முன்னாள் போராளிகளின் அவலம்! மரணத்தின் பின்னர் இறுதிக்கிரியை செய்ய பணமில்லை!

munnal_poralikal_001முன்னாள் போராளி ஒருவர் தீக்காயத்திற்கு இலக்காகி மரணமடைந்துள்ளார். ஆனால் அவரின் சடலத்தினைப் பெற்று இறுதிக்கிரியைகள் செய்வதற்கு பணமில்லாததால் அரச செலவில் அடக்கம் செய்யக்கோரியுள்ளார்  மரணமடைந்தவரின் சகோதரி.

தமிழினத்தின் விடிவிற்காக தங்கள் உடல் பொருள் ஆவி அனைத்தையும் தியாகம் செய்தவர்கள் தமிழ் இளைஞர் யுவதிகள்.

கண்ட கனவுகளையும், நினைத்த வாழ்க்கையையும் வாழ முடியாமல், தன்னினத்தின் எதிர்கால சந்ததியினர் சுதந்திரக் காற்றை சுவாசிக்க வேண்டும் என்பதற்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் அவர்கள்.

ஆனால் அவர்களின் வாழ்க்கையே இன்று கேள்விக்குரியாக மாறியுள்ளதை யாரும் கண்டுகொள்வதில்லை.

முன்னாள் போராளிகள் என்னும் பெயர் கொண்டு அழைப்பதோடு முடிந்துவிடுகிறது பேச்சு. அதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.

போராட்ட காலத்தில் அவர்களின் நிலைமைகள் வேறு இன்றுள்ள நிலமைகள் வேறு. அரசாலும், சமூகத்தாலும் அவர்களில் பலர் புறக்கணிக்கப்படுகின்றார்கள். இன்னும் சிலர் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்.

இதில் பலரின் வாழ்க்கையில் அடுத்த கட்டம் என்னவென்று நினைத்தும் கூட பார்க்க முடியாத சோகத்தில் நிற்கிறது அவர்களின் வாழ்க்கை. அபயவங்களை இழந்து, சொந்தமாக சம்பாதித்து வாழ்க்கை நடத்த முடியாத பல முன்னாள் போராளிகள் நித்தம் நித்தம் போராடுகின்றார்கள்.

பல களங்களைக் கண்டு வெற்றி வாகை சூடிய தமிழினத்தின் மறவர்கள், தம் வாழ்க்கையோடு போராட முடியாத நிலையில் தத்தளிக்கின்றார்கள்.

அவர்களை அரவணைத்துச் செல்லப்போவது யார்?

இதற்கும் மேலாக தமிழினத்தின் விடிவிற்காக தங்கள் பிள்ளைகளை அனுப்பிய பெற்றோர்களின் நிலமையென்பது படுபயங்கரமாகவே மாறிப்போய்விட்டது.

பிள்ளைகளை விடுதலைப் போராட்டத்திற்கு அனுப்பி, அவர்கள் போரில் இரையாகிப் போக, பெற்றவர்கள் கண்ணீரும் கம்பலையுமாக இன்று அலைகிறார்கள்.

பல முன்னாள் போராளிகளின், மாவீரர்களின் பெற்றோர்கள் அடுத்த வேளை சாப்பாட்டிற்கும் வழியில்லாமல் தவிக்கிறார்கள், செத்துக்கொண்டிருக்கின்றார்கள் என்பது நம்மில் பல பேருக்கும் தெரியும்.

ஆனால் அவை யாவைற்றையும் கண்டு கொள்வதில்லை இப்போதிருக்கும் தமிழினம். இதே பெற்றோர்களை தான் 2009ம் ஆண்டிற்கு முன்னார் போற்றியது இந்த இனம். ஆனால் இன்று.?

தமிழினத்தின் விடிவிற்காக தன் பிள்ளைகளை உகந்தளித்த எத்தனையோ பெற்றோர்கள் உண்டு. இப்பொழுது முன்னாள் போராளிகளில் சிலர் குடும்ப வாழ்க்கையில் இணைந்திருக்கிறார்கள்.

அவர்கள் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கையை சீரமைத்தக் கொடுக்க முடியாத நிலையில் திண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது தான் உண்மை

அவர்களில் ஒருத்தி தான் இந்த ஜீவகுமார் செல்வகுமாரி. தன்னை விடுதலைப் போராட்டத்தில் இணைத்துக் கொண்டவர் இவர். தன் இனத்தின் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட அடக்குமுறைகளையும், ஒடுக்குமுறைகளையும், தன்னால் முடிந்த வரை உடைக்க களம் புகுந்தவர் தான் செல்வகுமாரி.

ஆனால் உலகமே ஒன்றினைந்து இந்த விடுதலைப் போராட்டத்தை நசுக்கிய வேளை தன் இலக்கை அடைய முடியாமல் மக்களோடு மக்களாக வெளியேறினார் அவர்.

காலச் சுழற்சியில் அவருக்கும் குடும்ப வாழ்க்கை. ஆனால் பாவம் அவருக்கு போராட்டத்தில் கண்பார்வையும் அற்றுப்போக தன்னுடைய மூன்று பிள்ளைகளையும் பராமரிக்க முடியாமல் வாழ்க்கையில் பெரிதும் அவதிப்பட்டுத்தான் போய்விட்டார்.

என்ன செய்வது, களப் போராட்டத்தை நேர்த்தியாக செய்து எதிரியை திக்குமுக்காடச் செய்தவர்க்கு வாழ்க்கையே திக்குமுக்காட வைத்துவிட்டது.

இப்பொழுது பார்வை இல்லை. பெற்றெடுத்த பிள்ளைகளுக்கு வழிகாட்டி வாழவைக்க முடியாத ஒரு அவல வாழ்வு.

இத்தனை துன்பத்தையும் அந்தப் போராளி சமாளித்துக் கொண்டிருந்திருக்கிறாள்.

கடந்த மாதம் 12ம் திகதி தனது சகோதரின் வீட்டிற்கு சென்றிருந்த நிலையில், அங்கே நுளம்பிற்கு தீ வைக்க முனைந்து, தீ சேலையில் பட்டு, கடும் காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடி இறுதியாக கடந்த இரண்டாம் திகதி தன் போராட்ட வாழ்க்கையை முடித்துக் கொண்டிருக்கின்றார்.

இன்னமும் அவரின் போராட்டம் முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஆம். இறந்ததன் பின்னரும் விடவில்லை அவரின் துன்பம். அடக்கம் செய்ய முடியாத ஒரு அவலம் தான் அது. மரணமடைந்த அந்த களப்புலியை அடக்கம் செய்வதற்கு தன்னிடம் பணமில்லை என்றும். எனவே அரசாங்கத்தின் செலவில் அடக்கம் செய்யக் கோரிக்கை விடுத்துள்ளார் அந்தப் போராளியின் சகோதரி.

இதுவே புலிகளின் தலைவர் பிரபாகரன் இருந்திருந்தால் விட்டிருப்பாரா? 2009ம் ஆண்டிற்கு முன்னர் இருந்த நிலமைகளை சற்று உற்று நோக்கியிருந்தால் புரிந்திருக்கும். மரணித்த போராளிகளுக்கு இராணுவ மரியாதையளித்து அவர்களை விதைத்திருப்பார்கள்.

புதைக்கப்பட்டது உடல் அல்ல. அது விதை என்றும். மாவீரர் என்றும் போற்றியிருந்தார். இப்பொழுது அவர்களின் நிலமை. அரசாங்கத்தின் செலவில் அடக்கம் செய்யுங்கள் என்று கெஞ்சும் அளவிற்கு மாறியிருக்கிறது.

பிரபாகரனும், விடுதலைப் புலிகளும் தான் மீண்டும் அவர்களை மரியாதை செலுத்தவும், கௌரவிக்கவும் வரவேண்டுமா? அப்படியெனில் பிரபாகரனுக்கும், விடுதலைப்புலிகளுக்காகவும் தான் இந்த போராளிகள் தங்களை தியாகம் செய்து போராடினார்களா என்ன?

போராட்டக் களத்திலும் சரி, வேறு தளத்திலும் சரி அவர்கள் இறந்தால் அவர்களுக்கான மரியாதையை நாம் தான் அளிக்க வேண்டும். இனியேனும் எஞ்சியிருக்கும் முன்னாள் போராளிகளின் வாழ்க்கையை எட்டிப் பாரக்க முயற்சி செய்வோமாக.

ஏனெனில் அன்று அவர்கள் தனித்து நின்று களமாடும் போதும், போராடும் போதும், அவர்களுக்கு பக்கபலமாக எம்மால் நின்று போராட முடியாமல் போயிருக்கலாம். ஆனால் அவர்கள் இன்று தமது குடும்ப வாழ்க்கையில் தனித்து நின்று போராடும் போது நிச்சையமாக நம்மால் உதவ முடியும்.

கரம் கொடுக்க முடியும். உதவ நம்மிடம் எதுவும் இல்லை என்றாலும் கூட எப்படி இருக்கிறீர்கள் என்று ஒரு நாலு வார்த்தை கேட்டாலே போதும் அவர்களுக்காக நாம் செய்யும் பேருதவியாகும்.

இதைத் தமிழினம் செய்ய மறுக்குமாயின், விடுதலைப் போராட்டத்திற்காக அவர்கள் செய்த தியாகம் வீணானதாகிப்போகும். சிந்தத்துச் செயலாற்றுங்கள் அன்பு  சகோதரர்களே.

-http://www.tamilwin.com

TAGS: