ஒப்பந்தங்களை கிழித்தெறிவதும், உடன்படிக்கைகளை மீறுவதும், வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிடுவதும் சிங்கள அரசுகளின் தேசிய குணங்களாகவே மாறிப்போய்விட்டன என்பதனை நல்லாட்சி அரசின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா ஆகியோரும் நிரூபித்துள்ளனர் என அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவை வருமாறு,
இலங்கை இராணுவத்தினராலும் அவர்களின் ஆதரவுடன் இயங்கிய துணை ஆயுதக்குழுவினராலும் கைது செய்யப்பட்டும் கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் இளைஞர் யுவதிகளின் குடும்பத்தினர் இருக்கிறார்களா இல்லையா என்ற பரிதவிப்புடனேயே அவர்களின் விடுதலைக்காக போராடிவருகின்றார்கள்.
இந்நிலையில் அவர்களின் நெஞ்சில் இடிவிழுவது போல் ரணில் விக்ரமசிங்க பேசியிருப்பது தமிழர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.
காணமல் போனோர் தொடர்பாக இதுவரை இருபதாயிரத்திற்கு மேற்பட்ட முறைப்பாடுகள் பல்வேறு காலகட்டத்தில் செய்யப்பட்டுள்ள போதிலும் இவற்றில் ஒன்றிற்கேனும் இதுவரை உரிய தீர்வு காணப்படவில்லை.
2009 மே 18 இற்கு முன்னர் தமிழ் இளைஞர் யுவதிகள் கைது, கடத்தல்கள் மூலம் காணாமலாக்கப்பட்ட சூழ்நிலையில் இறுதிப் போரின் போதும் அதன்பின்னரும் இராணுவத்திடம் குடும்பத்தவர்கள் முன்னிலையில் ஒப்படைப்பு செய்யப்பட்டவர்கள் மற்றும் புலிகள் என்ற பொய்க் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு காணாமலாக்கப்பட்டுள்ளவர்களென பல்லாயிரம்பேரின் கதிகுறித்து பதிலுரைக்க வேண்டியது சிங்கள அரசின் கடமையாகும்.
இந்நிலையில், தேசிய பொங்கல் விழாவில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்த ரணில் விக்கிரமசிங்க, யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற கலை நிகழ்வுகளில் கலந்து கொண்டு உரையாற்றும் போது காணாமல் போனவர்களில் அதிகாமானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என கூறியிருப்பதானது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
பல ஆண்டுகளாக முடிவின்றித் தொடரும் காணாமல் போனோரின் விவகாரத்தை முடித்து வைப்பதுதான் நோக்கமாயின் அவர்களுக்கு மரணம் சம்பவித்த சந்தர்ப்பத்தினையும் அதற்கு காரணமானவர்கள் குறித்தும் வெளிப்படுத்தி குற்றவாளிகள் தண்டிக்கபடுவதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதுமே உரிய வழிமுறையாகும்.
ரணில் விக்கிரமசிங்கவின் பேச்சானது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியதாக இருந்க்கின்றதென்றால் மைத்திரிபால சிறிசேனாவின் பேச்சு சிங்கள ஆட்சி அதிகாரத்தின் கீழ் தமிழர்களுக்கு நீதி கிடைக்கப்போவதில்லை என்பதனை மீண்டும் ஒருதடவை இடித்துரைத்துள்ளது.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்ற விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இடமில்லை. அது குறித்த விசாரணைகள் முற்றிலும் உள்நாட்டு விசாரணையாகவே அமையும்.
இலங்கை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு வெளிநாட்டு நிபுணர்கள் தேவையில்லை. வெளிநாட்டு நீதிபதிகளைக் கொண்டுவரவும் ஒருபோதும் இணங்க மாட்டேன். எமது நாட்டு நீதித்துறையில் எமக்கு நம்பிக்கையுள்ளது. வெளிநாடுகளில் அரசியலமைப்பு மனித உரிமைகள் போன்ற பல்வேறு துறைகளில் நிபுணர்களாக இருக்கும் இலங்கையர்களை விசாரணைக்காக வரவழைக்கலாம்.
இவ்விடயத்திலும் சர்வதேச தலையீட்டுக்கு ஒரு போதும் இணங்கப்போவதில்லை. இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா லண்டன் பி.பி.சி. வானொலிக்கு அண்மையில் வழங்கிய நேர்காணலில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் கடந்த அமர்வில் நிறைவேற்றப்பட்ட இலங்கையில் நடைபெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான விசாரணையில் கொமன்வெல்த் நாடுகள் உள்ளிட்ட வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் நிபுணர்களைச் சேர்த்துக்கொள்ள வேண்டும்,
என்பன உள்ளிட்ட தீர்மானத்திற்கு இணை அனுசரனை வழங்கியதுடன் அதனை ஏற்றுக்கொண்டு முழுமையாக நடைமுறைப்படுத்துவதாக சர்வதேச சமூகத்தின் முன்பாக உறுதிமொழி வழங்கியிருந்த நிலையில் மைத்திரியின் இப்பேச்சானது வழக்கமான சிங்களத் தலைமையின் இயல்பினை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.
தமிழர்களுக்கு எதிராக நடைபெற்றுள்ள மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் உள்ளடங்கலான இனப்படுகொலைக் குற்றங்களுக்கு மூல காரணமாக விளங்கும் சிங்கள அரசுகளின் விட்டுக்கொடாத கடும்போக்கும் நாணயமற்ற அரசியல் அணுகுமுறைகளும் இனவழிப்பு போர் காலத்தைப் போன்று இன்றும் தொடர்வதற்கு சர்வதேச சமூகத்தினது பொருளாராதார இராணுவ உதவிகளும் அரசியல் தார்மீக ஆதரவும் இராஜதந்திர முண்டுகொடுப்புக்களும் ஒரு பக்கச்சார்பான தலையீடுகளும் தொடர்வதே காரணமாகும்.
இந்துமகா சமுத்திரத்தின் மையப்புள்ளியில் இலங்கைத்தீவு அமைந்துள்ள காரணத்தினால் இயற்கையாக அமையப்பெற்ற கேந்திர முக்கியத்துவமும் உலக நாடுகளின் இராணுவ பொருளாதார கேந்திர நலன்களும் ஒரே புள்ளியில் இணைந்திருப்பதை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயற்சித்துவரும் இலங்கை ஆட்சியாளர்கள் பொய்யான வாக்குறுதிகள் மூலம் அனைத்துலக ஆதரவினை தக்கவைப்பதுடன் நின்றுவிடாது அவர்களை தமிழர்களின் தேசிய அபிலாசைக்கு எதிராகத் திருப்பிவிடும் கைங்கரியத்திலும் ஈடுபட்டுவருகின்றனர்.
சிங்களத்தின் இரட்டை வேடமும் சர்வதேச சமூகத்தின் பாராமுகமும் தொடர்வதற்கான ஏது நிலையினை தமிழ் அரசியல் தலைமைகளின் கையாலாகத்தனமே ஏற்படுத்தியுள்ளது. தாயகம் தேசியம் தன்னாட்சி உரிமை ஆகிய தமிழர்களின் மூலாதாரக் கோட்பாட்டின் அடிப்படையிலான தீர்விற்கு மாற்றான ஒரு தீர்வை இணக்க அரசியலின் பெயரால் தாயகத் தமிழ் அரசியல் தலைமையும் சில புலம்பெயர் தலைமைகளும் ஏற்கத்தயாராகியுள்ளமையே தமிழர்களின் தேசிய அபிலாசைகள் குழிதோண்டிப் புதைக்கபடும் ஏது நிலையினை ஏற்படுத்தியிருக்கின்றது.
தமிழர் தரப்பை பலவீனப்படுத்தி எமது தேசிய அபிலாசைகளை குழிதோண்டிப் புதைப்பதற்கும் அனைத்துலக சமூகத்தை ஏமாற்றுவதிலுமே ரணில்-மைத்திரி அரசு அதீதகவனம் செலுத்திவருகின்றது.
அரசியல், பொருளாதார, கேந்திர நலன்களுக்காக சர்வதேசம் ஏமாந்து போவதற்கோ அல்லது ஏமாந்து போவதாக காட்டிக்கொள்வதற்கோ தயாராக இருக்கலாம். ஆனால் இழப்பதற்கோ விட்டுக்கொடுப்பதற்கோ எதுவுமே மிச்சம்மீதியில்லாத கையறு நிலையில் நின்றுகொண்டிருக்கும் பாதிப்பிற்குள்ளாகியிருக்கும் தரப்பாகிய நாம் எதிர்பார்ப்பது இழைக்கப்பட்ட அநீதிக்கான நீதியாகும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-http://www.tamilwin.com