நல்லிணக்க முயற்சிகளுக்கு த.தே.கூ பூரண ஒத்துழைப்பை வழங்குகின்றது: ஜனாதிபதி (முழுமையான செவ்வி இணைப்பு)

maithryஅரசாங்கம் முன்னெடுக்கும் நல்லிணக்க முயற்சிகளுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பூரண ஒத்துழைப்பு வழங்கி வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்தச் செவ்வியின் முழுமையான வடிவம்

கேள்வி: அரசாங்கத்தின் நல்லிணக்க நடவடிக்கைகளில் தமிழ் தரப்பின் ஒத்துழைப்பு எவ்வாறுள்ளது? இதில் வடக்கு மாகாண சபையிடமிருந்து கிடைக்கும் ஒத்துழைப்பு பற்றி கூற முடியுமா?

மைத்திரி: வடக்கு மாகாண சபை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமே உள்ளது. அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரே அரசாங்கத்தின் எதிர்க்கட்சித் தலைவராகவும் உள்ளார். இதற்கிணங்க அக்கட்சியிடமிருந்து திருப்தியளிக்கும் வகையில் ஆதரவு உள்ளது.

வடக்கு மாகாண சபையைப் பொறுத்தவரை நிறுவன ரீதியாக கட்சிக்குள் உள்விவகாரங்கள் இருந்தாலும் அது அரசாங்கத்திற்கோ நல்லிணக்க நடவடிக்கைகளுக்கோ பிரச்சினையாக இருக்க முடியாது. நாம் நிறுவன ரீதியிலன்றி கட்சி என்ற ரீதியிலேயே பார்க்கின்றோம். அக்கட்சி சகல சந்தர்ப்பங்களிலும் தொடர்ச்சியான ஆதரவை வழங்கி வருவதைக் குறிப்பிட முடியும்.

கேள்வி: தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சில கட்சிகளே ஒன்றிணைந்து ‘தமிழ் மக்கள் பேரவை’ என ஒரு அமைப்பை ஏற்படுத்தி இருப்பதால், அரசாங்கத்தின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு தமிழ் தரப்பிலிருந்து கிடைக்கும் ஒத்துழைப்புகளில் இது தாக்கம் ஏற்படுத்தலாம் என்ற நிலைமை உள்ளதே?

மைத்திரி: அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளக பிரச்சினை, கட்சிகளின் உள்ளக பிரச்சினை நல்லிணக்க செயற்பாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. நாம் தேசிய ரீதியாகவே அனைத்தையும் பார்க்கிறோம். தேசிய ரீதியான உடன்பாடுகள் தற்போது திருப்திகரமாகவே உள்ளன.

கேள்வி: வடக்கின் தற்போதைய கட்சிகளுக்கிடையிலான பிளவுபட்ட நிலை அரசியல் தீர்வு மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற விரக்தி நிலை தமிழ் மக்களிடம் உருவாகியுள்ளதே. அது பற்றிய தங்களின் கருத்தென்ன?

மைத்திரி: கட்சிகளுக்கிடையிலான பிரச்சினைகளில் நாம் தலையிட முடியாது. அத்தகைய உள்வீட்டுப் பிரச்சினைகளில் தலையிடும் உரிமையும் அரசாங்கத்துக்குக் கிடையாது என்பதையே என்னால் கூற முடியும்.

கேள்வி: தேசிய பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலேயே தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளது. இந்த நிலையில் புதிய அரசியலமைப்பு ஏற்பாடுகளானது ஒற்றையாட்சி முறையை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைந்துள்ளது. இந்த முரண்பாடு தொடர்பில் நீங்கள் கூற விரும்புவதென்ன?

மைத்திரி: இது தொடர்பில் எனது தனிப்பட்ட கருத்து கிடையாது. பாராளுமன்றமே அதனைத் தீர்மானிக்கும். அரசியலமைப்பை திருத்துவதா அல்லது புதிய அரசியலமைப்பொன்றை உருவாக்குவதா எவ்வாறு அதனை செயற்படுத்துவது போன்ற விடயங்களை அரசியலமைப்பு நிர்ணய சபையே தீர்மானிக்கும். நிர்ணய சபை எடுக்கும் தீர்மானங்களுக்கு எனது இணக்கப்பாட்டையும் வழங்குவேன்.

கேள்வி: புதிய அரசாங்கத்திற்கு 19வது அரசியலமைப்பு திருத்தத்தை வெற்றிகரமாக நிறைவேற்ற முடிந்தது. அதேபோன்று புதிதாக ஏற்படுத்தும் அரசியலமைப்புக்கும் பாராளுமன்றத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்களா?

மைத்திரி: பாராளுமன்றத்தின் அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடியதும், மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக பிரேரணை முன்வைக்கப்படுவது அவசியம். இதில் நாம் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளோம். நிறைவேற்றக் கூடியதே பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. பிரேரணை தயாரிப்பில் இருக்க வேண்டிய பொறுப்பு அது. அது சரியாக செய்யப்பட்டுள்ளது. நிறைவேற்ற முடியாததை நாம் சமர்ப்பிக்க மாட்டோம். இதற்கிணங்க புதிய அரசியலமைப்பு நிறைவேறும் என்பது உறுதி.

கேள்வி: புதிய அரசாங்கத்தின் செயற்பாடுகள் மேற்குலக நாடுகளுடன் நெருங்கியதாக காணப்படும் தோற்றப்பாடொன்று நிலவுகின்றது. இது அரசாங்கங்கள் கடந்த காலங்களில் கொண்டிருந்த நிலைப்பாட்டுக்கு எதிர்மறையானதாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றனவே இது தொடர்பில் தாங்கள் கூற விரும்புவதென்ன?

மைத்திரி: எமது வெளிநாட்டு உறவுகள் சிறப்பாகவே உள்ளன. நாம் ஒருபோதும் மேற்குலக நாடுகள், கீழைத்தேய நாடுகள் என்று பார்ப்பதில்லை. அனைத்து நாடுகளுடனும் ஒரே விதமான நல்லுறவையே கொண்டுள்ளோம். அனைத்து நாடுகளையும் நாம் நட்புறவாக்கியுள்ளதால் அவற்றின் பூரண ஒத்துழைப்புகள் எமக்குக் கிடைத்து வருகின்றதைக் குறிப்பிட முடியும். நடுநிலையானதும் வேறுபாடற்றதுமான வெளிநாட்டுக் கொள்கையே எமதாகும். அதேபோன்று உலகின் அனைத்து நாடுகளின் தலைவர்களும் எம்முடன் சுமுகமான உறவைக் கொண்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கேள்வி: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையில், அக்கட்சிக்குள் நிலவும் முரண்பாடுகள் பிரச்சினைகள் தொடர்பில் என்ன கூற விரும்புகிறீர்கள்?

மைத்திரி: ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மட்டுமன்றி அனைத்துக் கட்சிகளிலும் அங்கம் வகிப்பவர்கள் மனிதர்களே. இதனால் கட்சிகளில் பிரச்சினைகள் இருப்பது இயல்பு. பிரச்சினைகள், முரண்பாடுகள் இல்லாத கட்சிகள் உலகில் எங்கும் கிடையாது. பிரச்சினைகளின் வகை மற்றும் பாரதூரம் வித்தியாசமானதாக இருக்கலாம். நமது பாராளுமன்றத்தில் பெருமளவு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எம்.பிக்கள், அமைச்சர்கள் உள்ளனர். அவர்கள் மத்தியிலும் கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். இவற்றை நாம் பூதாகரமாக நோக்க வேண்டிய அவசியமில்லை. ஒரே கட்சி என்ற வகையில் பேச்சுவார்த்தைகள் மூலம் இவற்றை சுமுகமாக்கலாம்.

அதேவேளை, கட்சிக்குள் அனைவருக்கும் சுதந்திரம் அவசியம். அவர்கள் தத்தமது கருத்துக்களை வெளியிடும் உரிமை, சுதந்திரம் கொண்டவர்கள், கட்சிக்குள் ஜனநாயகம் அவசியம்.இதனால் கட்சி என்ற ரீதியில் அதன் அங்கத்தவர்கள் கருத்துக்களை வெளியிடலாம். சர்ச்சைக்குரிய விடயங்களும் இதில் அடங்கலாம்.

கேள்வி: அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு இது பாதிப்பு ஏற்படுத்தாது என நினைக்கின்றீர்களா?

மைத்திரி: இல்லை. அவற்றை நாம் பெரிய விடயமொன்றாகக் கருதவில்லை. எந்த பிரச்சினையையும் பேச்சுவார்த்தை மூலம் நிவர்த்திக்க முடியும். அரசியல் கட்சி என்பது மன்னர் ஒருவரது உரிமையல்ல. கருத்துச் சுதந்திரமும் பணியாற்றும் சுதந்திரமும் அவர்களுக்குள்ளது. கட்சியில் ஜனநாயகம் முக்கியமானது. இன்று கட்சியில் பல தரப்பட்ட கருத்துக்கள் உள்ளன. அவர்களது கூற்றுக்கள் தர்க்க ரீதியானதாகவும் காணப்படுகின்றன. இது கட்சியில் இருப்பது இயல்பே.

கேள்வி: எதிர்வரும் தேர்தலில் கை சின்னத்தில் போட்டியிடப் போவதாக அறிய முடிகிறது. அது பற்றி சற்று கூற முடியுமா?

மைத்திரி: அது பற்றி இப்போதைக்கு தீர்மானமில்லை தேர்தலின் போதே தேவையான வகையில் தீர்மானங்கள் செயற்பாடுகள் அமையும்.

கேள்வி: ஐ.எஸ்.எஸ். தீவிரவாத அமைப்பில் இலங்கையர்களும் இடம்பெறுவதாகக் கூறப்படுவது தொடர்பில் என்ன கூற விரும்புகிறீர்கள்?

மைத்திரி: அது பற்றி எனக்கு எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

கேள்வி: உங்கள் தலைமையிலான தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்கள் மீதே அதிக அக்கறையுடன் செயற்பட்டு வருகிறது என்ற தெற்கு மக்களின் ஆதங்கம் தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

மைத்திரி: அவ்வாறு ஒன்றுமில்லை. கடந்த ஜனவரி மாதம் தேர்தலில் அறுபத்திரெண்டரை இலட்சம் வாக்குகளை நான் பெற்றேன். அதனையடுத்து ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்துள்ளோம். இதில் எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. அரசாங்கத்துக்கு எதிரான சிலரின் கருத்து எதுவாக இருந்தாலும் மக்கள் மத்தியில் அப்படியொரு பிரச்சினையும் இல்லை.

கேள்வி: வடக்கு மக்கள் தமது எதிர்பார்ப்புகள் நிறைவேற்றப்படும் என்று உங்கள் மீது அசையாத நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்களது தேசிய பிரச்சினை காணி பிரச்சினை மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. கடந்த முறை நீங்கள் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த போது இது பற்றி பேசப்பட்டது. இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதா?

மைத்திரி: நாம் அனைத்தையும் ஆரம்பித்துள்ளோம். ஆறு மாத காலத்தில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். நான் கூறி இரண்டு வார காலமே ஆகிறது. எனினும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கேள்வி: மீள்குடியேற்ற நடவடிக்கைகளின் போது எதிர்கொள்ள நேரும் எதிர்ப்புகள் பற்றி?

பதில்: எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் அந்த மக்களுக்கு அவர்களது காணிகளை வழங்க வேண்டும் என்று. அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது முறையல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும். காணியை இழந்தவர்களுக்கு காணி வழங்கப்பட வேண்டும். அவர்களின் வீட்டு வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும். பல்வேறு கருத்துக்களைக் கொண்டவர்கள் தொடர்பில் நாம் கவனமெடுக்க முடியாது. இதனை நாம் செயற்படுத்துவது முக்கியம்.

கேள்வி: மீள்குடியேற்ற பிரச்சினை இழுபறி நிலையிலேயே கடந்த காலங்களில் இருந்தது. அது தொடர்பில் பல விமர்சனங்களும் எழுகின்றன. இது தொடர்பில் என்ன கூற விரும்புகிறீர்கள்?

மைத்திரி: விமர்சிப்போர் விமர்சிக்கட்டும் நாம் எமது செயற்பாடுகளை முன்னெடுப்போம். வேலையில்லாமல் வெறுமனே திரிவோரே விமர்சிப்பர். நாம் வேலை செய்ய வேண்டும். அரசாங்கம் சும்மா இருக்க முடியாது அது செயற்பட வேண்டும். செய்ய வேண்டியவற்றை அது செய்யும்.

கேள்வி: மலையகத் தோட்டப் புற மக்களின் சம்பளப் பிரச்சினை முடிவில்லாமல் தொடர்கிறது. கடந்த தேர்தல்களில் நாம் முழுமையான ஆதரவை ஜனாதிபதிக்கு வழங்கியதாகவும் அதனால் இந்த பிரச்சினையில் அரசாங்கம் தலையிட்டு நியாயமான தீர்வொன்றைப் பெற்றுத் தரவேண்டும் என்றும் தோட்டத் தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இது தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமா?

மைத்திரி: இது அரசாங்கத்தின் பிரச்சினையல்ல. தனியார்துறை பிரச்சினை. சம்பந்தப்பட்ட தோட்டக் கம்பனிகளிடம் நியாயமான தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்கும்படி நாம் உத்தரவிட்டுள்ளோம். கம்பனிகள் மீது நாம் வழக்குத் தொடர முடியாது.

கேள்வி: – தனியார் துறையினருக்கு வழங்கப்படவுள்ள 2500 ரூபா சம்பள அதிகரிப்பை தோட்டத் தொழிலாளர்களுக்கும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மைத்திரி: அதுபற்றி நாம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். பிரச்சினையை நாம் சிக்கலாக்கிக் கொள்ளக்கூடாது. இதனை எவ்வாறு அணுகலாம் என்றும் பார்க்க வேண்டும். தோட்டக் கம்பனிகளும் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பெரும் பங்களிப்பு செய்து வருகின்றன. அதேபோன்று தோட்டத் தொழிலாளர்களும் நாட்டின் பொருளாதாரத்திற்குப் பாரிய பங்களிப்புச் செய்கின்றனர்.இதனைக் கருத்திற் கொண்டு இரு பக்கத்தையும் பார்த்து முடிவு எடுக்கப்படவேண்டும். இதில் குறிப்பாக தோட்டங்களில் பணிபுரியும் வறுமை நிலையிலுள்ள அப்பாவித் தொழிலாளர்களுக்கு சிறந்ததொரு பொருளாதார நிலை ஏற்படுத்தப்படுவது அவசியம். அவர்களும் நன்றாக உண்டு. உடுத்து பிள்ளைகளை சிறப்பாக வளர்க்க வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும். வீட்டுப் பிரச்சினைகள் கவனிக்கப்பட வேண்டும். இதில் அரசாங்கம் என்ற வகையில் நாம் முடிந்தவற்றை செய்வோம்.

அதேபோன்று தோட்ட உரிமையாளர்களும் இதுவிடயத்தில் கவனம் செலுத்துவது முக்கியம். தமது ஊழியர்களுக்கான தேவைகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதை அவர்களும் உணர வேண்டும். சம்பள அதிகரிப்பை பொறுத்தவரை சம்பளத்தை அதிகரிக்குமாறு நாம் தோட்ட உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம் என்பதைக் குறிப்பிட வேண்டும்.

கேள்வி: எதிர்வரும் உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் தொடர்பில் கூற முடியுமா?

மைத்திரி: தொகுதிகள் பிரித்து நிர்ணயிக்கப்பட வேண்டியுள்ளது. 2000 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அவற்றைச் சரி செய்வதற்கு குறைந்தது மூன்று மாத காலமாவது எடுக்கும். அந்த நடவடிக்கை முடிவுற்றதும் தேர்தலை நடத்துவதே எமது எதிர்பார்ப்பு. தேர்தலில் வெற்றி தோல்வியை மக்களே தீர்மானிப்பர்.

-http://www.puthinamnews.com

TAGS: