைவு ஒன்றை முன்வைத்துள்ள சர்வதேசம் குறித்த வரைவானது தென்னாபிரிக்கவில் நெல்சன் மண்டேளாவினால் முன்னெடுக்கப்பட்ட நல்லிணக்க செயற்பாடுகளை கொண்டதாகவும் அமையுமென தெரிவித்துள்ளது.
இதனை இலங்கையில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கான” நீதியின் நிலைமாற்ற செயற்பாடுகள்” எனவும் சர்வதேசம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் பேரவையின் தீர்மானத்திற்கு அமைய குறித்த நல்லிணக்க செயற்பாடுகளை எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்குள் செயற்படுத்த வேண்டுமென்ற கால அவகாசத்தை சர்வதேசம் இலங்கைக்கு வழங்கியுள்ளதாக தெரிகின்றது.
இதன் விளைவுகளே இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள கலந்துரையாடல் அமைச்சு உட்பட அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்கான குழு, விடுதலைப் புலி சார்பு அமைப்புக்கள் மீதான தடை நீக்கம், வடகிழக்கு உள்ளிட்ட தென்னிலங்கை பகுதிகளில் உள்ள மக்கள் மத்தியில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க செயற்பாடுகள் போன்றவற்றை கூறலாம்.
இலங்கை அரசாங்கத்தின் கொள்கை வகுப்பாளர்கள் இலங்கையின் அரை நூற்றாண்டு கால தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வைக் காண வேண்டும் என்ற நோக்குடன் பிரிக்கப்படாத இலங்கைக்குள் இந்தியாவின் அணுசரணையுடன் தீர்வு ஒன்றை பெறவேண்டுமென்ற நிலைப்பாட்டுடன் சர்வதேசத்திடம் சரணாகதியடைந்ததன் விளைவே சர்வதேசத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த நல்லிணக்க செயற்றிட்டமென தெரிவிக்கப்படுகின்றது.
குறிப்பாக இந்திய அரசாங்கத்தின் தலையீடு காரணமாகவே இவ்வாறான நிலைப்பாட்டை சர்வதேச நாடுகள் எடுக்க காரணமெனவும் சொல்லப்படுகின்றது.
எனவே வாய்ப்பைப் பயன்படுத்தி சர்வதேச பிராந்திய உறவைக் கட்டியெழுப்ப வேண்டுமென்ற நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கம் எடுத்துள்ளது.
இதன் காரணமாகவே மிகவும் அவசர அவசரமாக தன்னுடைய நல்லிணக்க செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
குறித்த செயற்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு அமெரிக்கா இந்தியா உள்ளிட்ட நாடுகள்ளும் அதனுடன் தொடர்புபட்ட நிறுவனங்களும் தற்போது களத்தில் குதித்துள்ளன.
எனவே தமிழர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் சர்வதேசத்தினால் முன்வைக்கப்பட்ட இந்த நல்லிணக்க செயற்பாடுகளை இலங்கை அரசாங்கம் சர்வதேசத்தின் ஆதரவுடன் முன்னெடுத்தே தீரும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.
சர்வதேசத்தினால் முன்வைக்கப்பட்டு இலங்கை அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள “நீதி நிலைமாற்றத்திற்கான” இந்த செயற்றிட்டங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையினால் பெருந்தொகை நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான செயற்றிட்டங்களும் உருவாக்கப்பட்டு வருகின்றது.
இலங்கை மீதான மூன்றாவது யுத்தத்திற்கு தயாராகும் சர்வதேசம்
இலங்கையில் தனது மூன்றாவது யுத்தத்தை முன்னெடுப்பதற்கான சகல முன்னாயத்தங்களையும் சர்வதேசம் பூர்த்தி செய்துள்ளது. இன்னும் சில மாதங்களுக்குள் சர்வதேசத்தின் மூன்றாவது யுத்தம் இலங்கையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இது என்ன சர்வதேசத்தின் மூன்றாவது யுத்தம் என பலரும் சிந்திக்கலாம். உண்மையில் இலங்கையில் கடந்த ஆறு ஆண்டுகளாக நடைபெற்று வரும் செயற்பாடுகளை சரிவர உன்னிப்பாக அவதானிப்பவர்களுக்கு சர்வதேசம் இலங்கை மீது தொடுத்தள்ள புலனாய்வு யுத்தம் குறித்து தெரியும்.
இலங்கை தொடர்பில் சர்வதேசம் ஒரு நிகழ்ச்சி நிரலை கொண்டு செயற்பட்டு வருகின்றது. அதனை நடைமுறைப்படுத்த தனது முழுவளத்தையும் பயன்படுத்த சர்வதேசம் பின்நிற்காது.
இதையே சர்வதேசத்தின் மூன்றாவது யுத்தமென்று சொல்ல வேண்டியுள்ளது.
அதாவது இலங்கையில் தனது முதலாவது யுத்தத்தை முள்ளிவாய்க்காலில் நிறைவுசெய்த சர்வதேசம் தமிழர்களின் பேரம் பேசும் சக்தியை இல்லாதொழித்ததோடு சர்வதேசம் தனது இரண்டாவது யுத்தத்தை ராஜபக்ச அரசாங்கத்தை உடைத்தெடுப்பதில் மேற்கொண்டுடிருந்ததோடு சிங்கள தேசத்தையும் பலவீனப்படுத்தியிருந்தது.
இந்த இரண்டு யுத்தங்களின் ஊடாக பிராந்தியத்தில் தங்களுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்த தமிழர் தரப்பையும் இலங்கை அரசாங்கத்தையும் பலவீனப்படுத்தி இரண்டு தரப்பினரையும் தங்களிடம் சரணாகதியடைய வைத்த சர்வதேசம் தனது மேலாதிக்கத்தை இலங்கையில் நிலைநாட்டியுள்ளது.
ஏற்கனவே தங்களுடன் இணங்கி செயற்பட மறுத்த விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு பின்நின்று செயற்பட்ட இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள், பின்னர் தனக்கு கட்டுப்பட்டு நடக்க மறுத்த சீன அரசாங்கத்துடன் உறவை வைத்துக் கொண்டிருந்த ராஜபக்ச அரசாங்கத்தை உடைத்தெறிந்து தனது மேலாதிக்கத்தை இலங்கையில் நிலைநிறுத்தியுள்ளது.
இந்நிலையில் இனிமேல் இலங்கை அரசாங்கம் தங்களது கட்டுப்பாட்டை மீறிச் செல்லக்கூடாது என்பதற்காக இலங்கையின் தேசிய இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு காண்பதற்குறிய உபாயத்தீன் ஊடாக தனது மூன்றாவது யுத்தத்தை இலங்கை மீது தொடுத்து இலங்கையை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கு சர்வதேசம் தயாராகி வருகின்றது.
இலங்கையைப் பொறுத்தமட்டில் தமிழ் சிங்கள தரப்புக்கு அப்பாற்பட்ட சக்தியொன்று செயற்படுகின்றது என்பதை முதலில் எல்லோரும் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.
இதன் காரணமாகவே தமிழர்களினால் இறுதி யுத்தத்தை வெல்ல முடியாமல் போனது என்பதோடு முள்ளிவாய்க்கால் அழிவைக் கூட எங்களால் தடுத்து நிறுத்த முடியாமல் போனது.
எவ்வாறு இறுதி யுத்தத்தை தமிழர் தரப்பால் நிறுத்த முடியாமல் போனதோ அதேபோனறு சர்வதேசத்தினால் நடைமுறைப்படுத்தப்படவிருக்கும் மூன்றாவது யுத்தத்தையும் தமிழர் தரப்பாலோ அல்லது சிங்களத் தரப்பாலோ தடுக்க முடியாது என்பதை தமிழர்களாகிய நாம் புரிந்து கொண்டு செயற்படுவதே உத்தமம்.
அதாவது தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு ஒன்றை பெற்றுக் கொள்வதற்கு தமிழர்கள் முதலில் தங்களை பலப்படுத்த வேண்டும் அத்தோடு தமிழர்கள் அனைவரும் ஒருங்கிணைந்த சக்தியாக உருப்பெற்று சர்வதேசத்துடன் இணங்கிச் சென்று எமக்கான நியாயமான தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு முயற்சிப்பதே இப்போதைக்கு புத்திசாலித்தனமான விடயமாகவிருக்கும்.
அதைவிடுத்து தமிழர்கள் பல அமைப்புக்களாக பிரிந்து ஒவ்வொரு விதமான கருத்துக்களுடன் எதிரும் புதிருமாக செயற்படுவோமாக இருந்தால் எப்படி எமக்கு முள்ளிவாய்க்கால் அழிவை தடுக்க முடியாமல் போனதோ அதேபோன்று தமிழர்கள் மீது திணிக்கப்படப் போகும் அரசியல் தீர்வையும் தடுக்க முடியாமல் போகும்.
எனவே அரசாங்கமோ அல்லது சர்வதேசமோ அல்லது இந்தியாவோ கொண்டு வருகின்ற நல்லிணக்க அரசியல் தீர்வு செயற்பாடுகளை தமிழர் தரப்புக்கள் ஒன்றிணைந்து பங்குபற்றி அதில் எமக்கு சாத்தியமான தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு அழுத்தம் கொடுப்பதே தமிழர் விடிவிற்கு சாத்தியமான பாதையாக அமையும்.
அதை விடுத்து தமிழர்கள் அமைப்பு ரீதியாகவும் கட்சி ரீதியாகவும் பிரிந்து நின்று தனிநபர் அடையாளங்களுக்குள் அகப்பட்டு தங்களது சொந்த நலன்களுக்காகவும் கட்சி நலன்களுக்காகவும் செயற்படுவோமாக இருந்தால் தமிழர்களின் போராட்டம் இன்னும் முப்பது வருடங்களுக்கு தொடரும் என்பதுடன், தமிழர்கள் தங்களது தேசிய அடையாளங்களை தொலைத்து விட்டு தேட வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதே யதார்த்தம்.
கூட்டமைப்பு – சிவில் சமூகம் – புலம்பெயர் சமூகம் இணைய வேண்டிய கட்டாயம்
சர்வதேசத்தினால் முன்னெடுக்கப்படவுள்ள இந்த மூன்றாவது யுத்தத்தில் சிங்கள தேசம் தனது கட்சி வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு நிற்பதை காணக்கூடியதாகவுள்ளது.
இன்று சிங்கள தேசம் தன்னை சர்வதேசத்திடம் இருந்து காத்துக் கொள்வதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
ஆனால் பல ஆண்டுகளாக தனது விடுதலைக்காக போராடி விலைமதிக்க முடியாத தியாகங்களையும் இழப்புக்களையும் கொடுத்த தமிழர் தேசம் மிகவும் பலவீனமான முறையில் வெறுமனே ஒரு கட்சி அரசியலுக்குள் முடங்கி கிடக்கின்றது.
தமிழர்கள் இந்த உலகின் தேசிய இனம், ஆனால் தமிழர்கள் ஒரு தேசிய இனத்திற்கான கட்டமைப்புக்களை கொண்டிருக்கவில்லை என்பதே வேதனையான விடயமாகவுள்ளது.
விடுதலைப் புலிகள் தங்களை தாங்களே ஆளுகின்ற வகையிலான ஒரு தேசிய இனத்திற்கான கட்டமைப்புக்களை கொண்டிருந்தார்கள் என்பது உண்மை.
ஆனால் அது அழிக்கப்பட்டதன் பின்னர் தமிழர்கள் அவ்வாறான முயற்சியொன்றிற்கு இன்றுவரை செல்லவில்லை என்பதே உண்மை.
வடகிழக்கைப் பொறுத்தமட்டில் தற்போதைக்கு மக்களின் பெரும்பான்மையைப் பெற்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பும் சிவில் சமூக பிரதிநிதிகளும் இணைந்து தமிழர் தேசியத்திற்கான கட்டமைப்பு ஒன்றை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகவுள்ளது.
அதேபோன்று புலத்தில் உள்ள தமிழர்கள் எல்லோரும் ஒன்றிணைந்து தமிழர் தேசியத்திற்கான கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி இரண்டு சக்திகளும் ஒருங்கிணைந்து தமிழர்களின் இனப்பிரச்சினை உள்ளிட்ட முக்கிய விடயங்களுக்கு ஒரு தேசிய கொள்கையொன்றை வகுத்து அதனை இன்றைய சர்வதேச ஒழுங்குகளுக்கு அமைய கொண்டு செல்வதற்கான நிகழ்ச்சி நிரலை வகுத்து செயற்படுவதே இந்த பூமிப்பந்தில் தமிழர்கள் மீண்டும் ஒரு தேசிய இனமாக தலைதூக்குவதற்கு வழியமைத்து கொடுக்கும்.
இவ்வாறான ஒருங்கிணைவின் மூலமே தமிழர் தரப்பு சர்வதேச தரப்புக்களையும் சிங்களத் தரப்பையும் சமாளித்துக் கொண்டு தமிழர்களின் தன்னாட்சி உரிமையை வென்றெடுப்பதற்கு செயற்பட முடியும்.
இல்லையேல் தமிழர்கள் பிரிந்து நின்று ஆளுக்கு ஆள் ஒவ்வொரு கருத்துக்களை சொல்லிக்கொண்டு சர்வதேசத்தினால் முன்வைக்கப்படுகின்ற தீர்வுகளை பரிசீலிக்காமல் இருந்தால் மீண்டும் தமிழர்கள் முள்ளிவாய்க்காளில் இழந்ததை போன்று தமது இனத்திற்கான விடுதலையின் இலக்கை அடைவதற்கான வரலாற்றுச் சந்தர்ப்பத்தை நழுவ விட்டார்கள் என்ற பழிச் சொல்லுக்கும் ஆளாக நேரிடும்.
ஒன்றுமட்டும் உண்மை யாழ்ப்பாணத்தில் இன்று உருவாகியுள்ள தமிழ் மக்கள் பேரவையாக இருந்தாலும் சரி, தமிழ் தேசியக் கூட்டமைப்பாக இருந்தாலும் சரி அல்லது வேறு தமிழ் கட்சிகளாக இருந்தாலும் சரி தமிழர் விடுதலைக்கு அப்பால் ஒருவரை ஒருவர் வெட்டி ஓட நினைத்தால் கால ஓட்டத்தில் காணாமல் போவார்கள் என்பது மட்டும் உண்மை.
-தீரன்- [email protected]
http://www.tamilwin.com