கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போரில் அதிகளவான போர்க்குற்றங்களை செய்து ஈழத் தமிழ் மக்களை கொன்றொழித்தவர்கள் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என அமெரிக்க வழக்கறிஞர் ப்ரூஸ் ஃபெயின் இந்திய ஊடகம் ஒன்றுக்கு குறிப்பிட்டிருந்தார்.
உள்நாட்டுப் போர் உக்கிரமடைந்த காலகட்டமான 2009ல் இலங்கையில் அதிக மனிதவுரிமை மீறல்கள் இடப்பெற்றன. இது மிகவும் காட்டுமிராண்டித்தனமான செயல் என அவர், 2009ம் ஆண்டு இந்திய ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அவர் அந்த நேர்காணலில், முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபய ராஜபக்சவையும், முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவையும் கடுமையாக சாடியிருந்தார்.
இவர்கள் இருவரும் அமெரிக்காவின் நிரந்த வாழ்வுரிமை வாங்கியவர்கள். அதாவது கிரீன் காட் வைத்திருப்பவர்கள்.
இந்நிலையில் இரண்டு அமெரிக்கப் பிரஜைகள் இன்னொரு நாட்டில் மிக முக்கியமான பதவிகளில் உட்கார்ந்துகொண்டு கொடுமைகளைச் செய்துவருவது அமெரிக்க நாட்டுச் சட்டப்படி குற்றம் என குறிப்பிட்டிருந்ததுடன் அவர்கள் இருவரையும் சட்டத்தின் முன் நிறுத்தும் வேலைகளில் இறங்கியிருக்கிறேன் என்றும் குறித்த நேர்காணலில் (2009ம் ஆண்டு) அவர் தெரிவித்திருந்தார்.
ஆனால் வழமை போலவே ஈழத்தமிழர் விடயத்தில் நடந்தவை தான் இங்கும் நிகழ்ந்தது. நேர்காணல்கள், அறிக்கைகள் என்பவற்றோடு எல்லா செயற்பாடுகளும் நின்றுவிடுவது வழமையாகிவிட்டது. வழக்கறிஞர் தெரிவித்தவாறு இனப்படுகொலைக்கு முக்கியஸ்தர்களாக இருந்த அமெரிக்க பிராஜாவுரிமை பெற்ற இருவர்களையும் அமெரிக்க சட்டத்தின் முன் நிறுத்துவேன் என்ற கருத்து என்னவாகியது.
எனினும் குறித்த சட்டத்தரணி, வெளிப்படையாகவே உண்மைகளை வெளிப்படுத்தியிருந்தார். இரட்டைக் குடியுரிமை பெற்றிருந்த கோத்தபாய ராஜபக்சவும், சரத் பொன்சேகாவும், போர் நடந்த காலத்திலும், போர் முடிவுற்ற காலத்திலும், இன்றுவரை அமெரிக்கப் பிரஜைகளாகவே காணப்படுகின்றார்கள்.
அவர்கள் அமெரிக்க குடியுரிமையை இன்னமும் ரத்துச் செய்யவில்லை. இந்நிலையில், இலங்கையின் போர்க்குற்றம் பற்றிப் பேசும் அமெரிக்கா, இதுவரை தனது நாட்டு பிரஜைகள் மீது நடவடிக்கைகளோ, அது பற்றியதான விளக்கங்களோ அவர்களிடம் கோராமல் விட்டது ஏன் என அரசியல் அவதானிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதேவேளை, சர்வதேச விசாரணையை உள்நாட்டு விசாரணையாக்குவதற்கு ஆதரவு தெரிவித்து மைத்திரிக்கு அமெரிக்கா உதவியது. ஆனால் மைத்திரி இராணுவத்தினர் தண்டிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்று அறிவித்திருக்கிறார்.
இராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது எனில், இராணுவத் தளபதியாக இருந்த அமெரிக்கரான சரத் பொன்சேகா மீதும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய மீதும் நடவடிக்கை எடுப்பார் என நம்ப முடியாது என கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், இலங்கையில் இனப்படுகொலையை செய்ததில் அமெரிக்காவின் பங்கு உண்டு. அது கோத்தபாய, சரத்பொன்சேகா வடிவில் நேரடியாகவே களத்தில் நின்றுள்ளது. இதனை ப்ரூஸ் ஃபெயின் தெளிவாக 2009ம் ஆண்டு தன்னுடைய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் யுத்தம் முடிந்து ஆறு ஆண்டுகள் கழிந்துள்ள நிலையில் அமெரிக்கா தன்னுடைய பிரஜைகள் மீது எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. இது வருந்ததக்க விடயம் என மனிதவுரிமை ஆர்வலர்கள் கவலை வெளியிட்டுள்ளார்கள்.
-http://www.tamilwin.com