புலம்பெயர்ந்த தமிழர்களை மீண்டும் பகிரங்கமாக அழைக்கும் ரணில்!

ranil-economic-forum-1புலம்பெயர் தமிழ் மக்கள் இலங்கையின் வடக்கு தெற்கு பகுதிகளின் அபிவிருத்திக்கு தமது முதலீடுகளை மேற்கொள்ளலாம். அதற்காக பகிரங்க அழைப்பை விடுக்கின்றேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

இலங்கை பொருளாதார மாநாட்டின் ஆரம்ப நிகழ்வு நேற்று வியாழக்கிழமை காலை கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் கருத்து வெளியிடும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறினார்.

அங்கு பிரதமர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

நாளை சனிக்கிழமை பாராளுமன்றத்தின் விசேட அமர்வு இடம்பெறுகிறது. இதன்போது பாராளுமன்றத்தை அரசியலமைப்பு சபையாக மாற்றும் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது.இதன் மூலம் நாட்டு மக்களுக்கு நாம் வழங்கிய உறுதி மொழியொன்றை நிறைவேற்றுகின்றோம்.

புதிய அரசியலமைப்பு நிறைவேற்றுப்பட்ட பின்னர் அனைத்து மக்களுக்கும் தமது சொந்தக் காணிகள் மீள கையளிக்கப்படும். இதன் மூலம் மக்கள் அனைவரும் தமது விவசாயக் காணிகளில் பயிர் செய்யும் நிலைமை ஏற்படுத்தப்படும்.

எமக்கு தேர்தலின் போது வாக்களித்த மக்களுக்கும் வாக்களிக்காத மக்களுக்கும் அரசாங்கம் என்ற ரீதியில் கடமைகளை நிறைவேற்ற வேண்டியது எமது பொறுப்பாகும்.

எனவே நாட்டில் சிறப்பான பொருளாதாரத்தை கட்டியெழுப்பி அதன் அனுகூலங்களை மக்கள் பெற்றுக் கொள்ளும் நிலைமையை ஏற்படுத்துவோம். இதன் போது எதுவிதமான பாகுபாடும் காட்டமாட்டோம்.

புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் ஜேர்மனி , கனடா, அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் உட்பட பல நாடுகளில் பரந்துப்பட்டு வாழ்கின்றார்கள். இவர்களில் பெரும்பாலானோர் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

இவர்கள் இலங்கையின் வடக்கின் அபிவிருத்திக்கு முதலீடுகளை மேற்கொள்ள முடியும். வடக்கில் மட்டுமல்ல கொழும்பின் அபிவிருத்திக்கும் இவர்களால் பங்களிப்பு செய்ய முடியும்.

அது மட்டுமல்லாது புலம்பெயர்ந்து வாழும் சிங்கள மக்களும் தமது பங்களிப்பை இலங்கைக்கு வழங்க முடியும். பெரும்பாலான புலம்பெயர் சிங்களவர்கள் கல்வித் துறையில் நிபுணத்துவம் பெற்று வெளிநாடுகளில் தொழில் புரிகின்றனர்.

இவர்களால் இலங்கையின் கல்வித் துறையின் மேம்பாட்டுக்கு பங்களிப்பை வழங்க முடியும். எனவே புலம்பெயர் தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் தமது தாய் நாட்டிற்கு பங்களிப்பை வழங்குமாறு அழைப்பு விடுக்கின்றேன்.

மேற்குலக நாடுகளுடனும் பொருளாதார நட்புறவை ஏற்படுத்தி கொள்வதோடு விசேடமாக அயல் நாடான இந்தியாவின் தமிழ் நாடு, மகாராஷ்டிரா, குஜராத், ஆந்திரா போன்ற மாநிலங்களுடன் வர்த்தக தொடர்புகள் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டு அம் மாநிலங்களின் முதலீடுகளை இங்கு பெற்றுக் கொள்வதற்கு நடவடிகைகள் மேற்கொள்ளப்படும்.

அத்தோடு இந்தியாவுடன் வர்த்தக தொழில்நுட்ப உடன்படிக்கையும் செய்து கொள்ளப்படவுள்ளது. பாகிஸ்தானோடு வர்த்தக உடன்படிக்கை செய்து கொள்வது தொடர்பாகவும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன.அதேபோன்று சீனா, ஜப்பானுடனும் பேச்சுக்கள் நடத்தப்படுகின்றன.அனைத்து தரப்பினருடனும் ஆரம்பக்கட்ட பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சீனாவின் பொருளாதாரம் ஸ்திரமடைந்துள்ளது. எதிர்காலத்தில் மத்திய கிழக்கில் என்ன நடக்கும் என்பது தெரியாது. அமெரிக்காவிலும் நெருக்கடிகள் உருவாகலாம். எனவே இந்து சமுத்திரத்தின் போட்டிமிக்க சமூகச் சூழலை எமது நாட்டில் கட்டியெழுப்ப வேண்டும்.

எம் மீது நீங்கள் வைத்த நம்பிக்கைக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

இம் மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட அமைச்சர்களான சம்பிக்க ரணவக்க, எராண் விக்கிரம ரட்ண, ரவி கருணாநாயக, கலாநிதி சாரதி அழுத்கம உட்பட பல அமைச்சர்கள் கலந்து கொண்டதோடு உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்களான சோரோஸ், ரிக்கன்டோ ஹவஸ்மன், ஜேஸப் ஸ்டிபிகிளிட்ஸ் உட்பட பல நாடுகளிலிருந்து பொருளாதார நிபுணர்களும் முதலீட்டாளர்களும் உள்ளூர் பொருளாதார முதலீட்டாளர்களும் கலந்து கொண்டனர்.

-http://www.tamilwin.com

TAGS: