சிலுசிலுப்புத் தேவையில்லை தமிழர்களுக்குப் பலகாரமே வேண்டும்!

ca_salvaஇலங்கைக்குப் புதிய அரசியமைப்பு ஒன்றினை உருவாக்குவதற்கான முஸ்தீபுகள் முடுக்கிவிடப்பட்டுள்ள இன்றைய நிலையில் தமிழ்ச் சூழலில் ஒற்றையாட்சியா? சமஸ்டியா? தமிழ்மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு என்ற சர்ச்சைக்குள் தமிழர்களுடைய அரசியல் அரங்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்தச் சந்தர்ப்பத்தில் வடக்குக் கிழக்குத் தமிழர்களின் கடந்தகால அரசியலிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

1940 களில் அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் தலைவர் ஜி.ஜி பொன்னம்பலம் அவர்கள் இலங்கைக்கான சோல்பரி அரசியமைப்பு உருவாக்கத்தின் போது ஐம்பதுக்கு ஐம்பது| கோரிக்கையை முன் வைத்தார். இது நிறைவேறவில்லை. இக்கோரிக்கை தோல்வியிலேயே முடிந்தது.

அதன் பின்னர் ஜி.ஜி பொன்னம்பலம் அவர்களுடனான அரசியல் முரண்பாடு காரணமாக அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசிலிருந்து வெளியேறிய எஸ்.ஜே.வி செல்வநாயகம்(தந்தை செல்வா) அவர்கள் 1949 இல் அகில இலங்கைத் தமிழரசுக் கட்சியைச் ஸ்தாபித்துத் தமிழர்களின் இனப்பிரச்சனைக்குத் தீர்வாகச் சமஸ்டிக் கோரிக்கையை முன்வைத்தார்.

தனது அரசியல் இலக்காகச் சமஸ்டியை வரித்துக் கொண்டிருந்த சமகாலத்திலேயே தந்தை செல்வா அவர்கள் பிராந்திய சபைகளை ஏற்று 1957 இல் பண்டா – செல்வா ஒப்பந்தத்தையும், மாவட்ட சபைகளை ஏற்று 1965 இல் டட்லி – செல்வா ஒப்பந்தத்தையும் மேற்கொண்டார்.

பின் 1970 இல் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் ஆட்சியமைத்த திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கா அவர்கள் அதுவரையில் அமுலிலிருந்த சோல்பரி அரசியலமைப்பை நீக்கி 1972 இல் குடியரசு அரசியலமைப்பை அறிமுகம் செய்தார்.

1947 இலிருந்து 1972 வரை அமுலிலிருந்த சோல்பரி அரசியமைப்பில் ஒற்றையாட்சி என்ற பதம் இருக்கவில்லை. ஆனால் அது ஒற்றையாட்சிக் குணாம்சத்தைக் கொண்டிருந்தது.

அமரர் ஜி.ஜி பொன்னம்பலம் அவர்களின் ஐம்பதுக்கு ஐம்பது| கோரிக்கையோ அல்லது பண்டா செல்வா| ஒப்பந்தமோ அல்லது. டட்லி – செல்வா ஒப்பந்தமோ சட்டமாக்கப்பட்டு அமுல் செய்யப்பட்டிருக்குமேயானால் அவை ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள்தான் நிகழ்ந்திருக்கும்.

1972 குடியரசு அரசியலமைப்பிலும் ஒற்றையாட்சி என்ற சொற்பதம் இல்லை. ஆனால் அதுவும் சோல்பரி அரசியலமைப்பைப் போல் ஒற்றையாட்சிக் குணாம்சத்தையே கொண்டதாகும்.

1972 குடியரசு அரசியலமைப்பு உருவாக்கத்தின் போது தமிழரசுக் கட்சியினால் தமிழர் தரப்பிலிருந்து அரசாங்கத்திடம் ஆறு அம்சக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அது அரசாங்கத்தினால் கவனிக்கப்படாத நிலையில் அப்போதைய அரசியலமைப்பு நிர்ணயசபை விவாதங்களின் போது தமிழரசுக் கட்சியினால் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் யாவும் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையிலேயே அரசியலமைப்பு நிர்ணயசபையிலிருந்து தமிழரசுக் கட்சி வெளியேறியது.

1972 இல் தமிழரசுக் கட்சி அரசாங்கத்திடம் சமர்ப்பித்த ஆறு அம்சக் கோரிக்கையும் அப்போதைய அரசியல் அரசியலமைப்பு நிர்ணய சபையில் முன்மொழிந்த திருத்தங்களும் ஏற்றுக் கொள்ளப்பட்டுச் சட்டமாக்கப்பட்டிருக்குமேயானால் அவையும் ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள்தான் நிகழ்ந்திருக்கும்.

1972 குடியரசு அரசியலமைப்பைத் தொடர்ந்து அவ்வரசியலமைப்பின் நகலை யாழ் முற்றவெளியில் தீயிட்டுக் கொளுத்தித் தமிழர்களின் எதிர்ப்பை வெளியிட்ட தந்தை செல்வா அவர்கள் தமிழரசுக் கட்சியும் தமிழ்க் காங்கிரஸ் கட்சியும் இணைந்த தமிழர் கூட்டணியை உருவாக்கி அதுவே பின்னர் 1976 வட்டுக்கோட்டை மாநாட்டில் தமிழர் விடுதலைக் கூட்டணியாகித் தமிழர் தரப்பில் தனிநாட்டுக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

1977 பாராளுமன்றப் பொதுத்தேர்தலைச் சர்வஜன வாக்கெடுப்பாக எதிர்கொண்ட தமிழர் விடுதலைக் கூட்டணி தமிழீழத் தனிநாடு அமைப்பதற்கான ஆணையைத் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் உள்ளடக்கி தமிழ்மக்களிடமிருந்து ஆணை பெற்றது.

தேர்தலில் வென்ற பின்னர் அனைத்துத் தமிழர் விடுதலைக் கூட்டணிப் பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து தமிழ்த் தேசிய மன்றத்தை நிறுவித் தமிழீழத் தனிநாட்டிற்கான அரசியலமைப்பை வரைவோம் என்று தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி அளித்த தமிழர் விடுதலைக் கூட்டணி அதனைச் செய்யவில்லை.

தந்தை செல்வாவின் மறைவுக்குப் பின்னர் 1977 பாராளுமன்றப் பொதுத் தேர்தலின்போது தமிழர்விடுதலைக் கூட்டணியின் தலைவர் பொறுப்பினை மு.சிவசிதம்பரம் அவர்களும் செயலாளர் நாயகம் பொறுப்பினை அ.அமிர்தலிங்கம் அவர்களும் ஏற்றிருந்தனர்.

1977 தேர்தலில் வெற்றிபெற்று ஐ.தே.கட்சியின் தலைமையில் பிரதமராகி ஆட்சியமைத்த ஜே.ஆர் ஜெயவர்த்தனா அவர்கள் 1978 இல் குடியரசு அரசியலைமைப்பை நீக்கித் தற்போதுள்ள நிறைவேற்று ஜனாதிபதிமுறை அரசியலமைப்பை ஏற்படுத்தி அவரே இலங்கையின் முதல் நிறைவேற்று ஜனாதிபதியாகவும் பதவியேற்றார்.

இவ்வரசியலமைப்பு ஆக்கத்தில் தமிழர்விடுதலைக் கூட்டணி பங்கேற்காமல் பாராளுமன்றத்திலிருந்து வெளியேறியிருந்தது. 1978 நிறைவேற்று ஜனாதிபதி முறை அரசியலமைப்பில்தான் முதல்முறையாக ஒற்றையாட்சி என்ற பதம் எடுத்தாளப்பட்டது.

1987 யூலை 29 இல் கைச்சாத்திடப்பெற்ற இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் கீழ் நிறைவேற்றப்பட்ட 13 வது அரசியல் சட்டத்திருத்தமும் அதன்கீழ் நிறுவப்பட்ட தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடக்குகிழக்கு மாகாண சபையும் ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள்தான் நிறைவேற்றப்பட்டன.

ஆனால், இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட முன்னாள் ஜனாபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனாவினாலோ அல்லது அவருக்குப் பின்னர் நிறைவேற்று ஜனாதிபதிகளாகப் பதவிவகித்த ஆர்.பிரேமதாச, டி.பி.விஜயதுங்க, திருமதி.சந்திரிக்கா விஜயகுமாரதுங்க பண்டாரநாயக்கா, மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோரினாலோ அல்லது தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவினாலோ 13 வது அரசியல் சட்டத்திருத்தம் அர்த்தமுள்ள விதத்தில் இதுவரை முழுமையாக அமுல் செய்யப்படவில்லை. இவ் ஒப்பந்தம் முழுமையாக அமுல்செய்யப்படாமைக்குச் சிங்கள அரசாங்கங்களை மட்டும் குறைசொல்ல முடியாது.

தமிழர் தரப்பின் அரசியல் தந்திரோபாயம் அற்ற – விவேகமற்ற செயற்பாடுகளும் தமிழர் அரசியல் தலைமையினது (தமிழர்விடுதலைக் கூட்டணி) சமூகப் பொறுப்பற்ற அசமந்தங்களும் பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தம் முழுமையாக அழுல்செய்யப்படாமைக்குரிய காரணங்கள் என்பதைத் தமிழர்கள் நேர்மையாக ஒப்புக் கொள்ள வேண்டும்.

தமிழர்களுக்குச் சாதகமாகத் தென்னிலங்கை அரசியல் சூழலும் கடந்த காலங்களில் அவ்வப்போது இருக்கவில்லை. இது வேறு விடயம். ஆனால் தமிழர் தரப்பிலும் தவறிருந்தது. திருமதி.சந்திரிக்கா விஜயகுமாரதுங்க பண்டாரநாயக்கா ஜனாதிபதியாப் பதவிவகித்த கால கட்டத்தில் (1994 – 2004) தமிழர்களுக்குச் சாதகமாக இருந்த தென்னிலங்கைச் சூழலைக் கெடுத்துக் கொண்டது தமிழர் தரப்புத்தான்.

திருமதி.சந்திரிகா முன்வைத்த சமஷ்டி குணாம்சம் கொண்ட அரசியல் தீர்வுப் பொதியைக் கூட ஆதரிப்பதற்குத் தமிழர் விடுதலைக் கூட்டணி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) தவறியது. ஆனால் இன்று எல்லோரும் கூறுகின்ற நல்லாட்சி| அரசியல் சூழலில் இப்போது அரசியல் அரங்கில் பேசு பொருளாக இருக்கின்ற உத்தேச புதிய அரசியலமைப்பு பற்றிக் கவனம் செலுத்துகின்ற சமகாலத்தில் உத்தேச புதிய அரசியலமைப்புவரை காத்திராமல் பதின்மூன்றாவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தினை முழுமையாக அமுல் செய்வதற்கான அரசியல் மற்றும் இராஜதந்திர அழுத்தங்களைத் தற்போதைய தமிழர் அரசியல் தலைமையான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்குக் கொடுக்க வேண்டும்.

ஏனெனில், இலங்கை அரசியல் வரலாற்றில் இனப்பிரச்சினைக்கான தீர்வுகளாகப் பேசப்பட்ட ஐம்பதுக்கு ஐம்பது கோரிக்கையோ அல்லது பண்டா – செல்வா ஒப்பந்தமோ அல்லது டட்லி – செல்வா ஒப்பந்தமோ அல்லது 2000களில் சந்திரிகா விஜயகுமாரதுங்க பண்டாரநாயக்காவினால் முன்மொழியப்பட்ட அரசியல் தீர்வுப் பொதியோ, இவையெல்லாம் வெறும் ஏட்டுச்சுரைக்காயாக அமைந்தனவே தவிர அவை சட்டவடிவமாக்கப்பட்டு அமுல்செய்யப்படவில்லை.

இதுவரை சட்டவடிவமாக்கப்பட்ட ஒரேயொரு ஒப்பந்தம் இலங்கை – இந்திய சமாதான ஒப்பந்தம்தான் என்பதையும் தமிழர்கள் நேர்மையோடு ஒப்புக்கொள்ள வேண்டும். துரதிஸ்டவசமான விடயம் என்னவெனில் தமிழர்தம் அரசியல் தலைமையாக அங்கீகரிக்கபட்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது பதின்மூன்றாவது அரசியலமைப்புச் சட்டத்திருத்த அமுலாக்கல் குறித்து எப்போதும் அடக்கியே வாசிக்கிறது, அல்லது அதுபற்றிப் பேசுவதேயில்லை.

நாம் விரும்புவது வேறு: யதார்தம் வேறு. நாளை வரும் பலாக்காயிலும் இன்று கையிலுள்ள கிளாக்காய் நன்று. பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தை முற்றாகப் புறந்தள்ளிவிட்டு வேறொரு அரசியல் தீர்வுத் திட்டத்தினை அடைவது நடைமுறைச் சாத்தியமில்லை. இறைச்சி சாப்பிட்டதைக் காட்டுவதற்காக எலும்புகளைக் கோர்த்து மாலையாக அணிய வேண்டுமென்பதில்லை.

தேசம், தாயகம், சுயநிர்ணய உரிமை போன்ற கோட்பாடுகளைக் கோஷங்களாக முன்வைப்பதை விடவும் அவற்றை அடைவதற்கான அறிவுபூர்வமான அரசியல் நகர்வுளை மேற்கொள்வதே அவசியமானது.

இந்திய அரசியலமைப்பில் சமஸ்டி  என்ற வார்த்தைப் பிரயோகம் இல்லை. ஆனால் அது சமஸ்டிக் குணாம்சத்தைக் கொண்டது. எனவே ஒன்றையாட்சியா? சமஸ்டியா? என்பதை விட வடகிழக்குத் தமிழர்களின் தாயகம் பிரிக்கப்படாத ஒரு அதிகாரப் பகிர்வு அலகும் அதாவது ஒரு மொழிவாரி மாகாணமும் அவ்வலகுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் அதிகாரங்களுமே முக்கியமானவை. அண்மையில் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தின் முழுமையான அமுலாக்கலையே வலியுறுத்துகிறது.

தற்போது நடைமுறையில் உள்ள பதின்மூன்றாவது சட்டத் திருத்தத்திலுள்ள குறைபாடுகள் உத்தேச புதிய அரசியல் அமைப்பில் நிவர்த்தி செய்யப்படுதல் வேண்டும். எனவே பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தை அடிப்படையாகக் கொண்டு அதிகாரப் பகிர்வின் அடுத்த கட்டத்திற்குச் செல்வதே இன்றுள்ள தென்னிலங்கை – இந்து சமுத்திரப் பிராந்திய மற்றும் பூகோள அரசியல் சூழ் நிலையில் அறிவுபூர்வமானது.

கோவணம் உருவப்பட்டுக் கொண்டிருக்கும் போது பட்டு வேட்டிக்குக் கனவு காண்பது அறிவுபூர்வமானதல்ல. உத்தேச புதிய அரசியலமைப்பு மூலம் தமிழர்களுக்கு மீட்சி கிடைக்கும் என்று அதீத நம்பிக்கை கொள்வதை விட தற்போது கையிலிருக்கின்ற பதின்மூன்றாவது அரசியல் சட்டத் திருத்தத்தினை முழுமையாக அமுல் செய்வதற்கான அரசியலே தமிழர்களின் உடனடித் தேவையாகும்.

இதனுடைய அர்த்தம் உத்தேச புதிய அரசியல் அமைப்புச் சட்ட உருவாக்கத்தில் தமிழர்கள் பங்கேற்கக் கூடாது என்பதல்ல. ஆனால் அந்தப் பங்கேற்பு இருப்பதையும் இழந்து விடுகின்ற துர்ப்பாக்கிய சூழலொன்றினைத் தோற்றுவிக்காதபடி தமிழர் தரப்பு கவனமாக அரசியலைக் கையாள வேண்டும்.

சமஸ்டி என்றால் சிங்களவர்கள் வெறுப்புக் கொள்கிறார்கள்: ஒற்றையாட்சி என்றால் தமிழர்களுக்குக் கசக்கிறது” என்ற ஜனாதிபதி அவர்களின் அண்மைய கூற்றின் யதார்த்தம் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

கடந்த காலங்களைப் போன்று தமிழர் அரசியலில் சிலுசிலுப்பு வேண்டாம்.  இனிமேல் எமக்குப் பலகாரமே வேண்டும் இதற்கு உடனடியாகத் தமிழர் அரசியலில் தேவைப்படுவது தமிழர்களுக்கானதோர் ஐக்கியப்பட்ட அரசியல் பொறிமுறையாகும் என்பதையும் இப்பத்தி வலியுறுத்த விரும்புகின்றது.

உத்தேச புதிய அரசியலமைப்பு உருவாகி அது நிறைவேற்றப்படும்வரை காத்திருக்காமல் உடனடியாக பதின்மூன்றாவது அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை அர்த்தமுள்ள விதத்தில் முழுமையாக அமுல் செய்வதற்கான அரசியல் அழுத்தங்களை இந்திய இலங்கை சமாதான ஒப்பந்தத்தின் கைசாத்திகளான இலங்கை அரசாங்கத்தின் மீதும் இந்திய அரசாங்கத்தின் மீதும் செலுத்துவதற்கு மேற்குறிப்பிட்ட ஐக்கியப்பட்ட அரசியல் பொறிமுறை தமிழர்களுக்கு அவசியமாகும்.

 -தம்பியப்பா கோபாலகிருஸ்ணன் 

[email protected] 

-http://www.tamilwin.com

TAGS: