அதிக சர்ச்சைகள் விவாதங்கள், கருத்து மோதல்கள் என்று தனது அவதரிப்போடு இருக்கின்றது தமிழ் மக்கள் பேரவை. இன்றைய கால அரசியல் சூழலில் தமிழ் மக்கள் பேரவை தேவை தானா என்று ஒரு தரப்பும். வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன் தவறான தலைவர்களோடு இணைந்து விட்டார் என்று இன்னொரு தரப்பும்.
அரசியல் சூழல் கருதி எடுக்கப்பட்ட முடிவு அல்ல இதுவென்று வேறு தரப்பும், முதல்வர் விக்கினேஸ்வரனுக்கு அரசியல் ஞானம் போதாது என்று பிரிதொரு பிரிவும் விவாதிக்க, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிளவு அடைவதற்கான ஒரு அறிகுறியே இதுவென்று இன்னொரு கருத்தும் வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன.
இதற்கிடையில், தமது தோற்றுப்போன அரசியல் கொள்கைகளை கொண்டு சிலர் பின்வாசல் வழியாக உள்நுழைகின்றார்கள் என நேரடியாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தும் இருந்திருந்தார்.
எனினும் அது எதுவும் இல்லை என்றும், இது தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கு எதிரான அமைப்பு அல்ல. அரசியல் கட்சியாக தோற்றம் பெறும் எண்ணமும் எமக்கு இல்லை என்றும், வடமாகாண சபை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் வெளிப்படையாக அறிவித்திருக்கின்றார்.
ஆனால் இவையெல்லாம் பெரிய விவாதப்பொருளாக மாறி பலரை சமூக வெளியில் சண்டை போடும் அளவிற்கு மாற்றியிருக்கின்றது.
உண்மையில் தமிழ் மக்கள் பேரவை இப்பொழுது தேவை தானா என்றும், இதன் அவசியம் என்னவென்றும் பார்க்க வேண்டிய கடமை நமக்கு உண்டு.
அகிம்சையில் இருந்து ஆயுதப்போராட்டத்தில் தள்ளப்பட்ட ஒரு இனம், ஒற்றுமையீனத்தின் அடையாளமாக உலகில் எப்பொழுதும் உதாரணமாக திகழப்போவது தமிழினம் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.
அகிம்சைப் போராட்டத்திலாயினும் சரி, ஆயுதப்போராட்டங்கள் உச்சத்தை தொட்ட காலத்திலும் சரி என்றுமே எம்மிடம் ஒற்றுமை என்ற கருத்துக்கோ, விட்டுக்கொடுப்பிற்கோ அறவே இடமில்லை. மாறாக காட்டிக்கொடுப்பிற்கும், துரோகச் செயல்களுக்குமே முன்னுரிமை கொடுத்துக்கொண்டிருந்தது இந்த தமிழினம்.
அப்படியில்லையாயின் என்றோ தமிழினம் விடுதலை பெற்றிருக்கும், அரசியல் தீர்வைப் பெற்றிருக்கும். ஆனால் இன்றளவும் கடந்து வந்த பாதையையும், கிடைத்த பாடங்களில் இருந்தும் நாம் பாடங்களை கற்றுக்கொள்பவர்களாக, வரலாறு தெரியாதவர்களாக இருப்பது வேதனையிலும் வேதனை.
இன்று கிடைத்த ஜனநாயக வெளியைப்பயன்படுத்தி ஏதேனும், ஒரு தீர்க்கமான முடிவிற்கு வரமுடியாத ஒரு இனமாக, சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தக் கூடிய சாணக்கியர்களாக நமது அரசியல் தலைமைகள் பின்னிப்பதானது இன்னமும் அறுபது ஆண்டுகள் கடந்தாலும் அரசியல் தீர்வித்திட்டத்தினை பெற்றுவிடமுடியாது போலவே தோன்றுகின்றது.
தமிழீழத் தேசியத் தலைவரின் பின்னால் அதாவது, 2009ம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னர் ஏற்பட்ட தமிழினத்தின் தலைமை வெற்றிடத்தை நிரப்புவதற்கான சந்தர்ப்பம் அறவே இல்லை என்றாகிவிட்டது. அந்தத் தலைமையை எந்தக் காலத்திலும் நிரப்ப முடியாது என்பது நிதர்சனமான உண்மை.
ஆனால் வடக்கின் முதலமைச்சராக விக்கினேஸ்வரன் பொறுப்பேற்றுக் கொண்டதில் இருந்து தமிழ் மக்களின் மனதில் ஒருவகையான நம்பிக்கை துளிர்விடத் தொடங்கியது என்பது உண்மை. அவரை இன்றைய எதிர்க் கட்சித் தலைவர் இராசவரோதயம் சம்பந்தன் பொதுவேட்பாளராக நியமிப்பதாக அறிவித்த வேளை, இன்று தமிழ் மக்கள் பேரவை தொடங்கப்பட்ட போது எவ்வாறு சலசலப்புக்களும் சஞ்சலங்களும் ஏற்பட்டதோ அதே போன்றதொரு நிகழ்வு நிகழ்ந்தது.
ஆனாலும் வடக்கு மக்கள் அதையெல்லாம் பொய்ப்பித்தார்கள். அதிகூடிய விருப்பு வாக்குகளால் அவரை வடக்கின் முதல்வர் ஆக்கினார்கள்.
புலிச்சாயம் இல்லாத ஒருவர், இலங்கையின் நீதியராக இருந்தவர். சிங்கள ஆட்சியாளர்களோடு மிகுந்த பழக்கம் கொண்டவர். சர்வதேசம் நிச்சையமாக அவரின் பேச்சிற்கு செவி சாய்த்தே ஆகவேண்டும் என்பது தமிழ் மக்களின் முடிவு. அதனால் தான் அன்றைய வடமாகாண சபைத் தேர்தலின் முடிவும் இவ்விதம் அமைந்தது.
தமிழ் மக்களின் ஏகோபித்த வாக்குகளைப் பெற்ற அவரினால் தமிழ் மக்களுக்கு என்றுமே துரோகம் செய்துவிட முடியாது. அப்படி செய்பவரும் அல்ல வடக்கின் முதலவர்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் பல்வேறு மாறுபட்ட விமர்சனங்களை காணமுடிகின்றது.
ஏன் அவர் தமிழ் மக்கள் பேரவை உருவாக்கத்திற்கு சம்மதித்தார்?
இந்தக் கேள்விக்கான பதில் மிகவும் சுலபமானது. கடந்த ஆண்டு ஜனவரி மாதம் நிகழ்ந்த ஆட்சி மாற்றத்தின் பின்னர் முதல்வரின் அரசியல் நகர்வுகளும் சற்றே வித்தியாசமானதாக தான் மாறியது. முன்னதாக மகிந்த ராஜபக்சவோடு நெருங்கிப் பழகி, அவரோடு ஒரு நெருக்கமான உறவைப் பேண முனைந்தவர் முதல்வர்.
ஆனால், மைத்திரி ரணில் ஆட்சியில், ஏன் அவர் அரசோடு, கொஞ்சம் இறுக்கமான போக்கை கடைப்பிடிக்கின்றார். இத்தனைக்கும் மைத்திரியோடு நெருங்கிய நட்புக் கொண்டவர் விக்கினேஸ்வரன் என்பது வெளிப்படையானது. இது சொல்லித் தான் தெரியவேண்டும் என்றில்லை.
ஆனால், மைத்திரியோடு கூடவே இருப்பவர் யார் என்று அவருக்கு நன்றாகவே தெரியும், ஒருவர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா, அவர் சமாதான தேவதையாக வந்து இந்த நாட்டில் இரத்த ஆற்றைப் பெருகவிட்டவர். இன்னொருவர் தான் சமாதான ஒப்பந்தத்தைக் கொண்டுவந்து புலிகளைப் பலவீனப்படுத்திய ராஜதந்திரி.
எங்கு நெருங்கிப் பழகவேண்டும் என்றும். எங்கு நெருக்கத்தை குறைத்து இறுக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பதும் முதல்வருக்கு தெரியாமல் இல்லை.
இந்நிலையில், மைத்திரி ரணில் அரசோடு இறுக்கத்தை கடைப்பிடித்தாலேயே நினைத்தததை வாங்க முடியும் என்பது அவரின் முடிவாக இருக்கலாம். காரணம் மைத்திரி, ரணில் அரசு அமெரிக்கா, இந்திய அரசுகளின் கூட்டாக பணியாற்றுகின்றது.
அவ்வாறான நிலையில், இணங்கினால் அவர்கள் கொடுக்கும் தீர்வுத்திட்டத்திற்கும் இணங்கியாக வேண்டும். ஏற்கனவே சர்வதேச விசாரணை என்று இருந்த போர்க்குற்ற விசாரணையை உள்நாட்டு விசாரணை ஆக்குவதற்கு அமெரிக்கா இணங்கிவிட்டது. இதில் தமிழ்த் தலைமைகள் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை.
தவிர, சிதறிக்கிடக்கும், அரசியல் கட்சிகளும், தலைவர்களும், ஒன்றினைவதற்கான ஒரு அறிகுறியும் இல்லை. இந்நிலையில், இந்தியாவினதும், அமெரிக்காவினதும் வற்புறுத்தலை எவ்வாறு சமாளிப்பது?
இதன் ஒரு ஆரம்பப் புள்ளியே தமிழ் மக்கள் பேரவை. 2016ம் ஆண்டிற்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுவிடுவோம் என்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், இலங்கையின் எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன். உண்மையில் அவரின் இந்த எதிர்வு கூறல் வரவேற்கப்படவேண்டியது என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
ஆனால் வாங்கப்போகும் தீர்வுத் திட்டம் தான் என்ன? தமிழ் மக்களின் ஆதரவோ, பங்களிப்போ இன்றிக் கொண்டுவரப்பட்ட 13வது திருத்தச் சட்டமா? இல்லை, அதற்கும் குறைந்த தீர்வா? அதை விட பிரிக்கப்பட்ட வடக்குக் கிழக்கின் ஆட்சி அலகா? எது என்று இன்னமும் தெரியவில்லை.
இந்நிலையில் தமிழ் மக்கள் பேரவையின் தோற்றம் என்பது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் தீர்வினைப் பெறுவதற்கு தடையாக இருக்காது என்பது நமது முடிவு. அதுவே பேரவையின் முடிவாகவும் இருக்கும் என நம்பலாம்.
2016ம் ஆண்டு கிடைக்கும் என சொல்லப்படும் தீர்வுத் திட்டம் ஏதோ அரசாங்கம் கொடுக்கின்றது. அதை நமது காலத்தில் பெற்று விடலாம் என்று நினைத்து கொடுப்பதை வாங்குவதற்காக இவ்வளவு உயிர்களையும் பலிகொடுக்கவில்லை தமிழினம் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
தமிழினத்தின் விடிவிற்காக நாங்கள் கொடுக்காத விலையில்லை. கொடுத்தவையெல்லாம் பெறுமதியான இளைஞர், யுவதிகளின் உயிர்கள், வாழ்க்கை, தியாகம். இந்நிலையில் அரசாங்கம் கொடுக்கும் தீர்வினை பெற, அமெரிக்கா, இந்தியா நினைக்கும் முடிவினை ஏற்பதற்கு ஏன் இத்தனை போராட்டங்களை தமிழினம் சந்தித்திருக்க வேண்டும்.
ஆக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசியல் தீர்வுத் திட்டத்திற்காக பேச வேண்டியது கட்டாயம். ஏனெனில் தமிழ் மக்களின், ஒன்றினைவின், தமிழ்த் தேசியத்தின் மீதான மக்களின் ஏகோபித்த ஆதரவை கொடுத்திருக்கின்றார்கள்.
அதே நேரம், அரசாங்கம் கொடுப்பதை வாங்குவதைக் காட்டிலும், நியாயமான ஒரு தீர்வுத்திட்டத்தை தாருங்கள் என வலுவாக குரல் கொடுப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு பக்கபலமாக இருக்கப் போவதும், இந்த பேரவையாக தான் இருக்க முடியும்.
ஏனெனில், தமிழீழம், சமஷ்டி, 13 ப்ளஸ், 13, என்று தீர்வுத்திட்டம் சுருங்கி, மாகாணம், பின்னர் காணி பொலிஸ் அதிகாரம் இல்லாத ஒரு டம்மியான இனமாக மாற்றியிருக்கின்றார்கள் சிங்கள இராஜதந்திரிகள்.
இத்தனைக்கும் அவர்கள் தமிழ் மக்களுக்கு கொடுக்கும் அதிகாரங்களின் விடையத்தில் ஒற்றுமையாகவே இருக்கின்றார்கள். ஆனால் தமிழ்த் தலைமைகள் மட்டும் பிரிந்து கிடக்கின்றார்கள்.
இது வரவேற்கத்தக்க விடையமன்று.
தமிழ் மக்கள் பேரவை என்பது காலத்தின் தேவையறிந்து தோற்றிவிக்கப்பட்டது என்பது உண்மை. அதை வரவேற்று, அதனோடு இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பயணிக்க வேண்டும். கொடுப்பதை வாங்குவதற்காக நாங்கள் இத்தனை உயிர்களையும் காவு கொடுக்கவில்லை என்பதை சற்றேனும் புரிந்து கொள்ளுங்கள்.
இதனையும் புரிந்து கொள்ளாமல் காலத்தை வீணடிப்பீர்களாயின் இனி யாராலும் தமிழினத்தை காப்பாற்ற முடியாது. குறிப்பாக ரணிலிடம் இருந்து தமிழினத்தின் தீர்வை பெற்று விடமுடியாது. சிந்தித்து செயலாற்றுங்கள்.
இத்தனை அழிவுகளையும் சந்தித்த, பட்டறிவுள்ள இனம் நாம். காய்ந்து போன, எதற்குமே உதவாத தீர்வுத்திட்டம் தேவையற்றது. அதற்கு தமிழ் மக்கள் பேரவையும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் இடம்கொடுக்க கூடாது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், தமிழ் மக்கள் பேரவையும் இணைந்து பணியாற்ற வேண்டியது அவசிம். அது காலத்தின் கட்டாயம். ஒருசிலரின் பிடிவாதத்தாலும், கோப தாபங்களாலும், தமிழினத்தை நட்டாற்றில் விட்டுவிடாதீர்கள். உங்கள் தனிப்பட்ட போட்டி அரசியலை தனிப்பட்ட விடையத்த்தில் வைத்துக்கொள்ளுங்கள். தமிழினத்தின் எதிர்காலத்தில் கை வைத்து விடாதீர்கள் ப்ளீஸ்.
-எஸ்.பி. தாஸ்
-http://www.tamilwin.com