அரசாங்கத்தை நம்பி சர்வதேசத்தை கை விட்டால், 2016ம் ஆண்டில் அல்ல இந்த யுகத்திலும் தமிழருக்குத் தீர்வு கிடையாது. என்பதே உண்மை.
அரசனை நம்பி புருசனைக் கைவிடல் என்றொரு பழமொழி நம் தமிழ்மொழியில் உண்டு. அரசன் என்ற சொற்பதம் திரிபடைந்ததால் ஏற்பட்டதாகும். உண்மையில் அரசனை என்பது அரசை என்பதாக இடம்பெற்றிருக்க வேண்டும்.
முன்னைய காலத்தில் பிள்ளை இல்லாத பெண்கள், அரச மரத்தைப் பலமுறை சுற்றி வந்து வழிபாடு செய்தால் பிள்ளை வரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவ்வாறானதொரு நடைமுறையைப் பின்பற்றி வந்தனர்.
அரச மரத்தைச் சுற்றி வந்தால் பிள்ளைவரம் கிடைக்கும் என்று நம்பி புருசனைக் கைவிட்டு விடாதீர்கள். அரச மரத்தை சுற்றுவதோடு புருசனையும் கை விடாமல் இருக்க வேண்டும் என்பது அந்தப் பழமொழியின் தத்துவம்.
ஆக, அரச மரத்தை மட்டும் நம்பி, கட்டிய புருசனைக் கைவிட்டால் எல்லாம் அம்போதான் என்பதை விளக்குவதற்காக இப்பழமொழி நம் தமிழ் மொழியில் இடம்பெற்றுள்ளது.
இது ஒருபுறம் இருக்க, எங்கள் இனப்பிரச்சினை தொடர்பிலும் மேற்குறிப்பிட்ட பழமொழியை நாம் ஒப்பிட்டு நோக்குதல் பொருத்துடையதாகும்.
அதாவது எங்களின் பிரச்சினைக்கான தீர்வை இலங்கை அரசாங்கம் தானாக முன்வந்து ஒரு போதும் தந்துவிடப்போவதில்லை என்பது நிறுத் திட்டமான உண்மை.
அப்படியானதொரு சூழ்நிலைக்கு சிங்கள அரசியல் தலைவர்களும் சிங்கள மக்களும் இன்னும் தயாராகவில்லை.
எனவே இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒன்று எட்டப்பட வேண்டுமாக இருந்தால் சர்வதேச சமூகத்தால் மட்டுமே அது சாத்தியமாகும்.
அதாவது சர்வதேச சமூகம் இலங்கை அரசு மீது செலுத்துகின்ற அழுத்தமே தமிழ் மக்களுக்கான உரிமையைப் பெற்றுத் தரக்கூடியது.
எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைவர் இரா.சம்பந்தனும் இலங்கை அரசுடன் நெருங்கி, ஒற்றுமைப்பட்டு, இணங்கிப் போவதன் மூலம் இனப்பிரச்சினைக்குத் தீர்வை எட்ட முடியும் என நம்பியுள்ளனர்.
இந்த நம்பிக்கை, பிள்ளைவரம் கிடைக்கும் என்று நம்பி அரச மரத்தைச் சுற்றி வருவதற்கு ஒப்பானதாகும்.
இங்கு அரசாங்கத்தை நம்புவது தவறு என்று கூறுவது நம் நோக்கமல்ல. அரசாங்கத்தை நம்புவதென்பது அரசின் செயற்பாட்டில் இருந்து ஏற்பட வேண்டும் என்பதே நம் தாழ்மையான கருத்து.
மாறாக, கூட்டமைப்புக்குள் இருக்கக்கூடிய ஒரு சிலரை தமக்குச் சார்பாக்கிக் கொண்டு அவர்கள் மூலமாக அரசாங்கத்தை நம்ப வைத்து சர்வதேசத்தை கைவிடுகின்ற அளவில் நிலைமையை மாற்றி அமைக்கின்ற அரசாங்கத்தின் செயற்பாட்டை சூழ்ச்சி என்றுணராமல், நல்லாட்சி என்று நினைத்தால் வில்லங்கத்தை நாமே விலைக்கு வாங்குவதாக நிலைமை முடியும்.
எனவே சர்வதேசத்தைக் கைவிடாமல்; சர்வதேசத்தின் ஒத்துழைப்போடு; அதன் மேற்பார்வையில்; அனுசரணையில்; மத்தியஸ்தத்துடன் தீர்வைக் காணவேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கும் போது தான் எங்கள் இலக்கை அடைய முடியும்.
இதைவிடுத்து தமிழ் மக்களின் வாழ்விடங்களை இன்னமும் விட்டுக் கொடுக்கத் தயங்கும்; தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க விருப்பம் இல்லாமல் இருக்கும்; காணாமல் போனவர்களில் பெரும்பாலானவர்கள் இறந்து விட்டனர் என்று சர்வ சாதாரணமாகக் கூறிவிடுகின்ற மனநிலையை உடைய அரசாங்கத்தை நம்பி சர்வதேசத்தை கைவிட்டால், 2016ம் ஆண்டில் அல்ல இந்த யுகத்திலும் தமிழருக்குத் தீர்வு கிடையாது என்பதே உண்மை.
-http://www.tamilwin.com

























