தோற்ற இனமாக நினைத்து தீர்வு பெற நினைத்தல் கேடு!

ranil_sampanthan_001தமிழ் மக்களின் வாழ்வியல் தளம் என்பது தனித்து இலங்கை அரசு தரும் தீர்வுத் திட்டத்தால் மட்டும் நிவர்த்திக்கப்படக் கூடியதன்று. மாறாக எங்கள் மண்ணை வாழ்விக்க நாங்கள் ஒன்று சேர்ந்து செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் உண்டு.

ஒரு இனம் தனது இருப்பை நிலைநிறுத்த வேண்டுமாயின் அதற்கான அந்த இனம் பல்வேறு தளங்களில் தனது முன்னேற்றத்தை காட்டுவது கட்டாயம்.

அந்த வகையில் யுத்தத்தினால் பாதிப்படைந்த எங்கள் தமிழினமும் பொருளாதாரம், கல்வி, பண்பாடு, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் உயர்த்திக் கொள்வது அவசியமாகும்.

ஒரு இனம் தனது பண்பாட்டை, ஒழுக்க நெறியை பிறழ்வுக்கு உட்படுத்துமாக இருந்தால் அந்த இனம் உரிமை பெற்ற போதிலும் வாழ முடியாமல் தத்தளிக்கும் அவலநிலை ஏற்படும்.

எனவே, ஒரு பக்கத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பதை வலியுறுத்துவதும் அது தொடர்பிலான இராஜதந்திர வியூகங்களை அமைப் பதிலும் நடந்து கொண்டிருக்கின்ற அதேநேரம், எமது தாயகத்தின் பொருளாதார அபிவிருத்தி, கல்வி, சுகாதார, சமூக மேம்பாடுகள் தொடர்பிலும் ஆரோக்கியமான திட்டமிடல்கள் எழுச்சி பெறவேண்டும்.

இருந்தும் எங்களின் வாழ்நாளில் பெரும் பகுதி இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயப் பொருளை பேசுபடுபொருளாக்கி ஏனைய விடயங்களை கவனிப்பின்றி விட்டதன் காரணமாக எங்கள் இளம் சமூகத்தின் நடத்தைக் கோலங்கள் குறித்து கவலை கொள்ள வேண்டிய இனமாக இன்று நாம் உள்ளோம்.

எனவே, இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற முயற்சிகளின் சமாந்திரப் பயணிப்பாக, எங்களின் ஒட்டுமொத்த அபிவிருத்தி குறித்த விடயங்களும் பயணிக்க வேண்டும்.

அப்போதுதான் நாங்களும் இந்த மண்ணில் மன உறுதி படைத்தவர்களாக, எதிர் தாக்கங்களுக்கு ஈடுகொடுக்கக் கூடியவர்களாக நின்று நிலைக்க முடியும்.

அதேசமயம் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயத்தின் எச் சந்தர்ப்பத்திலும் நாம் தோற்றுப் போன இனம் என்ற நினைப்போடு தீர்வு பற்றிப் பேச நினைப்பதோ அல்லது தீர்வைப் பெற நினைப்பதோ மிகப் பெரும் தவறாகும்.

இத்தகைய தோல்வி மனப்பாங்குடன் தீர்வைப் பெற நினைத்த எந்த ஒரு இனமும் எச்சந்தர்ப்பத்திலும் மீள் எழுச்சி பெற்றதாகச் சரித்திரமில்லை.

அதேநேரம் ஒரு இனத்தின் தலைமை என்பதற்குள் இனம் சார் பற்றும் அந்த இனம் சார்ந்த மக்களை நேசிக்கின்ற பெரும் குணமும் இருந்தாக வேண்டும்.

இதைவிடுத்து யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களை, யுத்தத்தின் பின்னர் புனர்வாழ்வு பெற்றுத் திரும்பியவர்களை வெறுப்போடு பார்க்கின்ற மனநிலை என்பன இருக்குமாயின் ஒரு போதும் எங்களுக்கான முழுமையான தீர்வை நாம் பெற்று விட முடியாது.

ஆகையால் முதலில் தமிழினம் வாழ வேண்டுமாயின் தமிழ்த் தலைமை தமிழ் மக்களை தனது உயிராக நினைக்க வேண்டும்.

அத்துடன் நாங்கள் தோற்ற இனம் அல்ல; எங்கள் போராட்டத்தின் வீரச் செறிவு கண்டு கலங்கிய உலகம் ஒன்றுகூடி தோற்கடிக்கப்பட்ட இனம் என்று உணர்தல் வேண்டும்.

தோற்பது வேறு; தோற்கடிக்கப்படுவது வேறு. நாங்கள் வல்லரசுகள் கூடி தோற்கடிக்கப்பட்டவர்கள் எனில், நாங்களே இந்த உலகத்தின் வீரர்கள்.

ஆகையால் எங்கள் தோல்வி எங்களுக்கு இன்னமும் உத்வேகத்தை, ஓர்மத்தைத் தர வேண்டும். இந்த நினைப்போடு எங்களுக்கான தீர்வைக் கேட்பதே எங்களை நிம்மதியாக வாழ வைக்கும்.

-http://www.tamilwin.com

TAGS: