‘தேர்தல் வாக்குறுதியில் கூறாததை செய்வதற்கு மக்களிடம் ஆணை பெற வேண்டும்’: சி.வி.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் விழா

யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் உரையாற்றிய வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், அவலங்களில் இருந்தும் ஆற்றாமைகளில் இருந்தும் இன்னும் மீட்சி பெறாத நிலையில் உள்ள வடமாகாண மக்கள் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடும் மனநிலையில் இல்லை என்று கூறியுள்ளார்.

இராணுவத்தின் அதியுயர் பாதுகாப்பு வலயமான பலாலியில் உள்ள ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்பாள் ஆலயத்தில் பலத்த பாதகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் தேசிய பொங்கல் விழா நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க மற்றும் அமைச்சர்கள், வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இந்த தேசிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி மைத்திரிபாலச சிறிசேன அவர்கள் கலந்து கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அவர் நிகழ்வுக்கு வருகை தரவில்லை.

ஆலயப் பொங்கல் நிகழ்வை தொடர்ந்து யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன. அங்கு வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட பலரும் உரையாற்றினர்.

‘எமது மக்களின் மனோநிலையை பிரதிபலிக்கும் வண்ணம், எமது 2013-ம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபனத்தை முன்னெடுக்கும் வண்ணம் எனது நடவடிக்கைகள் அமைந்திருக்கின்றன’ என்றார் விக்னேஸ்வரன்.

‘தேர்தலில் ஒன்றைக் கூறி நடைமுறையில் இன்னொன்றுக்கு உடன்படுவதாக இருந்தால் நாங்கள் மக்களின் புதியதொரு ஆணையைப் பெறவேண்டும்’ என்றும் கூறினார் வடக்கு முதலமைச்சர்.

‘ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் மாற்றம் ஏற்படுத்துதல், ஐநா உரிமை சாசனங்களின் அடிப்படையில் தமிழ் மக்களின் பிரச்சனைகளை நிரந்தரமாகத் தீர்த்து வைத்தல், ஐநா பிரேரணைக்கு அமைவாக போர்க்குற்ற விசாரணை நடத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுத்தல்’ ஆகிய மூன்று விடயங்கள் இப்போது முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன என்றார் விக்னேஸ்வரன்.

நிலையான அபிவிருத்தியை அடைவதற்கு ஐநா மன்றம் வகுத்துள்ள வழிமுறைகளை இலங்கை அரசு ஏற்றுள்ள போதிலும் அதற்கேற்ப அது செயற்படவில்லை என்றும் விக்னேஸ்வரன் கூறினார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைத் தொடர்ந்து வைத்திருப்பது அனைவரும் நீதியைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை அளித்திருக்கின்றதா என்று விக்னேஸ்வரன் இங்கு கேள்வி எழுப்பினார்.

பயங்கரவாத எதிர்ப்பு மனோநிலை மற்றும் தேசிய பாதுகாப்பு நோக்கம் என்பவற்றின் ஊடாக இயல்பானதொரு சமூகத்தை உருவாக்க முடியாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

சர்வதேச பயங்கரவாதம் ஊடுருவினால் என்ன செய்வது?- ரணில்

இதேவேளை இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வடக்கில் இன்னும் 4600 ஏக்கர் காணிகள் பொதுமக்களிடம் கையளிக்கப்படாமல் இருப்பதாகவும் அவற்றை விடுவிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

பயங்கரவாதத் தடைச் சட்டமானது செயலற்ற ஒரு சட்டமாகவே இருக்கின்றது. நாட்டில் பயங்கரவாதச் செயற்பாடுகள் இல்லாத போதிலும், சர்வதேச பயங்கரவாதம் நாட்டில் ஊடுருவினால் என்ன செய்வது என்பது தொடர்பில் ஆராய்ந்து அதற்கேற்ற வகையில் நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்றார் ரணில் விக்கிரமசிங்க.

சிறைக் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது என்றார் பிரதமர்.

தேசிய பாதுகாப்பின் அவசியத்தை உணர்ந்து செயற்படத்தக்க வகையில் தமிழ் இளைஞர்களை இராணுவத்தில் சேர்ப்பதற்கும் காவல்துறையில் 500 இளைஞர், யுவதிகளைச் சேர்த்துக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது என்றார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. -BBC

TAGS: