அரசாங்க உயர்மட்டத்தினருடன் சந்திப்புக்களை நடத்திய ஜெய்சங்கர் இன்று கூட்டமைப்பினருடன் பேச்சு

jaishankar_foreign_secretaryஇலங்கை – இந்திய கூட்டு ஆணைக்குழுவின் முன்னெடுப்புகள் மற்றும் இரு நாடுகளினதும் ஒன்றிணைந்த எதிர்கால திட்டங்கள் தொடர்பில் இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் நேற்று அரசாங்கத்தின் உயர்மட்டத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதேவேளை, எதிர்க் கட்சி தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களை இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் இன்று சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்த இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்களை நேற்று சந்தித்ததுடன் இன்று எதிர்க்கட்சி தலைவரின் சந்திப்பின் பின்னர் நாடு திரும்புகின்றார்.

அத்துடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பும் நேற்றிரவு இடம்பெற்றது.

இலங்கை – இந்திய கூட்டு ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை ஆராய்வதற்கும் அதற்கான முன்னேற்பாடுகளை பார்வையிடுவதற்குமே வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் இலங்கை வந்துள்ளார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் இலங்கையில் இடம்பெறவுள்ள இலங்கை – இந்திய கூட்டு ஆணைக்குழுவின் சந்திப்பில் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் உள்ளிட்ட இந்திய உயர்மட்ட குழு கலந்து கொள்ளவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகளை செய்வது வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கரின் விஜயத்தின் முக்கிய நோக்கமாக அமைந்துள்ளது

பொருளாதாரம் வர்த்தகம் மற்றும் இரு நாட்டு பல் துறைசார் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இலங்கை – இந்திய கூட்டு ஆணைக்குழு எதிர்வரும் பெப்ரவரி மாதம் கொழும்பில் நடைபெறுகின்றது.

-http://www.tamilwin.com

TAGS: