ஐ.நா. ஆணையாளர் அல்–ஹுசைனின் விஜயம் குறித்து அரசாங்கம் கருத்து!

rajitha-01ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைனின் வடக்கு விஜயத்தின் போது தற்போதைய நல்லாட்சியின் உண்மை நிலைமைகளை அவரால் உணர முடியும் என நம்புகின்றோம். , கடந்த கால ஆட்சியாளர்கள் மறைத்த பல யதார்த்த பூர்வமான விடயங்களை அவரால் உணரமுடியும் என அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அவரது வருகையானது இலங்கையின் உள்ளக விசாரணை பொறிமுறையை மேலும் பலப்படுத்துவதுடன் சர்வதேச ஒத்துழைப்பை உறுதிப்படுத்தும் வகையில் அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இன்று இலங்கை வருவதுடன் அரசதரப்பு மற்றும் தமிழர் தரப்பை சந்திக்கவுள்ளார். இது தொடர்பில் வினவியபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வது வரவேற்கத்தக்க விடயமாகும். அவரின் வருகையை இலங்கை அரசாங்கம் வரவேற்கின்றது. குறிப்பாக இலங்கை அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே அவர் இலங்கைக்கு வருகை தருகின்றார்.

அதேபோல் இந்த நல்லாட்சி அரசாங்கம் எவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளது என்பதை அவர் நேரடியாக பார்வையிடுவதை நல்லதொரு விடயமாகவே கருதுகிறோம். அவரது விஜயம் தொடர்பில் அனைத்து தரப்பு பாதுகாப்பு மற்றும் ஏனைய ஏற்பாடுகளை அரசாங்கம் பூர்த்தி செய்துள்ளது.

அதேபோல் வடக்கு விஜயத்தின் போது தற்போதைய நல்லாட்சியின் நிலைமைகளை அவரால் உணர முடியும் என நாம் நம்புகிறோம். வெறுமனே அபிவிருத்திகளை மாத்திரம் காட்டிவிட்டு ஏமாற்றாது கடந்த கால ஆட்சியாளர்கள் மறைத்த பல யதார்த்த பூர்வமான விடயங்களை அவரால் இம்முறை பார்வையிட முடியும்.

வடக்கின் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பிலும் அவரால் தெளிவான நிலைப்பாட்டை எட்ட முடியும் என நம்புகின்றோம். எனினும் இப்போது அவரது வருகையானது இலங்கையின் உள்ளக விசாரணை பொறிமுறையை தவிர்த்து சர்வதேச விசாரணையை பலப்படுத்தும் வகையிலும், எமது இராணுவ வீரர்களை தண்டிக்கும் வகையிலும் அமைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.

ஆனால் இந்த கருத்துக்களில் எந்த உண்மையும் இல்லை. அவரின் வருகை அழுத்தம் கொடுக்கும் வகையில் அமையவில்லை. அதேபோல் இலங்கையின் உள்ளக பொறிமுறையை பலப்படுத்தி அதற்கான சர்வதேச ஒத்துழைப்புகளை வழங்கும் வகையில் தான் அவரின் வருகை அமைந்துள்ளது.

மேலும் இலங்கை உள்ளக விசாரணை பொறிமுறைகளை கையாண்டாலும் எமக்கு சர்வதேச ஒத்துழைப்பு அவசியமாகின்றது. சர்வதேசத்தை திருப்திப்படுத்தவும் இலங்கை இராணுவத்தின் மீதான அவப்பெயரை நீக்கவும் எமக்கு கிடைத்துள்ள இறுதி சந்தர்ப்பம் இதுவாகும்.

ஆகவே இந்த சந்தர்ப்பத்தை நாம் தவறவிடாது சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கான ஒரு முயற்சியாக இதை பயன்படுத்த அரசாங்கம் முயற்சிக்கும்.

மேலும் இராணுவம் வசம் உள்ள காணிகளை விடுவித்துள்ளமை, மீள்குடியேற்ற நடவடிக்கைகள் மற்றும் அரசியல் அமைப்பு ரீதியில் அரசியல் பிரச்சினைக்கான தீர்வு என்ற விடயங்கள். என்பன தொடர்பில் ஜனாதிபதி , பிரதமர் மற்றும் அரசதரப்பு சந்திப்பின்போது கலந்தாலோசிக்கப்படும்.

அதேபோல் காணாமல்போனோர் மற்றும் பாதிக்கப்பட்டோர் தொடர்பிலும் அதிக முக்கியத்துவம் கொடுத்து எதிர்காலத்தில் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் நடவடிக்கைகளை முன்னெடுப்போம்.

தமிழ் மக்களின் நீண்டகால பிரச்சினைகள் என்னவென்பது நல்லாட்சி அரசாங்கத்திற்கு நன்றாகவே தெரியும். அவர்களின் இடங்கள் அபகரித்தமை, சட்டவிரோதமாக அல்லது அநாவசியமாக கைது செய்தல், அவர்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதில் உள்ள தடைகள் என்பனவற்றையே தமிழ் மக்கள் நீண்டகால பிரச்சினைகளாக அனுபவித்து வருகின்றனர்.

இந்த விடயங்களை கடந்த காலத்தில் அரசாங்கம் சரியாக செய்து கொடுக்காத காரணத்தினால் தான் சர்வதேச தரப்பின் மீது நம்பிக்கை கொண்டு செயற்பட்டு வருகின்றனர். இதில் குறைகூறும் வகையில் எதுவும் இல்லை.

அதேபோல் போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் நீதிமன்ற சுயாதீன செயற்பாடுகளுக்கென விசேட சட்டமூலம் ஒன்றையும் இந்த ஆண்டு நடுப்பகுதிக்குள் கொண்டுவர தீர்மானித்துள்ளோம்.

ஆகவே போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பில் அரசாங்கம் தெளிவாக தமது நகர்வுகளை முன்னெடுத்து வருகின்றது.

அரசியல் பிரச்சினை மற்றும் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் புதிய அரசியல் அமைப்பு அமையும். நீண்டகால பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உள்ளோம் என்றார்.

-http://www.tamilwin.com

TAGS: