இலங்கையில் தமிழருக்கு எதிரான சித்திரவதைகள் தொடர்கிறது: சர்வதேச மனித உரிமைகள் குழு!

slஇலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள போதிலும், அரச படையினரால் தமிழ் மக்கள் தொடர்ந்தும் சித்திரவதைக்கு உள்ளாகி வருவதாக தென்னாப்பிரிக்காவைக் சேர்ந்த உரிமை பிரச்சாரக் குழுவான உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேசத் திட்டம் தெரிவித்துள்ளது.

சீர்திருத்தங்கள் கொண்டுவரப்படும் என்று புதிய ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேன வாக்குறுதி அளித்திருந்தாலும், தமிழர்கள் சிலர் இன்றளவும் கடுமையான வன்முறைக்கும் சித்திரவதைக்கும் ஆளாகிவருவதாக அந்தக் குழு குறிப்பிட்டுள்ளார்.

முன்பு, விடுதலைப் புலிகள் அமைப்பில் செயலாற்றியவர்கள் மற்றும் சிறார் போராளியாகச் சேர்க்கப்பட்டவர்கள் பெரும்பான்மையாக ஆண்கள் பதினைந்து பேரையும் பெண்கள் ஐந்து பேரையும் இந்த சர்வதேச அமைப்பு விசாரித்திருந்தது.

தகவல் தெரிவித்த அனைவருமே, சென்ற ஆண்டில் தாங்கள் பொலிஸாராலும், இராணுவ உளவுப் பிரிவினராலும் மோசமான வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரிவித்திருந்தனர்.

பலரால் ஒரே நேரத்தில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட கொடுமையையும் அனுபவித்ததாக சிலர் தெரிவித்துள்ளனர். விசாரிக்கப்பட்டவர்கள் அனைவருமே தற்போது நாட்டை விட்டு வெளியேறியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, சர்வதேச பிரச்சாரக் குழுவின் இந்தக் குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.

இலங்கையில் சித்ரவதை சம்பவங்களோ, வெள்ளை வேன் ஆட்கடத்தல் சம்பவங்களோ சென்ற ஆண்டில் நடந்ததாக தமக்குத் தெரியவரவில்லை என்று இலங்கை அரசாங்கத்தின் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.

இப்படியான சம்பவங்கள் நடந்ததற்கான ஆதாரம் இருந்து அது இலங்கை அரசாங்கத்துக்கு அனுப்பப்பட்டால், அது பற்றி விசாரிக்கப்படும், ஆனால் அப்படியான விவரம் எதுவும் பாதுகாப்புத் துறைக்கு அனுப்பப்பட்டதாக தனக்கு தெரியவரவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

உண்மைக்கும் நீதிக்குமான சர்வதேச திட்டம் அமைப்பினர் இலங்கைக்கு வராமலே இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், எனவே விசாரணை நடத்தியவர்களிடம் தவறான விவரங்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் ராஜித சேனரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கையில் சென்ற ஆண்டில் ஆட்கடத்தலோ சித்ரவதையோ நடந்திருந்தால் அதுபற்றி ஊடகங்களில் செய்தி வந்திருக்கும், ஆனால் அப்படியான செய்தி எதுவுமே வெளியாகவில்லை என இராணுவம் சார்பாகப் பேசவல்ல பிரிகேடியர் ஜெயவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.

-பிபிசி

TAGS: